இராமநாதசுவாமி கோவில், இராமேஸ்வரம்
திருத்தலஅமைவிடம் : தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது.
இறைவர் : ராமநாதசுவாமி, ராமலிங்கேஸ்வரர்
இறைவியார் : பர்வத வர்த்தினி, மலைவளர்காதலி
தல மரம் : பலா, ஆலமரம், வில்வம்
தீர்த்தம் : கோயிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோயிலுக்கு வெளியே 22 தீர்த்தங்களும் வெளியிலுள்ள தீர்த்தங்கள் தேவிபட்டினம், திருப்புல்லாணி, பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் முதலான இடங்களில் உள்ளன.
இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற தலம்.
இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம்.
இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சன்னதியின் முதல் கிழக்கு பிரகாரத்தில் உள்ள சிறிய சன்னதியில் இருக்கிறது. இலங்கைமீது படையெடுத்து இராவணாதி அரக்கர்களை வென்று, அயோத்திக்குத் திரும்பும் வழியில், இராமபிரான் இராவணனைக் கொன்றதனால் ஏற்பட்ட பழியினைப் போக்கிக்கொள்வதற்கு இராமேஸ்வரத்தில் இறைவனை வழிபட்டார் என்றும், சீதாப்பிராட்டியினால் மணலில் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்றும் புராண வாயிலாக அறியப்படுகிறது. இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும்.
தல வரலாறு : இராமாயணப் போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் இராமேஸ்வரம் வந்தபிறகு, இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன் தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தனது வாலினால் இராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். இராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் இராமலிங்கத்திறகு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விசுவநாதர் எனப்படும். இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது.
கோவில் அமைப்பு : 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது. இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை. ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானக்கள் அமைந்திருக்கின்றன. சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு இரமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு இன்றும் காணலாம். சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் திரு உருவங்கள் காணலாம்.இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது. தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது சேதுபீடம் ஆகும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.
அம்பாள் கோவிலின் தென்மேற்கு மூலையில் சந்தான கணபதி சந்நிதியும், வட மேற்கு மூலையில் பள்ளி கொண்ட பெருமாள் சந்நிதியும் உள்ளன. சுவாமி சந்நிதியின் முதல் பிரகாரத்தில், விஷாலட்சுமியம்பிகை சந்நிதிக்கு அருகில் கோடி தீர்த்தம் உள்ளது. இப்பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் ஜோதிர் லிங்கத்தையும், தென் கிழக்கு மூலையில் அழகான சகஸ்ரலிங்கத்தையும் தரிசிக்கலாம்.
அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது.
இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும். முற்காலத்தில் தனுஷ்கோடியில் நீராடி அதன் பின்பு, ராமேஸ்வரம் வந்து தீர்த்தமாடும் வழக்கம் இருந்தது. தனுஷ்கோடி பல வருடங்களுக்கு முன்பு புயலில் அழிந்த பிறகு, கோயில் முன்புள்ள அக்னி தீர்த்தக்கடலில் நீராடும் வழக்கம் ஏற்பட்டது. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் சமுத்திரக் கரையில் தான் முன்னோர்களுக்கு தர்ப்பணங்கள், பிதிர்கடன்கள் நிறைவேற்றப்படுகின்றன. எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் யாத்ரிகர்கள் வந்து தரிசித்துச் செல்லும் புண்ணியத் தலம்.
ஒருசமயம் இக்கோயில் லிங்கம் மணலால் செய்யப்பட்டதல்ல என்றும், அப்படியிருந்தால் அபிஷேகத்தின் போது கரைந்திருக்க வேண்டும் என்றும் சிலர் வாதம் செய்தனர். அப்போது பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர், தண்ணீரில் எளிதில் கரையும் தன்மையுடைய உப்பில் ஒரு லிங்கம் செய்து, அதற்கு அபிஷேகம் செய்தார். அந்த லிங்கம் கரையவில்லை. அம்பாளை வணங்கும் தன்னால் பிரதிஷ்டை செய்த லிங்கமே கரையாதபோது, சீதாதேவி பிரதிஷ்டை செய்த லிங்கம் கரையாததில் ஒன்றும் அதிசயமில்லை என்று நிரூபித்தார்.
ராமேஸ்வரம் கடல், "அக்னி தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. சீதையின் கற்பை நிரூபிப்பதற்காக, அவளை அக்னி பிரவேசம் செய்யச் செய்தார் ராமர். சீதையைத் தொட்ட பாவம் நீங்க, அக்னிபகவான் இங்கு கடலில் நீராடி தோஷம் நீங்கப்பெற்றார். எனவே, இந்த தீர்த்தம் "அக்னி தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது.
குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள். அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்தார், இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது. இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது. தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள்.
பக்தர்கள் முதலில் தனுஷ்கோடி கடலில் நீராட வேண்டும். பின்னர் ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் பின்வரும் வரிசையில் நீராட வேண்டும்.
1.மகாலட்சுமி தீர்த்தம்: செல்வவளம்
2.சாவித்திரி தீர்த்தம்: பேச்சுத்திறன்
3.காயத்ரி தீர்த்தம்: உலகத்துக்கே நன்மை
4. சரஸ்வதி தீர்த்தம்: கல்வி அபிவிருத்தி
5. சங்கு தீர்த்தம்: வாழ்க்கை வசதி அதிகரிப்பு
6. சக்கர தீர்த்தம்: மனஉறுதி பெறுதல்
7. சேது மாதவ தீர்த்தம்: தடைபட்ட பணிகள் சுலபமாக முடிதல்
8. நள தீர்த்தம்
9. நீல தீர்த்தம்
10.கவய தீர்த்தம்
11.கவாட்ச தீர்த்தம்
12. கந்தமாதன தீர்த்தம்: எத்துறையிலும் வல்லுனர் ஆகுதல்
13. பிரம்மஹத்தி விமோசன தீர்த்தம்
14. கங்கா தீர்த்தம்
15. யமுனை தீர்த்தம்
16. கயா தீர்த்தம்
17: சர்வ தீர்த்தம்: எப்பிறவியிலும் செய்த பாவங்கள் நீங்குதல்
18. சிவ தீர்த்தம்: சகல பீடைகளும் ஒழிதல்
19. சத்யாமிர்த தீர்த்தம்: ஆயுள் விருத்தி
20. சந்திர தீர்த்தம்: கலையார்வம் பெருகுதல்
21. சூரிய தீர்த்தம்: முதன்மை ஸ்தானம் அடைதல்
22. கோடி தீர்த்தம்: முக்தி
சீதையை மீட்பதற்கு உதவி செய்த சுக்ரீவனுக்கு நன்றிக்கடனாக ராமர், அவனுக்கு அநீதி இழைத்த வாலியைக் கொன்றார். வாலி அழிவதற்கு, சுக்ரீவனும் ஒரு காரணமாக இருந்ததால் அவனுக்கு தோஷம் உண்டானது. தோஷ நிவர்த்திக்காக இங்கு ஒரு தீர்த்தம் உருவாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றான். இந்த தீர்த்தத்துடன் கூடிய சுக்ரீவன் கோயில், ராமநாதர் கோயிலில் இருந்து ராமர் பாதம் செல்லும் வழியில் 2 கி.மீ., தூரத்தில் இருக்கிறது. பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதி பிரகாரத்தில் சந்தான விநாயகர், சவுபாக்கிய விநாயகர் என இரண்டு விநாயகர்கள் அடுத்தடுத்து இருக்கின்றனர். இவர்களுக்கு காவி உடை அணிவிக்கப்படுகிறது.
பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட ஒரு பந்தலின் கீழ் இத்தலத்து நடராஜர் காட்சி தருகிறார். இவரது எதிரில் நந்தி இருக்கிறது. நடராஜர் சன்னதியின் பின்புறம் ஒரு கரம் மட்டும் உள்ளது. இதற்கு தினமும் பூஜை நடக்கும். இந்த சன்னதியில் நம் கண்ணுக்கு தெரியாமல் நாகவடிவில் மறைந்திருக்கும் பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்ளலாம்.
விபீஷணன், ராமருக்கு உதவி செய்ததன் மூலம் ராவணனின் அழிவிற்கு அவனும் ஒரு காரணமாக இருந்தான். இந்த பாவம் நீங்க, இங்கு லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவன், அவனது பாவத்தை போக்கியதோடு, ஜோதி ரூபமாக மாறி இந்த லிங்கத்தில் ஐக்கியமானார். இதுவே, "ஜோதிர்லிங்கம்' ஆயிற்று. இந்த லிங்கம் சுவாமி சன்னதி பிரகாரத்தில் மேற்கு நோக்கி இருக்கிறது. அந்தந்த சுவாமிக்குரிய விமான வடிவமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், முருகனின் 16 வடிவங்களையும் இங்கு தரிசிக்கலாம்.
விபீஷணன் தன் சகோதரன் ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்தது தவறு என்றும், அவளை ராமரிடமே ஒப்படைக்கும்படியும் புத்திமதி கூறினான். ராவணன் அதை ஏற்க மறுக்கவே, அவன் ராமருக்கு உதவி செய்வதற்காக ராமேஸ்வரம் வந்தான். அவனை தன் தம்பியாக ஏற்றுக்கொண்ட ராமன், இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே, இலங்கை வேந்தனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அந்த பட்டாபிஷேகம் நடந்த இடத்தில், ராமருக்கு கோயில் உள்ளது. ஆஞ்சநேயரும் அருகில் இருக்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் வங்காளவிரிகுடா, மன்னார்வளைகுடா ஆகிய இரு கடல்களுக்கும் மத்தியிலுள்ள தீவில் இக்கோயில் அமைந்துள்ளது. கருவறைக்கு பின்புறமுள்ள லிங்கோத்பவரின் எதிரில் பலிபீடம் உள்ளது வித்தியாசமான அமைப்பு.
காலை 5.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை, மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : சென்னை, மதுரை, திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : இராமேஸ்வரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு