புரசைவாக்கம், கங்காதீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில், கம்பீரமான கோபுரத்துடனும் அழகிய பிராகாரங்களுடனும் அமைந்திருக்கிறது.
இறைவன் : கங்காதரேஸ்வரர்
இறைவி : பங்கஜாம்பாள்
தல விருட்சம் : புரசு மரம்
தல தீர்த்தம் : கங்கா தீர்த்தம்
தலச் சிறப்புகள் : காசிக்கு நிகரான தலம். கிழக்கு நோக்கிய கருவறையில் இலிங்க வடிவில் கங்காதரேசுவரர் உள்ளார். தெற்கு நோக்கிய கருவறையில் பங்கஜாம்பாள் நின்ற நிலையில் உள்ளார். உற்சவர் மண்டபத்தில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. சுமார் ஐம்பது அடி உயரம் கொண்ட சிவபெருமானின் சுதையாலான சிற்பம் இக்கோயிலுக்கு தனித்துவமாக அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு கீழே லிங்கத் திருமேனிக்கு பகீரதன் பூஜை செய்வது போல அமைந்துள்ளது.
தல வரலாறு : புராதன புராணப் பெருமைகள் கொண்ட இந்த ஆலயத்தை, இக்ஷ்வாகு வம்சத்துடன் தொடர்பு கொண்ட தலம் என்று போற்றுகிறார்கள். ரகு குலம் என்று புராணங்கள் போற்றும் இந்த வம்சத்தில்தான் ஸ்ரீராமனும் அவதரித்தார். அவருடைய முன்னோர்களில் ஒருவர் சகரன். ஒருமுறை, இவர் மிக பிரமாண்டமாக அசுவமேத யாகத்தைத் தொடங்கினார். இதனால் அச்சமுற்ற இந்திரன், யாகத்தின் இறுதிநாளன்று யாகக் குதிரையைக் கவர்ந்து சென்று, கபில முனிவரின் ஆசிரமத்தின் அருகில் கட்டிவிட்டுச் சென்றான். குதிரையைக் காணாமல் திகைத்த சகரன், அதைக் கண்டுபிடித்து வருமாறு தன் 60,000 புதல்வர்களையும் அனுப்பி வைத்தார். அப்படி, குதிரையைத் தேடியலைந்த சகர மைந்தர்கள், கபிலரின் ஆஸ்ரமத்தில் குதிரையை கண்டனர். அங்கே அவர்களின் செயல்பாடுகளால், கபில முனிவரின் தவம் கலைந்தது. இதில் கோபமுற்ற கபில முனி, அவர்களை சபித்தார். அதன் விளைவாக சகர மைந்தர்கள் எரிந்து சாம்பலானர்கள்.
சகரனின் வம்சத்தில் பகீரதன் தோன்றினார். சிறந்த சிவபக்தரான பகீரதன், தன் முன்னோரை கடைத்தேற்ற விரும்பினார். முன்னோர் நற்கதி அடைந்தது கண்ட பகீரதன் நெகிழ்ந்தார். அதன் தொடர்ச்சியாக ஆலயம் அமைத்து சிவனாரை வழிபட்டார். அவ்வாறு அவர் வழிபட்ட தலமே, புரசைவாக்கம் ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயில். அதாவது, தன் அழகில் கர்வம் கொண்ட பகீரதன், தன்னைச் சந்திக்க வந்த நாரதரை அவமதிக்க, அதில் ஆத்திரம் கொண்ட நாரதர், தோல் வியாதியில் அவதிப்படும் படி பகீரதனுக்கு சாபமிட்டார். தன் தவற்றை உணர்ந்த பகீரதன், நாரதரிடம் மன்னிப்புக் கேட்க, '108 சிவலிங்கங்களை 108 இடங்களில் பிரதிஷ்டை செய்து வழிபடு. விமோசனம் பெறுவாய்’ என நாரதர் வழிகாட்டினார். அதன்படியே 107 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் பகீரதன்; 108வது இடம் தேடி அலையும்போது, சிவனாரே கனவில் வந்து, புரசை வனத்தில் பிரதிஷ்டை செய்ய அருளினார். அதன்படி, அங்கே பகீரதனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்றளவும் அனைவராலும் வணங்கப்படுகிறார் புரசைவாக்கம் ஸ்ரீகங்காதீஸ்வரர். இங்கே உள்ள கிணற்றில், கங்கையே வாசம் செய்வதாக ஐதீகம். கோயிலின் சாந்நித்தியத்தை உணர்ந்த இரண்டாம் குலோத்துங்க சோழன், கோயிலைப் புதுப்பித்து, திருப்பணிகளுக்கு ஏராளமான நிதிகளை வழங்கினான்.
கி.பி.15-ஆம் நூற்றாண்டு விஜயநகரர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து புலியூர் நாட்டுத் திருவான்மியூரில் உள்ள உலகாளுடைய நாயனாருக்கு விளக்கு எரிப்பதற்காக நீலகங்கரையன் என்பான் கொடையளித்துள்ளான். இக்கல்வெட்டு இக்கோயிலில் ஒரு கல்லில் உள்ளது. கங்காதரேசுவரர் கோயில் முதற் சுற்றில் உள்ள ஒரு கல்லில் காணப்படும் கல்வெட்டொன்று ஸ்ரீவீரப்பிரதாப தேவராய மகா இராயர் என்ற பெயரைக் கொண்டுள்ளது. பிற தகவல்கள் சிதைந்துள்ளன. இக்கோயிலில் காணப்படும் கல்லில் உள்ள மற்றொரு கல்வெட்டு, ஆயர்களில் ஒருவரான கொங்கோன் அழகப்பெருமாள் என்பவரை கோயிலுக்கு நித்தம் திருவிளக்கு ஏற்றுவதற்காகக் குடி அமர்த்தப்பட்டதைக் குறிப்பிடுகிறது. இக்கோயில் கருவறையின் வடபுறத்தில் உள்ள மற்றொரு கல்வெட்டு முழுமையான செய்தியை பெற்றிருக்கவில்லை.
600 ஆண்டுகள் பழமையானது. விஜயநகரர் கால கலைப்பாணியைப் பெற்றுள்ளது. கங்காதரேசுவரர் திருக்கோயில் பிற்காலச் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. ஆனால் கல்வெட்டுகள் விசயநகரர் காலத்திலிருந்தே கிடைக்கின்றன. தற்போது இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. பழமையான கட்டடக்கலையின் எச்சங்கள் எதுவும் காணக்கிடைக்கவில்லை. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் பெரிய திருக்குளத்தைக் கொண்டுள்ளது. சிற்பங்களும் கோயில் புனரமைப்பின் போது நிர்மாணிக்கப்பட்டவையாகவே உள்ளன.
கோயிலின் அமைப்பு : கிழக்கு நோக்கியதாக இராஜகோபுரம் அமைந்துள்ளது. கோயிலின் முதல் திருச்சுற்றின் சுவர்களில் சுதையாலான சிவபுராணச் செய்திகள் சிற்பங்களாக இடம் பெற்றுள்ளன. மேலும் இச்சுற்றில் பாணலிங்கம், நவக்கிரகம், விநாயகர், சுப்ரமணியர், வைத்தீசுவரர் ஆகிய தெய்வங்களுக்கான தனி சிறு கோயில்கள் அமைந்துள்ளன. கிழக்கில் இறைவன் கருவறைக்கான கொடிமரம், பலிபீடம் மற்றும் நந்தி அமைக்கப்பட்டுள்ளன. தென்புறத்தில் கொடிமரம், பலிபீடம், சிம்ம வாகனம் ஆகியன அம்மன் கருவறைக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளன. தென்புறத்தில் ஒரு நுழைவாயில் உள்ளது. தென் கிழக்கு மூலையில் குளம் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கியதாக அமைந்துள்ள இறைவனின் கருவறை சதுர வடிவில் உள்ளது. ஒரு சிறிய அர்த்த மண்டபம் அதனைத் தொடர்ந்து தூண்களுடன் கூடிய மகாமண்டபம் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. இறைவனின் கருவறை மேல் அமைந்துள்ள விமானம் தற்காலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுவதும் சுதையாலானது. சுதைச் சிற்பங்கள் அவற்றில் இடம் பெற்றுள்ளன. மகாமண்டபத்திலேயே தெற்கு நோக்கிய நிலையில் அம்மன் கருவறை அமைந்துள்ளது. அம்மன் கருவறை சதுரவடிவமாகும். ஒரு சிறிய அர்த்தமண்டபமும் கொண்டுள்ளது. கருவறைத் திருச்சுற்றில் கோட்டத் தெய்வங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மன், துர்க்கை ஆகிய இறையுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தென் கிழக்கு மூலையில் பைரவர் சிற்பம் காணப்படுகிறது. கருவறைச் சுற்றின் வடபுறத்தில் சண்டிகேசுவரர் சிறுகோயில் கொண்டுள்ளார். பள்ளியறை சிறிய கோயிலாக காட்சியளிக்கிறது. கங்காதரேசுவரரின் கருவறை அருகில் சோமாஸ்கந்தருக்கான தனி கோயில் அமைப்பு காணப்படுகிறது. அதனை ஒட்டி நால்வர் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. அதனையடுத்த வெளியில் உற்சவருக்கான மண்டபம் ஒன்று தூண்களுடன் காணப்படுகிறது. இம்மண்டபத்தில் 63 நாயன்மார்களின் சிற்பங்களும் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன.
கோயிலுக்கு திருக்குளம் உள்ளது. பிராகாரப் பகுதியில் அழகிய நந்தவனம் அமைக்கப்பட்டு, சிறப்புறப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், 27 நட்சத்திரத் துக்கு உரிய விருட்சங்களும் வளர்க்கப்படுகின்றன. இங்கே, சோமாஸ்கந்தர், ஊன்றீஸ்வரர், பைரவர், தட்சிணாமூர்த்தி, குருந்த மல்லீஸ்வரர், பாணலிங்கம், வைத்தீஸ்வரர் என ஏழுவிதமான வடிவங்களில் காட்சி தருகிறார் சிவனார். ஸ்ரீகுருந்தமல்லீஸ்வரருக்கு பக்தர் களே அபிஷேகித்து வழிபடலாம். ஸ்ரீபிரம்மா, ஸ்ரீசத்ய நாராயண பெருமாள் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம். அன்னை ஸ்ரீபங்கஜாம் பாள், கேட்ட வரம் தரும் கற்பக விருட்சமாக அருள்கிறாள்.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சென்னை மத்திய ரயில் நிலையம், எழும்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு