பொன்மலை வேலாயுதசாமி கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், கோவையிலிருந்து பொள்ளாச்சி பாதையில் 23 கி.மீ அமைந்துள்ள கிணத்துக்கடவு கோவை மாநகரின் தென்திசையில் அமைந்துள்ள ஒரு சிறிய குன்று. கோயம்புத்தூருக்கு அருகே இக்குன்றின் அடிவாரத்தில் கிணத்துக்கடவு பேருந்து நிறுத்தம் உள்ளதால் கோவையிலிருந்து பேருந்து மூலம் இக்கோயிலுக்குச் செல்லலாம்.
சுவாமி : வேலாயுத சுவாமி
தல தீர்த்தம் : வள்ளி தீர்த்தம்
பாடியோர் : அருணகிரிநாதர்
தல சிறப்புக்கள் : வேலாயுத சுவாமி கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் வலது கையில் தண்டம் ஏந்தி, இடது கையை இடுப்பிலும் வைத்தபடி அற்புத கோலம் காட்டுகிறார். அர்த்த மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேதரான சுப்பிரமணியசாமி உற்சவ மூர்த்தியாக எழுந்தருளி உள்ளார். குன்றின் மேலுள்ள வேலாயுதசாமி கருவறைக்குப் பின்புறம் இரு பாதங்கள் கொண்ட ஒரு சிறு சன்னிதி உள்ளது. வேலாயுதசாமிக்கு பூசை செய்யும் முன்னர் இப்பாதங்களுக்கே முதலில் பூசை நடைபெறுகிறது. கருவறையை அடுத்த மண்டபத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, கன்னிமூலை கணபதி ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் எழுந்தருளி இருப்பதை காணலாம். பிரதான கோயிலின் வடகிழக்குப் பகுதியில் என்றும் வற்றாத வள்ளி தீர்த்தம் உள்ளது. தினசரி அபிஷேகத்திற்கு இந்த தீர்த்தம்தான் பயன்படுத்தப்படுகிறது. ஞானப்பழத்திற்காக அம்மையப்பரிடம் கோபித்துக் கொண்டு பாலமுருகன் பழனி செல்லும் வழியில் இக்குன்றில் பாதம் பதித்தார் என்பது மரபுவழி வரலாறு.
தல வரலாறு : கி.பி. 14–ம் நூற்றாண்டில் கொங்கு மண்டல சிற்றரசர் பரம்பரையில் வந்த கோப்பண மன்றாடியார், ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழாவிற்கு பழநி சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து வருவார். ஆயக்குடி வரை சென்றும் பழநி முருகனை தரிசிக்காமல் வந்து விட்டோமே' என்பதை நினைத்தே ஜமீன்தாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அன்றிரவே முருகப்பெருமான் ஜமீன்தாரின் கனவில் தோன்றி, அக்குன்றின் உச்சியில் சந்தன மரமும் அதன் அடியில் பொன்னும் உள்ளன. அங்கே வந்து என்னைத் தரிசிக்கவும், கிணத்துகடவு என்ற ஊரில் உள்ள மலை மீது தன் பாதம் பதிந்துள்ளதாகவும், அதனை பூஜிக்கும்படியும் கூறி மறைந்தார். இதையடுத்து முருகன் குறிப்பிட்ட மலை மீது சென்று பார்த்த போது ஒரு இடத்தில் முருகனின் பாதம் இருப்பதைக் கண்டு மகிழ்ந்து அதற்கு பூஜை செய்து வழிபட ஆரம்பித்தார்.
மறுபடியும் முருகன் ஜமீன்தாரின் கனவில் வேலுடன் தோன்றி, அதே தோற்றத்தில் மலை மீது மூலவர் பிரதிஷ்டை செய்து சன்னதி அமைக்க வேண்டும் என்று கூற, சன்னதியும் அமைக்கப்பட்டது. கையில் வேலுடன் மூலவர் அமைக்கப்பட்டதால் இங்குள்ள முருகன் ‘வேலாயுத சுவாமி’ என அழைக்கப்பட்டார். இந்நிலையில்தான் மைசூர் மகாராஜா ஆணைப்படி திருக்கோயிலும் கட்டப்பட்டது. மைசூர் திவான் ஊர் திரும்பும்போது கோயில் நிர்வாகத்தை கோப்பண்ண மன்றாடியார் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தார். தனக்கு அருள்பாலித்த முருகப்பெருமான், அனைத்து மக்களுக்கும் அருள்பாலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், வேலுடன் கூடிய முருகப்பெருமானின் சிலையை வடிவமைத்து, அங்கு ஒரு கோவிலை எழுப்பவும் ஏற்பாடு செய்தார். அப்போது சிறியதாக அமைந்த கோவில், பிறகு பல மன்னர்கள் திருப்பணியின் காரணமாக ஓங்கி உயர்ந்தெழுந்தது. இன்றுவரை இப்பரம்பரையைச் சார்ந்தவர்கள் தான் கோயில் திருப்பணிகளைச் செய்து வருகின்றனர். இக்கோயிலில் குடிகொண்டுள்ள வேலாயுத சுவாமியை அருணகிரிநாதப் பெருமான் தரிசித்து மகிழ்ந்திருக்கிறார்.
700 ஆண்டுகள் முன் மைசூர் அரண்மனை திவானுக்கு காலில் கொடிய புண் ஏற்பட்டது. எந்த மருந்துக்கும் புண் குணமாகவில்லை. திவானின் கனவில் முருகன் தோன்றி, ‘‘கிணத்துக்கடவு வேலாயுதசுவாமி கோயிலுக்கு வா, மருந்து தருகிறே’’. என்று கூறி மறைந்தார். அதே சமயத்தில் கோயில் அர்ச்சகர் கனவிலும் முருகன் தோன்றி, ‘‘திவானின் புண்ணுக்கு இந்த மலையிலுள்ள மூலிகையை வைத்து கட்டினால் குண மாகிவிடும்’’ என்று கூறி மறைந்தார். திவானும் இத்தலத்திற்கு வர அர்ச்சகரும் மூலிகை வைத்து கட்ட புண் இரண்டே நாளில் குணமாகி விட்டது. இந்த விஷயத்தை திவான் மைசூர் மன்னரிடம் தெரிவித்தவுடன், முருகனுக்கு பொன்மலையில் கோயில் கட்டியதாக செப்பேடு கூறுகிறது.
குமரன் எங்கெல்லாம் வீற்றிருக்கிறாரோ, அங்கெல்லாம் சென்று முருகனை தரிசிப்பதே தன் பிறவியின் நோக்கம் என்று வாழ்ந்து வந்தவர் அருணகிரிநாதர். அவர் ஒரு முறை செஞ்சேரிமலையில் உள்ள முருகக் கடவுளை தரிசித்தார். அந்த மலையில் இருந்து பார்த்த போது எதிரே சற்று தொலைவில் உள்ள ஒரு குன்றில் கோவில் எழுப்பப்பட்டு இருப்பதைக் கண்டார். பின்னர் இந்த பொன்மலைக்கு வந்து வேலாயுதசாமியை தரிசனம் செய்தார். மேலும் இத்தல இறைவனைப் புகழ்ந்து ‘அரிவையர்கள்’ என்று தொடங்கும் பாடலை பாடி மனம் மகிழ்ந்துள்ளார். ஆதலால் இது பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. அருணகிரிநாதர் இந்த தலத்தை ‘கநககிரி’ என்று பாடி இருக்கிறார். ‘கனக’ என்பது பொன்னையும் ‘கிரி’ என்பது மலையையும் குறிக்கும்.
பண்டைக்காலத்தில் இம்மலையில் சந்தன மரங்கள் வளர்ந்திருந்ததாக அறியப்படுகிறது. இம்மலையில் பொன் விளைந்ததாலேயே பொன்மலை எனப் பெயர் பெற்றது. 200 படிக்கட்டுகளின் வழியாக மலை ஏறலாம். ஆலயத்தை தரிசனம் செய்யச் செல்லும் பக்தர்களுக்கு, முதலில் இடும்பன் காட்சி தருகிறார். அவரை தொடர்ந்து முழுமுதற் கடவுள் விநாயகர் அருள்பாலிக்கிறார். அவரை தரிசித்து விட்டு திருக்கோவிலை தரிசிக்கலாம். பழங்கால கோவில் என்பதை பறைசாற்றும் விதமாக பெரிய, பெரிய கற்தூண்கள் கொண்டு இந்த ஆலயம் அமைக்கப்பட்டிருக்கிறது. ராஜா, வேடன் என்று இரு அலங்காரங்களில் முருகன் காட்சிதரும் ஒப்பற்ற அழகை கண்குளிர பார்த்துக் கொண்டே இருக்கலாம். கோயிலின் பின்புறம் முருகன் பாதம் பதிந்த பகுதியை ஒரு சந்நதியாக அமைத்துள்ளனர். திருக்கோயிலின் முன்பு கொடிக்கம்பம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா மிக சிறப்பாக கொண்டாடப்படும் தேரோட்டம் 3 நாட்கள் நடைபெறும். இது தவிர கார்த்திகை, கந்த சஷ்டி, பங்குனி உத்திரம், பவுர்ணமி, பிரதோஷ உள்ளிட்ட நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. விஸ்வநாதர் சன்னிதி கோவிலில் உள்ளதால் பவுர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபட்டு செல்கிறார்கள். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தினமும் காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்தே இருக்கும். தினமும் 3 கால பூஜைகள் நடைபெறுகிறது.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : கோயம்புத்தூர், கிணத்துக்கடவு
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு