மணிகண்டேஸ்வரர் கோவில், திருமாற்பேறு
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் காஞ்சிபுரம் என்னும் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்திற்கு வடமேற்கே அரக்கோணம் செல்லும் ரயில் பாதையில் 12 கி.மீ. தொலைவில் திருமாற்பேறு ரயில்நிலையம் உள்ளது. இங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இது திருமால்பூர் என்று வழங்கப்படுகிறது.
சுவாமி : மால்வணங்கீசர், தீண்டச் சிவந்தார். மணிகண்டேசுவரர், தயாநிதீசுவரர், பரவாளேசுவரர், பவளமலையார்
அம்பிகை : அஞ்சனாட்சி, கருணை நாயகி, கருணாம்பிகை
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சக்கர தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 4, திருஞானசம்பந்தர் - 2
திருத்தலச் சிறப்புகள்: இது அம்பிகை, திருமால், சந்திரன் பூசித்த பதி. மேலே குறிப்பிட்ட இறைவன் திருநாமங்களை ஓதி வழிபடுவோர்க்கு நலம் உண்டாகும் என்று காஞ்சிப்புராணம் சாற்றுகிறது. திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம். இத்தலம் 'ஹரிசக்ரபுரம்' எனவும் வழங்கப்படுகிறது. திருமால் ததீசி முனிவருடன் போர் செய்யும்பொழுது அவர் சக்கரம் வாய்மடிந்து போயிற்று. சலந்தரனைக் கொன்ற சக்கரம் சிவனிடமிருப்பதை அறிந்த திருமால் இத்தலத்திற்கு வந்து இறைவனை ஆயிரம் தாமரை கொண்டு அர்ச்சிக்க சிவன் ஒருநாள் ஒரு மலரை மறைத்துவிட்டார். திருமால் அதற்குப் பதிலாக தம் கண்ணை மலராக கொடுத்து அர்ச்சிக்க சுதர்சனம் என்னும் சக்கரத்தை கொடுத்தார். கண் இடர்ந்து அர்ச்சித்தமையால் 'பதுமாசஷன்' என்ற நாமத்தையும் வழங்கினார். சோமனும் பூசித்து பேறு பெற்ற தலம்.
சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். நந்தி நின்ற திருக்கோலத்தில் இறைவனின் உள்சுற்றில் இருக்கின்றார். இறைவன் சந்நிதியில் திருமால் கூப்பிய கையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தின் தலவிருட்சமான வில்வம் இறைவி சந்நிதிக்கு போகும் வழியில் வெளிச்சுற்றில் இருக்கிறது. இறைவன் தீண்டாத்திருமேனி. இத்தலத்தில் திருமால் சக்கரப் படை பெற்றமையால் இத்தலம் 'திருமாற்பேறு' எனவாயிற்று. இத்தலத்தில் விநாயகர், முருகர், நடராஜர், கஜலட்சுமி, சூரியன், நால்வர், சிதம்பரேசுவரர், வீரபத்திரர், பைரவர், சந்திரன், முதலிய சந்நிதிகள் உள்ளன. மேலும் இத்தலத்தின் ஒருபுறம் பத்துக் கரங்களோடு வல்லபை கணேசர் காட்சி தருகிறார்.
பிராகார வலம் முடித்து படிகளேறி மூலவர் கருவறை நோக்கி செல்லும் போது வாயிலின் இருபுறம் துவாரபாலகர்கள் உள்ளனர். ஒருபுறம் வல்லபை விநாயகர் பத்துக்கரங்களுடன் காட்சி தருகின்றார். இது அபூர்வ அமைப்பாகும். மறுபுறம் சண்முகர் உள்ளார். நடுவில் மூலவரைப் பார்த்தவாறு மகா விஷ்ணு கூப்பிய கரங்களுடன் காட்சி தருகின்றார். மேலே விமானம் உள்ளது. அவருக்கு முன் நந்தி உள்ளது. சந்நிதி வாயிலைக் கடந்து உள் மண்டபத்தை அடையலாம். இங்குள்ள தூண்களில் தட்சிணாமூர்த்தி, சூரியன், மகாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், விநாயகர், முருகன், நான்கு முகங்களும் நன்கு தெரிய பிரம்மா, அம்பாள் வில்வ மரத்தடியில் இறைவனை வழிபடுவது, காளிங்கநர்த்தனம், காமதேனு, பைரவர், வீரபத்திரர் ஆகிய பல வகையான அரிய சிற்பங்கள் உள்ளன. நடராசர் தெற்கு நோக்கியுள்ளார். எதிரில் வாயில் உள்ளது. நடராஜ சபையில் மாணிக்கவாசகரும் சிவகாமியும் உடன் எழுந்தருளியுள்ளனர். நேரே மூலவர் தரிசனம். கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். துர்க்கை அஷ்டபுஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அழகாகக் காட்சி தருகின்ற திருமேனி. சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. மூலவருக்கு எதிரில் உள்ள மகாவிஷ்ணுவுக்குத் தீபாராதனை முடிந்த பின்பு சடாரி சார்த்தி தீர்த்தம் தரும் மரபு உள்ளது.
காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : திருமாற்பேறு
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை