சிவகாசி, காசிவிசுவநாதர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி நகரத்தில் அமைந்துள்ள கோயிலாகும்.
இறைவன் : காசிவிசுவநாதர்
இறைவி : விசாலாட்சி
தல விருட்சம் : வன்னிமரம்
தலச் சிறப்புகள் : இந்த ஆலயத்தில் காசி விஸ்வநாதருடன், விசாலாட்சி அம்மனும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இந்துக்கள் அனைவரும் தன் வாழ்வில் ஒரு நாளேனும் காசி யாத்திரை சென்று வர வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள். சிவகாசியில் உள்ள காசி விஸ்வநாதரை வணங்கி வழிபட்டாலே போதுமானது. காசியில் வழிபட்ட பலனைப் பெறலாம்.
தல வரலாறு : இந்து புராணத்தின்படி, சிவனுக்கு தென்காசியில் கோவில்கட்ட விரும்பிய பாண்டிய அரசன் அரிகேசரி பராக்கிரமப் பாண்டியன், அதற்குத் தேவையான, தென்னிந்தியாவில் சிவனுக்கு பொதுவான குறியீட்டு உருவமாக விளங்கும் லிங்கத்தினை கொண்டுவரும் பொருட்டு காசிக்குச் சென்றான். அவன் புனிதமான லிங்கத்தினை எடுத்துக் கொண்டு திரும்பும் வழியில் சிவனுக்கு மிகவும் விருப்பமான வில்வ மரமொன்றின் கீழ் ஓய்வெடுத்தான். அவ்விடத்திலிருந்து மீண்டும் புறப்பட்டபோது அந்த லிங்கத்தை சுமந்து வந்த பசுவானது அங்கிருந்து நகர மறுத்தது. இதனை சிவனின் மனவிருப்பம் என்று உணர்ந்துகொண்ட அரசன் பசுவானது நின்றுவிட்ட அதே இடத்தில் அந்த லிங்கத்தை நிறுவினான். காசியிலிருந்து கொண்டுவரப்பட்ட லிங்கம் நிறுவப்பட்ட அந்த இடம்தான் சிவகாசி என்றழைக்கப்பட்டது. அரசன் காசியிலிருந்து லிங்கத்தைக் கொண்டு வந்ததால் அக்கோவில் காசிவிசுவநாதர் ஆலயம் என்று அறியப்படுகிறது.
கோவில் அமைப்பு : திராவிடக் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவிலானது, 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய அரசன் அரிகேசரி பராக்கிரமப் பாண்டியனால் கட்டப்பட்டு, பிற்காலத்தில் மதுரை நாயக்க மன்னர்களால் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இக்கோவிலின் அனைத்து சந்நிதிகளையும் உள்ளடக்கி கருங்கற் சுவர் அமைந்துள்ளது. இக்கோவில் மூன்று நிலைகளுடைய கோபுரத்தினைக் கொண்டுள்ளது.
கீழ் திசை நோக்கிய தோரண வாயில் வழியாக அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோவிலின் சன்னதி நன்றாக தெரியும். தீர்த்தத்தின் வெளிவாயிலில் இருந்து பார்த்தால் அருள்மிகு விசாலாட்சி அம்மன் சன்னதி நன்றாக தெரியும். திருக்கோவிலின் வெளி மண்டபத்திற்குள் வருவதற்கு தென்திசை நோக்கிய தோரண வாயில் அமைந்துள்ளது. சற்று முன்பு சென்றால் இடதுபுறம் திருக்கோவிலின் அலுவலக அறையும், வலதுபுறம் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. அதன் பின்சன்னல் வழியாக சிவகங்கை தீர்த்தத்தை காணலாம். சற்று முன்பு சென்று இடதுபுறம் அமைந்துள்ள கல்யாண கணபதியைத் தரிசித்துவிட்டு, வலதுபுறம் உள்ள பழனி ஆண்டவரைத் தரிசிக்கின்றோம். திருக்கோவிலின் வெளி மண்டபத்தில் இருந்து அருள்மிகு விஸ்வநாத சுவாமி சன்னதிக்கு செல்வதற்காக அமைக்கபட்டுள்ள கோவிலின் பிரதான வாயில் 24 அடி உயரக் கதவை உடையது. தற்போது அக்கதவு புதிதாக அமைக்கப்பட்டு வேலைபாடுகளுடன் கூடிய எவர்சில்வர் தகட்டினால் பொதியப்பட்டுள்ளது. இந்த இடம் 9 மாடங்களையுடைய 136 அடி உயரமுள்ள இராஜகோபுரம் அமைய இருக்கும் கோபுர வாயிலாகும். கோபுர வாயிலைக் கடந்து கோவிலிக்கு உள்ளே சென்றதும் நேராக கொடிமரமும், வலது இடது புறமும் மேற்கு முகமாக சூரிய தேவன் மற்றும் சந்திர தேவனையும் தரிசிக்கலாம். கொடிக் கம்பத்தின் முன்பு நின்று நேராக பார்த்தால் கிழக்கு நோக்கி எழுந்தருளிருக்கும் சிவலிங்க வடிவில் உள்ள அருள்மிகு விஸ்வநாத சுவாமியை தரிசிக்கின்றோம்.
இடதுபுறமாக, தெற்கு திரும்பி நடந்தால் தென்கிழக்கு மூலையில் வடக்கு நோக்கி காட்சியளிக்கும் மாணிக்கவாசகரை தரிசிக்கலாம். வலதுபுறமாக, மேற்கு திரும்பி நடந்தால் தெற்குப் பிரகாரத்தில் வடக்கு நோக்கி வணங்கிய திருக்கோலத்தில் 63 நாயன்மார்கள் வரிசையாக நிற்கும் அழகை தரிசிக்கலாம். மேலும் சைவ சமயக் குரவர்கள் நால்வருடன் பொள்ளாப் பிள்ளையாரையும் இறுதியாக கிழக்கு முகமாக எழுந்தருளியுள்ள பெரிய புராணம் படிய சேக்கிழார் சுவாமிகளையும் அவர்களுடன் அருள்மிகு வரசித்தி விநாயகர், அருள்மிகு சொக்கநாதர் மீனாட்சி அம்பாளையும் தரிசிக்கலாம். தெற்குப் பிரகாரத்தைக் கடந்து, மேற்குப் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் கிழக்கு நோக்கிய அருள்மிகு கன்னிமூல கணபதியைக் கைதொழுதுவிட்டு, அடுத்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள அழகிய சன்னதியில் அமர்ந்த திருக்கோலத்தில் பஞ்ச உலோக மூர்த்தியாக அருள்மிகு ஸ்ரீ ஐயப்பன் பக்தர்களுக்கு கீழ்திசை நோக்கி அருள் பாலித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். வில்வமரத்து அடியில் அமைந்துள்ள மேடையில் நாக தேவதைகள் எழுந்தருளியுள்ளனர்.
கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி வெளிப்புறத்தில் தென்முகமாக சின்முத்திரையில் காட்சியளிக்கும் அருள்மிகு தட்சணாமூர்த்தியையும், மேற்குமுகமாக லிங்கோத்பவரையும், வடக்குமுகமாக அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மனையும் தரிசிக்கலாம். அம்மனை தரிசித்து விட்டு மேற்குமுகமாகத் திரும்பினால் ஆதியில் அமைந்துள்ள சிறு சன்னதியில் காசியில் இருந்து வந்து தங்கிய காசி விஸ்வநாத சுவாமியின் தரிசனம் பெறலாம். அதன் பின்புறமாக வன்னிமரம் வளர்ந்து இருப்பதையும் காணலாம். அதன் அருகில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆஞ்சநேயர் சன்னதி அழகுற அமைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு மூலையில் சுப்ரமணிய சுவாமிகள் வள்ளி தெய்வாணை சமேதராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அச்சன்னதியை ஒட்டி தென்புறத்தில் கிழக்கும் தெற்கும் திறந்த வெளியாகயுள்ள சிவராத்திரி மண்டபத்தைக் காணலாம். வடக்கு பிராகாரத்தில் கிழக்கு நோக்கி வந்தால் வலது புறத்தில் ஸ்ரீ மகாலட்சுமி கீழ்முகமாக அருள்மிகு கஜலட்சுமி தயார் அருள் பாலித்துக் கொண்டிருப்பதைக் காணலாம். இடதுபுறம் வடகிழக்கு மூலையில் பைரவர் சன்னதி அமைந்துள்ளன. கிழக்குப் பிராகாரத்திற்கு இடதுபுறம் வீரபத்திரரும், சிவகங்கைத் தீர்த்தத்தின் நுழைவு வாயிலும் அமைந்துள்ளது. தீர்த்தம் கோவிலுக்குள் பெய்யும் மழைநீரால் நீரம்புகின்றது. அதன் உட்புறம் ஒரு கிணறும் அமைந்துள்ளன. வலதுபுறம் நவக்கிரகங்களைக் காணலாம், சற்று முன் சென்றால் கொடிமரம், நந்தி, பலிபீடம் மூன்றையும் காணலாம்.
குடமுழுக்கினை ஒட்டி வெள்ளிக் கவசமும், தங்கக் கவசமும் செய்யப் பெற்றுள்ளன. ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பு, பிரதோஷ நாட்கள் மற்றும் சிவபெருமானுக்குரிய திருநாட்களில் கவசங்கள் சாத்தப்படுக்கின்றன. சன்னதியின் இடதுபுறம் தெற்கு நோக்கியபடி நடராஜர் திருநடனக் கோலத்தில் கட்சி அளிக்கிறார். அழகிய மரவேலைப்பாடுகளுடன் சித்திரசபை போலக்காட்சி தருகின்றது. அங்கிருந்து மகாமண்டபம், திருமண மண்டபம் இரண்டையும் கடந்து சந்தான சௌபாக்கிய இரட்டை விநாயகர்களை தரிசித்துவிட்டு விசாலாட்சி அம்மன் சன்னதிக்குள் செல்கின்றோம். அழகிய திருக்கோலத்தில் அருள்மிகு விசாலாட்சி அம்மன் நின்று அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். சன்னதியின் இடதுபுறத்தில் அழகிய எவர்சில்வர் தகடு பதிக்கப் பெற்ற சுவற்றுடன் கூடிய கதவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு வாசல் வழியாக வெளியேறி சண்டிகேஸ்வர நாயனாரைத் தரிசித்து விட்டு இரு மகாசன்னதிகளுக்கும் இடையே அமைந்துள்ளன, கோவில் சுவர்களில் ஆங்காங்கே தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பாடல்கள் எழுதப் பெற்றுள்ளன. உட்புற கூரைகள், தூண்கள் அனைத்தும் அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் திகழ்கின்றன. மாணிக்க வாசகர் சன்னதியின் இடதுபுறம் கருங்கல் சுவரில் சிவபுராணம் பொறிக்கப்பட்டுள்ளது.
இறைவனையும், இறைவியையும் சேர்த்து வணங்கினால் மன அமைதி கிடைக்கும். பவுர்ணமி, சங்கடஹர சதுர்த்தி மற்றும் பிரதோஷ நாட்களில் இந்த ஆலயத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. சிவகாசியில் கோவிலைக் கட்டிய பராங்குச மன்னன், தன் தவ வலிமையில் ஆகாய மார்க்கமாகச் செல்லும் ஆற்றலைப் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. துறவு நிலைக்குப் பின்னர், மன்னன் பராசரர் என்று அழைக்கப்பட்டான்.
தினமும் ஆகாய மார்க்கமாகச் சென்று, காசி விஸ்வநாதரை தரிசனம் செய்து விட்டு, திரும்பும் வழியில் சிவகாசி விஸ்வநாதரையும் வணங்கி விட்டு, பின்னர் தென்காசி செல்வதை பராசரர் வழக்கமாக வைத்திருந்தார். விமானப் பயணம் மேற்கொள்பவர்கள், வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள், தொடர்ந்து 11 வாரங்கள் சிவகாசி காசி விஸ்வநாதரை வணங்கினால், அவர்களின் பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இங்கு தினந்தோறும் நான்கு வழிபாடுகளும் வருடத்திற்கு மூன்று திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. இத்திருவிழாக்களுள் தமிழ்மாதமாகிய வைகாசி மாதம் நடைபெறுகின்ற பிரம்மோஸ்தவத் திருவிழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். முழுநிலவு அன்று மட்டும் நாள்முழுதும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சிவகாசி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு