புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி, வேலாயுதம்பாளையம் ( ஆறுநாட்டன் மலை )
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கரூரில் இருந்து 16 கி.மீ. தொலைவில் புகழூருலிருந்து 4 கி.மீ. தொலைவில் புகழிமலை அமைந்துள்ளது.
மூலவர் : பாலசுப்ரமணிய சுவாமி
தல விருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : நந்தவனக் கிணறு
பாடியவர் : அருணகிரிநாதர்
தலச் சிறப்புகள் : கருவறையில் முருகன், ஆவுடையார் மீது நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார். பாலகன் வடிவிலுள்ள அவரது கைகளில் சக்திவேல், வஜ்ரவேல் உள்ளன. கழுத்தில் ருத்ராட்ச மாலையுடன் இருக்கிறார். பாலசுப்ரமணிய சுவாமி கையில் வேலேந்தி நின்ற கோலத்தில் காட்சிதருகிறார். ஒரு கையில் வேலும் மற்றொரு கையில் சேவல் கொடியும் கொண்டு, நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். முருகனுக்குப் பின்புறம் இடது புறம் தலை சாய்த்தபடி தேவ மயில் உள்ளது. வஜ்ஜிரம், சக்தி ஆகிய படைக்கலன்களையும் அபயம், வரதம் ஆகிய நான்கு கரங்களுடன் பாலசுப்பிரமணியராக கருவறைக் கடவுள் காட்சி நல்குகிறார். முருகனைத் தரிசத்துப் பின் வலப்புறம் சிவலிங்கம், மீனாட்சி அம்மன் கொடிமரம் மற்றும் நவகிரகங்களைத் தரிசிக்கலாம்.
தல வரலாறு : கரூர் மாவட்டத்தின் காவிரி ஆற்றங்கரையில் தென்பகுதியில் உள்ள ஆறு கிராமங்களுக்குப் புகழிமலை சொந்தமானது. அதனால் இந்த மலை, ‘ஆறுநாட்டார் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. சங்க காலத்துக்குப் பின்பு சமணர்கள் இப்பகுதியில் வாழ்ந்துவந்தனர். சமணர்களுக்குப் புகலிடம் தந்த காரணத்தால் இந்த மலை புகலி மலை என்று அழைக்கப்பட்டு, புகழி மலை என மாறிப் பின்னர் புகழூர் என பெயர் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. வேலாயுத வழிபாடே வேலன் வழிபாடாகி பின்னர் உருவுடைய முருகனை நிறுவி வழிபடும் வழக்கமாக மறியுள்ளது. வேல் ஊன்றிய இம்மலை மற்றும் அமைந்துள்ள ஊர் வேலாயுதம்பாளையம் எனப்படுகிறது.
தல வரலாறு: இந்த முருகன் கோயில் எப்போது தோன்றியது என்று வரலாற்று அடிப்படையில் கூறமுடியவில்லை. எனினும் கி.பி.15 ம் நூற்றாண்டினரான அருணகிரிநாதர் இந்த மலை மீதுள்ள இறைவனை தம் திருப்புகழில் பாடியிருப்பதால் அவர் காலத்திற்கு முன்பே கோயில் பேரும் புகழும் பெற்றுச் சிறப்புடன் விளங்கியிருக்கவேண்டும் என்பது உறுதி. இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகளை நோக்கும்போது அருணகிரிநாதர் காலத்தில் இக்கோயிலின் கருவறைப்பகுதி மட்டுமே இருந்திருக்கும் என்பது தெளிவாகிறது.
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி, மலை ஒன்றில் முருகனுக்கு கோயில் கட்டினார். வேலுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இதற்கு 'வேலாயுதம் பாளையம்' என பெயர் சூட்டினார். மூலவருக்கு 'பாலசுப்பிரமணியர்' என்ற பெயர் அமைந்தது. பிற்காலத்தில் அருணகிரிநாதர் 'புகழ் மிக்க தலம்' என்னும் பொருளில், 'புகழிமலை மேவு பெருமாளே' என பாடினார். இதனடிப்படையில் இவ்வூர், 'புகழிமலை வேலாயுதம் பாளையம்' என பெயர் பெற்றது. கோயிலுக்குப் பின்புறம் மலையில் சமணர்களின் குகை உள்ளது. இதைச் சுற்றியுள்ள பாறைகளில் முதல் நூற்றாண்டைச் சேர்ந்த 'தமிழி' கல்வெட்டுக்கள் உள்ளன. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இதில் பிட்டன், கொற்றன், கீரன், ஓரி போன்ற பழங்காலப் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
கோவில் அமைப்பு : பல ஆண்டுகளுக்கு முந்தயை பழமையான 12 ஆம் நூற்றாண்டுக் கோயில். சேர மன்னர்களால் கட்டப்பட்ட ஆலயம். கோபுரங்கள் மைசூர் பகுதிகளில் இருக்கும் கோபுரங்களைப் போல் காட்சி அளிக்கிறது. கோயில் அமைந்துள்ள மலையில் சமணர்கள் தங்கியதற்கான கல் படுக்கைகள் காணப்படுகின்றன. சுமார் 400 அடி உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் விநாயகர் சன்னிதி உள்ளது. மலையின் நுழைவாயில் மண்டபத்தில் மலையை நோக்கி மேற்குத் திசையில் முருகனுடைய மயில்வாகன சன்னிதி அமைந்துள்ளது. மலைக் காவல் அய்யனாருக்கு எனத் தனிச் சன்னிதி உள்ளது. இதிலிருந்து 48 படிகள் ஏறியவுடன் தென் திசையில் உள்ள சிறிய குகையில் சிவன் பார்வதி, ஒளவையார் சுதைகள் அமர்ந்த நிலையில் உள்ளன.இவற்றின் அருகில் கிழக்குத் திசை நோக்கி ஏழு கன்னிமார்கள் சன்னதி உள்ளது. கடும் தவத்தில் இருக்கும் சுதையாலான அகத்தியரின் சிலையைத் தரிசிக்கலாம். மேலும் 14 படிகள் ஏறினால் வட திசை பார்த்த இடும்பன் சன்னிதி உள்ளது. தொடர்ந்து ஏறினால் கிழக்குத் திசையில் அமைந்துள்ள மூலஸ்தானத்துக்குள் நுழையலாம். மூலஸ்தானம் முன்பு முன் மகாமண்டபம் உள்ளது. கோயிலின் பின்புறம் நட்ட வேல் ஒன்றும் கிணறு ஒன்றும் உள்ளன.
315 படிகளுடன் அமைந்த இந்த மலைக்கோயிலின் அடிவாரத்தில் மயில் வாகனம் உள்ளது. மலையைச் சுற்றிலும் உள்ள ஆறு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு குலதெய்வமாக முருகன் விளங்குவதால் 'ஆறுநாட்டான் கோயில்' என வழங்கப்படுகிறது. மலைப்பாதையில் மலைக்காவல் அய்யன் சன்னிதி உள்ளது. அருகில் மாம்பழத்திற்காக முருகன் கோபிக்கும் காட்சி, முருகனை சமாதானப்படுத்தும் அவ்வையார், தினைப்புனம் காத்த வள்ளி, அகத்தியரின் கமண்டல நீர் காகத்தால் காவிரி நதியாக ஓடுதல், பாம்பாட்டி, குரங்கு போன்ற சுதை சிற்பங்கள் உள்ளன. வேம்பு மரத்தடியில் ஒரே கல்லில் சப்த கன்னியர், இடும்பன், விநாயகர் சன்னிதிகள் உள்ளன. சுனை தீர்த்தம் என்னும் மலை தீர்த்தம் இங்குள்ளது. தல விநாயகராக உச்சிஷ்ட கணபதி வீற்றிருக்கிறார். இங்குள்ள சண்டிகேஸ்வரர் சிற்பம், சிறப்புமிக்கது. முன் மண்டபத்தில் நவக்கிரகம், சனீஸ்வரர், மீனாட்சி, சுந்தரேஸ்வரருக்கு சன்னிதிகள் உள்ளன.
ஐப்பசி சஷ்டியில் மலையைச் சுற்றிலும் நான்கு இடங்களில் அசுர வதம் நிகழ்த்தும் முருகன், மயில் வாகனத்தில் எழுந்தருள்வார். அதன்பின் முருகன், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கும். பங்குனி உத்திரத்தன்று முருகன் மலையைச் சுற்றி வருவார். தைப்பூசத்தன்று முருகன் தன் தேவியருடன் தேரில் எழுந்தருள்வார். அவருக்கு முன்பாக விநாயகரும், வீரபாகுவும் செல்வர். முருகனின் படைத்தளபதி என்பதால், வீரபாகுவிற்கு மரியாதை தரும் விதமாக அவர் செல்வதாகச் சொல்கின்றனர். இவ்வாறு, செல்லும் தேர் பாதியிலேயே நின்று விடும். மறுநாள் காலையில் மீண்டும் கிளம்பி, இரவில் நிலைக்கு வரும். மார்கழி திருவாதிரையன்று நடராஜர், சிவகாமி திருக்கல்யாணம் நடக்கும். அதன்பின் நடராஜரும் மலையைச் சுற்றி வருவார்.
புகழிமலை முருகனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டால் செவ்வாய் தோஷம் நீங்கி, திருமணம் கைகூட செவ்வாயன்று பாலாபிஷேகம் செய்து, வெள்ளை வஸ்திரம் அணிவித்து வழிபடுகின்றனர். சஷ்டி, கிருத்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு அபிஷேகம் உண்டு. இத்திருக்கோயிலில் தைப்பூச உற்சவத்துக்கு சிவன் சன்னிதி கொடிமரம், சுப்ரமணியர் கோயில் கொடிமரம் இரண்டிலும் கொடியேற்றி 13 நாட்கள் உற்சவம் நடைபெறும். தைப்பூசத் தேர் சிறப்பாக நடைபெறும். ஐப்பசி கந்தசஷ்டி உற்சவம் சூரசம்காரத்துடன் ஏழு நாட்கள் நடைபெறும். அதில் 50 ஆயிரம் பக்தர்களுக்குக் குறையாமல் கலந்துகொள்வார்கள். கார்த்திகை தீபம், ஆடிக் கிருத்திகை, மாதக் கிருத்திகை, சஷ்டி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தீபாவளி, பொங்கல், தமிழ் - ஆங்கில வருடப் பிறப்பின் போதும் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும்.
இந்தத் தலத்தில் உள்ள விஷ்ணு, துர்க்கையை 12 வாரம் வேண்டிக்கொண்டு எலுமிச்சம்பழ விளக்கு ஏற்றி வணங்கினால் கல்யாணம் கைகூடும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதம் இருந்து மலையில் உள்ள கார்த்திகேயனை வணங்கினால் குழந்தை வரம் கிடைக்கும். இங்குள்ள முருகனை வழிபட்டால் கல்யாண வரம், தொழில் விருத்தி, புத்திர பாக்கியம், உடல் நலக் குறைவு நீங்குதல் ஆகியவை நிறைவேறுகின்றன. ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெறவும் இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். அபிஷேகம், கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்குதல், காது குத்தல், சஷ்டி விரதம் இருத்தல், சண்முகார்ச்சனை, சண்முக வேள்வி ஆகியவை செய்கிறார்கள்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். இரண்டு காலம், உச்சி காலம் மற்றும் சாயரக்ஷை என இரு கால பூஜை நடைபெறும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : கரூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு