மகரநெடுங்குழைக்காதர் திருக்கோயில், தென்திருப்பேரை ( சுக்ரன் )
திருத்தலம் அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தூத்துக்குடி மாவட்டத்தில் நவதிருப்பதிகளில் சுக்ரன் தலமாக விளங்கும் தென்திருப்பேரை திருநெல்வேலியில் இருந்து திருசெந்தூர் செல்லும் சாலையில், 35 கி.மீ தொலைவிலும், திருக்கோளூரில் இருந்து சுமார் 3 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.
மூலவர் : மகரநெடுங்குழைக்காதர் - அமர்ந்த திருக்கோலம்
உற்சவர் : நிகரில் முகில் வண்ணன்
தாயார் : குழைக்காதவல்லி, திருப்பேரை நாச்சியார்
தீர்த்தம் : சுக்கிர புஷ்கரணி, சங்கு தீர்த்தம்
சிறப்புகள் : கருவறையில் மூலவராக அமர்ந்த கிருக்கோலத்தில் ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாய் காட்சித்தருகிறார் மகரநெடுங்குழைக்காத பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், சங்கு-சக்கரம் ஏந்தியும், அபயம்-வரதம் காட்டியும், தன் காதுகளில் மீன் போன்ற அமைப்பை உடைய மகரகுண்டலங்கள் அணிந்து புன்சிரிப்புடன் வீற்றிருக்கிறார்.
சன்னதிக்கு தென்புறம் தனி சன்னதியில் குழைக்காதவல்லி நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். சன்னதிக்கு வடப்புறம் தனி சன்னதியில் திருப்பேரை நாச்சியார் நான்கு கரங்கள் கொண்டு அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறாள். இவள் பூமகளின் அம்சமாக விளங்குகிறாள். உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு நிகரில்முகில்வண்ணன் என்னும் திருநாமம் தாங்கி ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார்.
கோவில் அமைப்பு : மூன்று நிலை ராஜகோபுரத்தை கொண்டது. கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. கருவறைக்கு நேரெதிரே கருடன் சன்னதி உள்ளது. அர்த்தமண்டபம் நடுவே தனி மண்டபத்தில் உற்சவர் நிகரில்முகில்வண்ணன் தாயார்களுடன் காட்சிதருகிறார். அவருக்கு பின்புறம் துவாரபாலகர்கள் காவல்புரியும் கருவறையில் மகரநெடுங்குழைக்காதர் காட்சித்தருகிறார். திருக்கோவில் உள் பிரகாரத்தில் தெற்கு திருச்சுற்றில் குழைக்காதவல்லி சன்னதியும், வடக்கு திருச்சுற்றில் திருப்பேரை நாச்சியார் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. பரிவார மூர்த்திகளான பன்னிரு ஆழ்வார்கள், இராமானுஜர், கிருஷ்ணன், நரசிம்மர் மற்றும் பிற சன்னதிகளும் உள்ளன. வெளித்திருச்சுற்றில் நந்தவனமும், வடக்கு பக்கம் பரமபத வாசலும் அமையப்பெற்றுள்ளன.
பங்குனி மாதம் இங்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந்திருவிழாவும், பத்தாம் நாள் தேரோட்டமும் விமரிசையாக நடைபெறும். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல பெருமாள் நிகரில்முகில்வண்ணன் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார். ஆவணி மாதம் பவித்ரோற்சவமும், ஐப்பசி மாதம் ஊஞ்சல் உற்சவமும் விமரிசையாக நடைபெறும்.இது தவிர புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்களும் இங்கு சிறப்பாக நடைபெறும்.
தல வரலாறு : வைகுண்டத்தில் ஒருநாள் ஸ்ரீதேவி கவலையுடன் காணப்பட்டாள். தன் பதி திருமால் தன்னைவிட பூமாதேவியிடம் தான் மிகுந்த அன்புடனும், பிரியத்துடனும் இருப்பதாக எண்ணிக்கொண்டு மனம் வருந்தினாள். தன்னுடைய இந்த வருத்தத்தினை துர்வாச முனிவரிடம் போய் சொல்லி முறையிட்டாள். தன்னை விட பூமாதேவி அழகு என்பதனால் தான் இவ்வாறு திருமால் நடந்துகொள்வதாக ஸ்ரீதேவி தானாகவே நினைத்துக்கொண்டு, துர்வாசரிடம் தன்னையும் பூமாதேவி போல வடிவத்தில் மாற்றுமாறு கூறினாள்.
அதற்குப் பிறகு துர்வாசர் பூமாதேவியைக் காணச் சென்ற வேளையில், திருமாலுடன் இருந்த பூமாதேவி தன்னை சரியான விதத்தில் விருந்தோம்பல் புரியாமலும், மதிக்காமலும் அலட்சியம் செய்வதைக் கண்டு கோபமுற்று, பூமாதேவியிடம், நீ ஸ்ரீதேவியின் உருவத்தைப் பெறுவாய், என சாபமிட்டார். தான் செய்த தவறினை உணர்ந்த பூமாதேவி, முனிவரிடம் சாப விமோசனம் கேட்க, தாமிரபரணியின் கரையிலே அமைந்துள்ள தென்திருப்பேரை என்னும் தலத்திற்கு வந்து ஓம் நமோ நாராயணாய என்ற மந்திரத்தை மனதாரச் சொல்லிவர, பங்குனி பௌர்ணமி, முழு நிலா நாளன்று, ஆற்று நீரை அள்ளி எடுக்கும் போது இரண்டு மகர குண்டலங்கள், மீன் வடிவிலான காதில் அணியும் அணிகலன்கள், பூமாதேவிக்குக் கிடைத்தது. அதே நேரத்தில் திருமால் பூமாதேவி முன் தோன்ற, தனக்குக் கிடைத்த காதணிகளை திருமாலுக்குக் கொடுத்து அணிந்து கொள்ளுமாறு பூமாதேவி தன் அன்புக் கணவரிடம் கொடுக்க, திருமாலும் அதனை விருப்பமுடன் அணிந்து கொண்டார்.
அந்த நிமிடமே பூமாதேவி தன் சுய உருவத்தினை அடைந்தாள். இந்த திருத்தலத்திலே பூமாதேவி, லக்ஷ்மி தேவியின் உருவத்தில், வடிவத்தில் காட்சி கொடுப்பதால், இத்தலம்திருப்பேரை என பெயர் பெற்றது. இன்றும் இத்தல பெருமாள் மகரகுண்டலங்களுடன் காட்சி தருகிறார். அதனாலேயே, இத்தல இறைவன் மகரநெடுங்குழைக்காதன் என அழைக்கப்படுகிறார். ஒரு சமயம் வருணன் அசுரர்களுடன் போரிட்டு, தனது பாசம், நாகம் போன்ற ஆயுதங்களை இழந்தான். திருப்பேரை தலம் வந்து தவம் இயற்றி, தான் இழந்த ஆயுதங்களை திரும்பப் பெற்றான். இதன் காரணாமாகவே, தற்போதும், மழை வேண்டி இத்தல இறைவனை வேண்டினால், அந்த வேண்டுதல் பொய்க்காது.
முன்னொரு காலத்தில் விதர்ப்ப நாட்டில் ஒரு மாமாங்கத்திற்கு மழையே பொழியாமல் வானம் பொய்த்துப்போனது. நாடெங்கும் வறட்சி மிகுதியால் பஞ்சம் தோன்றியது. அந்நாட்டு அரசன், தன் குருநாதரைச் சந்தித்து, நாட்டின் பஞ்சத்தைப் போக்க அவரிடம் யோசனைக் கேட்டான். குருவும் திருப்பேரைத் திருத்தலம் சென்று மகரநெடுங்குழைக்காதரை வழிபட்டு வந்தால் உன் நாட்டு மக்கள் துன்பம் தீரும் எனக் கூறினார். அவ்வாறே அம்மன்னன் செய்ய, அந்நாட்டில் மழை பெய்து வளம் பெற்றது.
பிரம்மனுக்கும், ஈசான்ய ருத்தரருக்கும் முன்னிலையில் குழைக்காத நாச்சியார்,திருப்பேரை நாச்சியார் சகிதமாக, பரமபத திருக்கோலத்தில் இத்தல பெருமாள் காட்சி அளிக்கின்றார். பக்த கோடிகள் வேதம் ஓதும் அழகிய காட்சியையும், குழந்தைகள் திருக்கோயிலில் மகிழ்ச்சியாக ஓடி விளையாடும் காட்சியையும் காணும் நோக்கத்துடன், தன் தலைசிறந்த பக்தன், கருடாழ்வாரை நேராக இல்லாமல் சற்று ஒதுங்கி அமரச் சொன்ன காரணத்தால், இத்திருக்கோயிலில் கருடன் சன்னதி, திருமால் சன்னதிக்கு நேர் எதிரே இல்லாமல் இடது பக்கம் சற்றே நகர்ந்து அமைந்த கோலம், வேறு எந்த திருத்தலத்திலும் காணாத அமைப்பாகும்.
இத்திருக்கோயிலில் 10 ம் நூற்றாண்டின் மத்தியில் கொடிமரமும், மண்டபங்களும், திருத்தேரும் அமைக்கப்பட்டுள்ளதாக இங்கு கிடைக்கப் பெற்ற கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகின்றது. அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு கொண்டிருந்த சுந்தரபாண்டிய மன்னன், தனக்கு பிள்ளை வரம் வேண்டி, தினப்படி திருமாலுக்கு பூஜை செய்ய, இவ்வூரைச் சேர்ந்த அந்தணர்கள் மட்டுமல்லாது, சோழ நாட்டில் இருந்து மேலும் 108அந்தணர்களை அழைத்து வர எண்ணினார். இவ்வூர் அந்தணர்கள், பெருமாளைத் தனக்குள் ஒருவராகவே எண்ணி நித்தியப்படி பூஜைகளையும் வெகு சிறப்பாகவும், பெரும் பக்தியுடனும் செய்து வந்தனர்.
மன்னனின் எண்ணப்படி சோழ நாட்டில் இருந்து 108 அந்தணர்களை அழைத்து வரும் வேளையில், ஒருவர் மட்டும் காணாமல் போய்விட்டார். ஊருக்கு அனைத்து அந்தணர்களும் வந்து சேரும்போது மொத்தம் 107 நபர்களே இருந்தனர். பாண்டிய மன்னன் வந்து பார்க்கும்போது 108 அந்தணர்கள் இருந்தனர். திருமாலாகிய பெருமாளே 108 வதுஅந்தணராக வந்து சேர்ந்து கொண்டதாகவும், அதனாலேயே இத்தல இறைவன் தங்களுக்குள் ஒருவன் என இவ்வூர் மக்கள் கொண்டாடுகின்றனர். இத்தல இறைவனின் அழகை, பேரழகுடைய முகில் வண்ணன் என்றும், ஈடு இணையில்லாத அழகை உடையவன் என்றும் நம்மாழ்வார் தனது பாசுரத்தில் பாடியுள்ளார்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 6.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : தூத்துக்குடி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருநெல்வேலி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை