வைத்தமாநிதி பெருமாள் கோயில், திருக்கோளூர் ( செவ்வாய்)
திருத்தலம் அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் செவ்வாய் தலமாக விளங்கும் இந்த தலம், திருநெல்வேலியில் இருந்து 36 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 34 கி.மீ தொலைவிலும், தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகரி செல்லும் சாலையில் சென்றால், திருத்தலத்தை அடையலாம்.
மூலவர் : வைத்தமாநிதி பெருமாள் , புஜங்க சயனம் ( கிழக்கு பார்த்த அமைப்பு )
தாயார் : கோளூர்வல்லி நாச்சியார், குமுதவல்லி நாச்சியார்
தல தீர்த்தம் : குபேர தீர்த்தம், தாமிரபரணி
சிறப்புகள் : திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில் என்பது ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றும், நவதிருப்பதியில் மூன்றாவது திருப்பதியுமாகும். நம்மாழ்வார் மட்டும் 12 பாடல்களாலும் மணவாள மாமுனிகளும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இவ்வூர் மதுரகவியாழ்வார் பிறந்த தலமாகும். இறைவன் செல்வத்தைப் பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் இங்கும், சோழ நாட்டு வைணவத் திருத்தலமான திரு ஆதனூரில் ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் கோயிலில் மட்டுமே காணப்படுகிறார்.
தல வரலாறு : பல கோடி வருடங்களுக்கு முன்பாக செல்வத்திற்கு அதிபதியான குபேரன், அளகாபுரியில் சிறப்புடன் வாழ்ந்து வந்தான். குபேரன் மிகுந்த சிவ பக்தனும் ஆவான். ஒரு சமயம் மிகுந்த அன்புடனும், பக்தியுடனும் சிவபெருமானைத் தரிசிக்க கைலாயம் சென்றான். அந்த அழகிய பொழுதில் சிவனும் பார்வதியும் குபேரனுக்கு ஒருசேரக் காட்சி தந்தனர். மிகுந்த பக்திப் பெருக்குடன் சிவனைக் காணச் சென்ற குபேரன், தன் தாய் போன்ற பார்வதி தேவியை தீய எண்ணத்துடன் நோக்கியதாக பார்வதி தேவி குபேரன் மீது கடும் கோபம் கொண்டார்.
அந்த கோபத்தின் உக்கிரத்தில் குபேரனுக்கு சாபமிட்டாள் பார்வதி தேவி. குபேரனது உருவம் விகாரம் அடையவும், அவனிடம் உள்ள செல்வங்களும், நவநிதிகளும் குபேரனை விட்டு அகலட்டும் என்றும், குபேரனுக்கு ஒரு கண் பார்வை அற்றுப் போகட்டும் என்றும் சாபமிட்டாள். குபேரனும் தனது தவறினை உணர்ந்து சிவனிடம் சென்று முறையிட, அவரும் அன்னை பார்வதியிடம் சென்று மன்னிப்புக் கோரச் சொன்னார். அவ்வாறே பார்வதியிடம் அடிபணிந்து மன்னிப்புக் கோரினார் குபேரன். அந்நிலையில் பார்வதி தாயார், குபேரனிடம், இனி உனக்கு கண் பார்வை வராது, உன் உடல் விகாரம் குறையாது, ஆனால் இழந்த நிதிகளை, அவை சென்று அடைந்துள்ள வைத்தமாநிதி பெருமாளை வேண்டி தவம் புரிந்து பெற்றுக்கொள் எனக் கூறி அனுப்பினாள்.
குபேரனும் அதுபோலவே வைத்தமாநிதி பெருமாளை வேண்டி தவம் புரிந்து பாதி நிதியைப் பெற்றான். பெற்ற அந்த செல்வங்களை ஒரே இடத்தில் நிலைத்து இல்லாமல் எல்லோருக்கும் பரவலாகக் கிடைக்கும் வண்ணம் லக்ஷ்மி தேவியிடம் கொடுத்தான். தொடர்ந்து ஒரே நபரிடம் கொட்டிக் கிடக்கும் செல்வம் இருக்கும் இடத்தில் தர்மம் நிலைக்காது என்பதும், அங்கே அதர்மம் ஆள ஆரம்பித்துவிடும் என்பதும், அதனாலேயே செல்வம் ஒருவரிடத்தில் நிலையாக இல்லாமல் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பது பெருமாள் அனுகிரகம். தர்மதேவன் நிலையாக இங்கேயே தங்கி இத்திருக்கோயில் பெருமாளை வழிபாடு செய்வதாக ஐதீகம்.
இதற்கு முன்பாக, சுவர்த்தனன் என்பவரது பிள்ளையான தர்மகுப்தன், திருமண பந்தத்தின் வாயிலாக எட்டு பிள்ளைகளையும், இரண்டு பெண்களையும் பெற்று அதன் காரணமாக மிகுந்த வறுமைக்கு ஆட்பட்டான். தனது ஏழ்மை நிலையினை போக்கும் நோக்கத்தில் நர்மதா நதிக் கரையில் வாழ்ந்து வந்த பரத்வாஜ முனிவரை வேண்டி நின்றான். அவரும் தனது தவ வலிமையினால் தர்மகுப்தனது முன் ஜென்ம பாவங்களை அறிந்து கொண்டார். அதனை தர்மகுப்தனிடம், நீ உனது முற்பிறவியில் அந்தணராகப் பிறந்து பெரும் செல்வந்தனாக வாழ்ந்தாய், அந்த சமயத்தில் அரசன் வந்து கேட்ட போது, அளவுக்கு மிஞ்சிய செல்வம் உன்னிடம் இருந்த போதும், அதனை மறைத்து உன்னிடம் எவ்வளவு செல்வம் உள்ளது என்பதை மறைத்து பொய் கூறினாய். உன்னுடைய செல்வத்தை நல்ல விதமாக யாருக்கும் உதவி செய்யும் நோக்கில் பயன்படுத்தாமல், பூட்டி வைத்து அழகு பார்த்தாய். அந்த செல்வம் உண்மையிலேயே கஷ்டப் படுகிறவர்களுக்குப் பயன்படாமல், அந்த செல்வங்கள் கள்வர்கள் கையில் சிக்கியது. அந்த வேதனையில் மனம் பாதிக்கப் பட்டு நீ உயிரிழந்தாய். தாமிரபரணியின் தென் கரையில், உள்ள திருக்கோளூரில் குபேரனது நவநிதிகளும் இருக்கின்றன. அங்கு சென்று வைத்தமாநிதி பெருமாளை வழிபட்டால் இழந்த செல்வத்தினைப் பெறலாம் என்று கூறினார்.
தர்மகுப்தனும் அவ்வாறே திருக்கோளூர் வந்து பெருமாளை வணங்கி செல்வம் பெற்றான். இந்தக் கதையினைக் குபேரனிடம் பார்வதி தேவி சொல்லி நீயும் அத்தலம் சென்று இறைவனை வேண்ட உன் செல்வம் திரும்பக் கிடைக்கும் என்றாள் அன்னை பார்வதி. இவ்வாறு தான் இழந்த செல்வத்தை, மாசி மாத சுக்லபட்ச துவாதசியில் பெருமாளிடம் இருந்து பெற்ற காரணத்தால் இன்றும் அந்த நாளில் குபேர தீர்த்தத்தில் நீராடி வைத்தமாநிதியை வழிபாடு செய்கின்றனர். அவ்வாறு செய்வதால் இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் பெருமாள் செல்வம் அளந்ததால், மரக்காலைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார். மரக்காலைத் தலைக்கு வைத்து, கையில் அஞ்சனம், மை தடவி நிதி எங்குள்ளது என பார்த்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு வசித்த விஷ்ணுநேசர் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர்தான் மதுரகவி ஆழ்வார். இவர் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இந்த மதுரகவி ஆழ்வார் அவதரித்த தலம் இந்த திருக்கோளூர் தலம் என்பது கூடுதல் சிறப்பாகும்.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையும், மதியம் 1.00 மணி முதல் இரவு 6.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : தூத்துக்குடி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை