கல்குளம்





	


	



























	




 




	








 




4:33:14 AM         Monday, February 09, 2026

கல்குளம்

கல்குளம்
கல்குளம் கல்குளம் கல்குளம் கல்குளம் கல்குளம் கல்குளம் கல்குளம் கல்குளம் கல்குளம் கல்குளம்
Product Code: கல்குளம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                           கல்குளம் நீலகண்டசுவாமித் திருக்கோவில்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலிருந்து 16 கி.மீ மேற்கே உள்ள ஊர் தக்கலை. இங்கிருந்து வடக்கே 1கி.மீ சென்றால் பத்மநாபபுரம் என்ற ஊர் உள்ளது. இந்த பத்மநாபபுரமே பண்டைய காலத்தில் கல்குளம் என்று அழைக்கப்படுகிறது

மூலவர் நீலகண்டேசுவரர்

சிவாலய ஓட்டம் : மகா சிவராத்திரி தினத்தன்று கன்யாகுமரி மாவட்டத்தில், பன்னிரண்டு சிவாலயங்களை தரிசித்து வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ என்ற நிகழ்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துவதே இந்த சிவாலய ஓட்டம் என்று சொல்லப்படுகிறது. 
தல வரலாறு : இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படியோர் உருவம் ஏற்றார் என்றும் சொல்வார்கள். புருஷாமிருகத்துக்கு விஷ்ணுவைப் பிடிக்காது. தனது எல்லைக்குள் யாராவது திருமால் நாமத்தைக் கூறினால் அவரைத் தாக்கிவிடும்.
தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது என்று நம்பியவன் பீமன். பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் சிவனும் அரியும் ஒன்று என்பதை உணர்த்த வேண்டும் என்பது ஸ்ரீகிருஷ்ணரது விருப்பம். தர்மர் ஒரு முறை ராஜசூய யாகம் நடத்தத் திட்டமிட்டார். எனவே, யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனைப் பணித்தார். அவனும் சம்மதித்தான். ஆனால், வைணவத்தை வெறுக்கும் அந்த புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி எனத் தயங்கினான்.
இதுவே தக்க தருணம் என நினைத்த ஸ்ரீகிருஷ்ணர், ‘‘பயப்படாதே பீமா. நான் உனக்குப் பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்தவுடன் புருஷாமிருகம் பூஜிக்க ஆரம்பித்து விடும். அப்போது நீ எளிதில் தப்பித்து விடலாம்’’ என்று கூறினார்.
ஸ்ரீகிருஷ்ணர் அளித்த பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகளுடன் காட்டுக்குச் சென்றான் பீமன். திருமலையில் ஒரு பாறைமீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று உரத்துக் கூறினான். இதனால் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே, பீமன் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அடுத்த கணமே அது சிவலிங்கமாக மாறியது. சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று குரல் எழுப்பினான். புருஷா மிருகம் பீமனைத் துரத்த ஆரம்பித்தது. பீமன் மீண்டும் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. இந்த இடமே திக்குறிச்சி.
இப்படி பதினோரு இடங்களைத் தாண்டி பன்னிரண்டாவது இடத்தில் திருநட்டாலம் ருத்திராட்சத்தைப் போடும்போது புருஷாமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது. அப்போது பீமனின் ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன், ‘‘உனது எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு!’’ என்றான் புருஷாமிருகத்திடம்.
அப்போது அங்கு வந்த தர்மரிடம் இருவரும் நியாயம் கேட்டனர். அவர் பாரபட்சம் கருதாமல், ‘‘ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால் பாதி உடல் புருஷாமிருகத்துக்கே’’ என்று தீர்ப்பு வழங்கினார். இதைக் கண்டு மகிழ்ந்தது புருஷாமிருகம். அந்த நேரத்தில் ஒளிப் பிழம்புடன் அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் ‘அரியும் சிவனும் ஒன்றே’ என்கிற தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜசூய யாகம் நடக்க உதவியது புருஷாமிருகம்.
புருஷாமிருகத்திடம் இருந்து தப்பிக்க பீமன் ருத்திராட்சங்களைக் கீழே போட அவை அனைத்துமே சிவலிங்கங்களாக மாறி, ஆலயங்கள் எழும்பின என்பார்கள்.
சூண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந் தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன், ‘நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விட வேண்டும்’ என்ற வரத்தைக்கேட்டான். சிவனும் அந்த வரத்தைக் கொடுத்தார். உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா? என்பதை அறிய சிவனின் தலையை தொடமுயன்றான். உடனே, சிவன் அங்கிருந்து, ‘கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்தவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார்.

இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொடச் செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ் வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சிவாலய ஓட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வது மிகச் சிறப்பானதாகும். 

மகா சிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிவார்கள். அன்றிலிருந்து விரதம் இருப்பர். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள். ‘கோவிந்தா கோபாலா’ என்று கோஷமிட்டவாறு திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவர். அந்த தொடர் ஓட்டத்தில் பன்னிரு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள். பன்னிரண்டாவது ஆலயமான திருநட்டாலத்தில் சந்தனமும் மற்ற ஆலயங்களில் திருநீறும் பிரசாதமாக வழங்கப்படும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.

சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர். சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா! கோபாலா!!’ எனச் சொல்லி ஓடுவர்.

பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.
இது சைவ வைனவ ஒற்றுமக்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா. இந்த விழாவின்போது பக்த்தர்கள் மொத்தம் 12 சிவன் கோவில்களை வரிசையாக ஓடி சென்று தரிசிப்பது வழக்கம். முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து இந்த ஓட்டம் துவங்குகிறது. வழியெல்லாம் கோவிந்தா கோபாலா என்று கோஷமிட்டபடி ஓடிவரும் பக்தர்களுக்கு பொதுமக்கள் வழி நெடுகிலும்,மோர்,குடிநீர் அன்னதானம் என வழங்கியபடி இருப்பர். முன்சிறையில் துவங்கும் ஓட்டம் அங்கிருந்து திக்குறிசி மகாதேவர் ஆலயம், திற்பரப்பு மகாதேவர் ஆலயம், திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை திம்பிலார்குடி மகாதேவர் கோவில், திருபன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர், மேலங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், கோழிப்போர்விளை பள்ளியாடி திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் ஆகிய சிவாலயங்களில் வழிபாடு செய்து 12 வதாக நட்டாலம் சங்கர நயினார் கோவிலுக்கு வந்து தங்கள் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வார்கள்.

கல்குளம்: மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்த்து வியந்த மார்த்தாண்டவர்மா மகாராஜா, தமிழக ஆலய அமைப்பின் சாயலில், முன்புறம் அழகுமிக்க கோபுரத்துடன் இந்த ஆலயத்தைக் கட்டியதாகச் சொல்கிறது தல வரலாறு. பன்னிரு சிவாலயங்களில் 7-வது கோவிலான கல்குளம் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவில் திருப்பன்னி பாகத்தில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள வளாகத்தில் சிவனுக்கும், அம்மனுக்கும் தனிக்கோவில்கள் உள்ளன. இரு கோவில்களையும் இணைக்கும் மண்டபம் உண்டு. பன்னிரு சிவாலயங்களில் அம்மனுக்கு தனிக்கோவில் இருப்பது இங்கு மட்டும் தான்.

இக்கோவிலின் மேற்கே தோட்டத்தில் உள்ள சிவன் ஆதிசிவன் எனப்படுகிறார். இந்த லிங்க உயரம் 160 சென்டி மீட்டர். இந்த சிவன் சுயம்புவாக வளர்ந்தவர். வேணாட்டரசர்கள் இங்கே இருந்தபோது தறிகெட்டு ஓடிய குதிரை ஒன்று இந்த கோவில் இருக்கும் இடத்துக்கு வந்து அடைபட்டு நின்றதாம். அரசன் குதிரை நின்ற இடத்தில் சுயம்புவான லிங்கத்தை கண்டான். அந்த இடத்தில் ஒரு கோவிலை கட்டினான்.

பன்றிப்பாகத்திலிருந்து 6 கி.மீ. தூரம் ஓடி, புகழ்பெற்ற பத்மனாபபுரம் கோட்டைக்குள் அமைந்துள்ள கல்குளம் நீலகண்டேஸ்வரர் ஆலயத்தை அடைகின்றனர். இங்கு ஆதிமூல மூர்த்தியாக 10 அடி உயர சிவலிங்கம் உள்ளது. மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பார்த்து வியந்த மார்த்தாண்டவர்மா மகாராஜா, தமிழக ஆலய அமைப்பின் சாயலில் முன்புறம் அழகு மிக்க கோபுரத்துடன் இந்த ஆலயத்தைக் கட்டியதாகக் கூறுகின்றனர். இங்கு நீலகண்டேஸ்வரர், சக்தி சந்நிதிகள் உள்ளன. அடுத்து பக்தர்கள் மேலாங்கோடு நோக்கி ஓடுகின்றனர்.

நாகர்கோவிலில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது பத்மநாபபுரம் அரண்மனை. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராகத் திகழ்ந்த ஊர் இது. இங்குள்ள கல்குளம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. கேரளப் பாணியிலும் தமிழ்நாட்டுப் பாணியிலும் கட்டுமானங்கள் அமைந்த கோயில் இது. மிகவும் பழமையான இந்தக் கோயிலில் ஏராளமான சிற்பங்களை நிறுவித் திருப்பணி செய்தவர் மன்னர் திருமலை நாயக்கர். கேரள மன்னரான மார்த்தாண்ட வர்மாவும் திருப்பணிகள் செய்து இந்த ஆலயத்தை அழகுப்படுத்தியிருக்கிறார். இங்கே பிராகாரத்தில் கையில் விளக்கு ஏந்திய அழகுப் பாவையர் சிலைகள் ஒரே வரிசையில் ஏராளமாக நிற்பது மிக அழகு.

இத்தலம் 12 சிவாலயங்களில் ஏழாவது சிவாலயம் ஆகும். சேர மன்னர்களின் தலைநகரமாக விளங்கியது கல்குளம. கோட்டையும் இன்றும் அழியாமல் நல்லமுறையில் பாதுகாத்து வரப்படுகிறது. இக்கோட்டை 186 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது வீரமார்த்தாண்டவர்மா மகாராஜாவின் காலம் வரை இது கல்குளம் என்று அழைக்கப்பட்டு வந்தது. மார்த்தாண்டவர்மா மகாராஜா பதவியேற்றதும் இவ்வரண்மனையில் தான். வேணாட்டின் தலைநகராக கல்குளம் விளங்கியது. மார்த்தாண்டவர்மாவின் முயற்சியால் இந்நாடு விரிவாக்கப்பட்டு திருவிதாங்கூர் இராஜ்யம் எனப் பெயரிட்டு கி.பி. 1744 இல் திருவனந்தபுரத்திலிருக்கும் பத்மநாப சுவாமிக்கு அர்ப்பணித்துத் தலைநகரத்தையும் திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். அதன் நினைவாக பத்மநாபபுரம் என்று கல்குளத்திற்கு பெயரிட்டதாகத் தெரிகிறது. 30 அடி உயரத்தில் கோட்டை மதில்கள் உள்ளன. 4 பெரிய கற்சுவர்களால் ஆன கோவில் ஆகும். 4 பெரிய வாசல்களும், 5 சிறிய வாசல்களும் உள்ளன.

திருத்தல அமைப்பு : இந்த கல்குள கோட்டையினுள் தான் நீலகண்டசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது மிகப்பெரிய கற்சுவரால் ஆனது. இங்குள்ள இறைவன் திருநீலகண்டர் என்று அழைக்கப்படுகிறார். கோயில் கிழக்குதிசை நோக்கியுள்ளது. குமரி மாவட்டத்தின் பன்னிரு சிவாலயங்களில் கோபுரத்துடன் காட்சியளிப்பது இத்தலம் ஒன்றே ஆகும். இங்குள்ள ஆதிமூல மூர்த்தியாக ஆதிமூலலிங்கம் ஒன்று உள்ளது. இது 10 அடி உயரத்தில் அமைந்துள்ளது.  கோயிலில் இடப்பக்கம் உள்ள பெரிய தெப்பக்குளம் அமைந்துள்ளது இங்கு ஆனந்தவல்லி அம்மன் சன்னதி ஒன்று உள்ளது மீனாட்சி அம்மன் போன்ற சிலையே இங்கு காணப்படுகிறது. மீனாட்சி அம்மனின் கையில் கிளி இருக்கும். ஆனால் இங்கு ஆனந்தவல்லி அம்மன் கையில் புச்செண்டு உள்ளது கோயிலின் வெளிபிரகாரத்தில் சாஸ்தா கோவில் உள்ளது. இடதுபுறம் கர்ணன், சிவன், விஷ்ணு, பரசுராமன், ஸ்ரீராமன், அர்ச்சுனர் ஆகியோர் சிலைகள் காணப்படுகின்றன.

விழாச்சிறப்பு : ஒவ்வொரு மாதத்திலும் திருவிழாக்கள் நடைபெற்று வந்துள்ளன. சித்திரை மாதம் பெளர்ணமி விழாவும், ஆடிச் செவ்வாய் அம்மனுக்கு விழாவும் நடைபெறுகிறது. ஆடிச்செவ்வாய் பெண்கள் அதிகமாக வந்து அம்மனை வழிபட்டுச் செல்கின்றனர். ஆவணி மாதம் திருவோண விழாவும், புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவும் நடைபெற்று வருகின்றன. கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை விழாவும், மார்கழி மாதம் திருவாதிரை விழாவும், தை மாதம் திருக்கல்யாணமும், மாசி மாதம் சிவராத்திரி விழாவும், பங்குனி மாதம் பங்குனித்திருவிழாவும் ஆராட்டும் நடைபெறுகிறது. மன்னர்களால் கட்டப்பட்டு சிறந்த முறையில் அமைக்கப்பட்ட இக்கோவில் மன்னர்களால் மானியம் வழங்கப்பட்டு எல்லா விழாக்களும் நல்லமுறையில் நடைபெற்று வருகிறது.

கோயில் காலை 5.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்

அருகிலுள்ள ரயில் நிலையம் :நாகர்கோயில்

பேருந்து வசதி  : உண்டு 

உணவு வசதி : இல்லை

தங்கும் வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×