திருத்தல அமைவிடம் : இந்தியாவின் புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மணல் குளத்து விநாயகர் என்ற பெயர் மருவி மணக்குள விநாயகர் ஆனது என்றறியப்படுகிறது. புதுச்சேரியின் சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. புகழ் பெற்ற விநாயகர் கோயில்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும் கோவிலின் உட்பகுதின் மேற்கூரையில் விநாயகர் பற்றிய பல வண்ண படங்கள் வரையப்பட்டு காண்பவரை அளவில்லா இன்பத்தில் ஆழ்த்தும். கோவில் சுற்றுபுற சுவர்களில் அதைபோல் பல வண்ண படங்கள் வரையப்பட்டு உள்ளது.
மூலவர் : மணக்குள விநாயகர்
தல விருட்சம்: வில்வம்
சிறப்பு : விநாயகர் தலங்களில் வேறு எங்குமே இல்லாத சிறப்பாக பள்ளியறை இங்கு உள்ளது. இங்கு பள்ளியறையில் விநாயகரோடு உடன் இருப்பது அவரது தாயார் சக்தி தேவியார் ஆவார். தினமும் நைவேத்தியம் முடிந்தவுடன் விநாயகர் பள்ளியறைக்கு செல்வார். இதன் அடையாளமாக பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ மூர்த்தி கொண்டு செல்லப்படுகிறது.
தலவரலாறு : பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சிகாலத்தில் கி.பி.1688ல் பிரெஞ்சுகாரர்கள் தங்களுக்காக கோட்டை ஒன்று கட்டினர். இங்கோட்டைக்கு பின்புறம் அமைந்திருந்த கோயிலே மணக்குள விநாயகர் திருக்கோயில். இத்திருத்தலத்தின் மேல் பகுதியில் ஒரு குளம் இருந்ததாகவும் அது கடற்கரைக்கு அருகில் இருந்ததால் அவ்விடத்தில் மணல் அதிகமாக வந்ததாகவும் ஆகவே அக்குளத்திற்கு மணற்குளம் என்று பெயர் வந்ததாகவும் உறுதியாகச் சான்றுகளுடன் கூறுவர். இந்த மணற்குளத்தின் கீழ்க் கரையில் தான் விநாயகர் ஆலயம் எழுப்பப் பட்டிருக்கின்றது. இதன் காரணமாக இந்த ஆலயத்திற்கு மணற்குள விநாயகர் ஆலயம் என்ற பெயர் வந்தது.
தலப்பெருமை : அகில இந்திய அளவில் விநாயகருக்கு கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட கோயில் இந்த கோயில் மட்டுமே. உற்சவர் வில்புருவமும் மூன்று பதமாகவும் நிற்கிறார். வேறு எங்குமே பார்த்திர முடியாத சிறப்பு இது. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும்தான் திருக்கல்யாணம் நடக்கிறது. இங்கு சித்தி புத்தி அம்மைகள் மனைவியாக உள்ளனர். சிவதலங்களில் இருக்கும் நடராஜரைப் போல் நர்த்தன விநாயகர் இங்கு இருக்கிறார். தொல்லைக் காசு சித்தர் இந்த மணக்குளத்து விநாயகரை வணங்கியுள்ளார். பாரதி, அரவிந்தர் அன்னை ஆகியோர் இத்தலத்தின் தீவிர பக்தர்களாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு தினந்தோறும் அன்னதானம் நடைபெறுகிறது. மூன்று வேளையும் பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள்.
கிணற்றின் மீதுதான் மூலவர் : தற்போது மூலவரான மணக்குளத்து விநாயகர் இருக்கும் பீடம் இருப்பதே நீர் நிலை அமைந்துள்ள ஒரு கிணறு அல்லது குளத்தின் மீதுதான் என்பது இத்தலத்தை நன்கு அறிந்த பலருக்கும் தெரியாத செய்தி. பீடத்தின் இடப்பக்கம் மூலவருக்கு மிக அருகில் அரை அடி விட்டத்தில் ஒரு ஆழமான குழி செல்லுகிறது. அதில் தீர்த்தம் உள்ளது. இதன் ஆழம் கண்டுபிடிக்க முடியவிலலை. சென்றுகொண்டே இருக்கிறது. இதில் வற்றாத நீர் எப்போது உள்ளது. இது முன்காலத்தில் இருந்த குளமாவும் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள். இது தவிர மாதந்தோறும் சங்கடகர சதுர்த்தி தினத்தின் போது மூலவருக்கு அபிடேக ஆராதனைகள் மிக விமரிசையாக நடக்கும்.
கல்யாணவரம், குழந்தை வரம் உள்ளிட்ட எந்த காரியமானாலும் இவரை வணங்கினால் நன்மை கிடைக்கிறது. தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், கல்யாண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு பெருமளவில் வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில் இந்து மதம் என்றில்லாமல் இசுலாம், கிறித்தவ மதத்தை சார்ந்தவர்களும் வெளிநாட்டினரும் பெருமளவில் இங்கு வந்து வழிபடுகிறார்கள்.
தரிசன நேரம் : கோவில் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : புதுச்சேரி
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுச்சேரி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு