தெய்வநாதேஸ்வரர் கோவில், இலம்பையங்கோட்டூர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கூவம் (திருவிற்கோலம்) என்னும் தலத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. ஸ்ரீபெரும்புத்தூரிலிருந்து மேற்கே 25 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து செல்லம்பட்டிடை செல்லும் பேருந்தில் சென்று அங்கிருந்து 1 கி.மீ. தொலைவில் சென்றால் இத்தலத்தை அடையலாம். சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் மார்கத்தில் உள்ள கடம்பத்தூரில் இறங்கி, அங்கிருந்து பேரம்பாக்கம் சென்று பின் ஆட்டோ மூலம் சென்று இத்தலத்தை அடையலாம்.
சுவாமி : அரம்பேசுவரர், தெய்வநாயகப் பெருமான், சந்திரசேகரர்
அம்பிகை : கனக குஜாம்பிகை, கோடேந்துமுலையம்மை
தலமரம் : வில்வம், மல்லிகை
தீர்த்தம் : சந்திர தீர்த்தம், மல்லிகை தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
திருத்தலச் சிறப்புகள் : சுவாமி முதற்கண் பாலராகவும், அடுத்து விருத்தராகவும் பின்பு பசுவாகவும் உருகொண்டு திருஞான சம்பந்தருக்கு வழி காட்டியதாகச் சாற்றப்படுகின்றது. இதனைத் தேவாரப் பாடல் வாயிலாக அறியலாம். திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம்.
கோவில் அமைப்பு: இந்த ஆலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றால் பலிபீடமும், அதிகார நந்தி மண்டபம் உள்ளன. இத்தலத்தில் கொடிமரம் இல்லை. வெளிப் பிரகாத்தில் இடதுபுறம் அரம்பை வழிபட்ட அரம்பேஸ்வரர் 16 பட்டைகளுடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறையில் இறைவன் தெய்வநாதேஸ்வரர் கிழக்கு நோக்கு லிங்க உருவில் காட்சி தருகிறார். ஆலயத்திற்கு ஒரு பிரகாரம் மட்டுமே உள்ளது. பிரகாரம் வலம் வருகையில் குருந்த விநாயகர் சந்நிதி, வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகர் சந்நிதி, பைரவர் சந்நிதி ஆகியவை உள்ளன. கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், அவரை அடுத்து தட்சிணாமூர்த்தி, கருவறை பின்புறம் லிங்கோத்பவருக்கு பதில் அவ்விடத்தில் மகாவிஷ்ணு, அடுத்து பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் உள்ளனர். இங்குள்ள தட்சிணாமூர்த்தி யோக தட்சிணாமூர்த்தியாக சின் முத்திரையை இதயத்தில் வைத்து காணப்படுகிறார். வலது காலை மடித்து பீடத்தில் வைத்து, இடது கையை ஆசனத்தில் அழுத்திக் கொண்டு, கணகளை மூடிக் கொண்டு கல்லால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்களோடு, பாதத்தில் முயலகன் அழுந்திக் கிடக்க மிக அமைதியாக அமர்ந்திருக்கின்ற இவரது சிற்பம் பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும். அம்பாள் கனககுசாம்பிகை என்ற திருநாமத்துடன் தெற்கு நோக்கியபடி தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.
இத்தல இறைவன் ஒரு சுயம்பு லிங்கமாகும், மூலவர் தீண்டாத் திருமேனி. பெரிய ஆவுடையார் அடிப்பாகம் பத்மம் போன்ற அமைப்பில் காணப்படுகிறது. இவ்வாலயத்திற்கு வெளியே இருபுறமும் திருக்குளங்களாக இத்தலத்தின் தீர்த்தங்களான மல்லிகை தீர்த்தமும், சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன. தட்சனால் சாபம் பெற்ற சந்திரன் இங்குள்ள மல்லிகை திர்த்தத்தில் நீராடி இறைவனை வணங்கியுள்ளான்.
வருடத்தில் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி முதல் 7-ம் தேதி வரையிலும், செப்டம்பர் மாதம் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையிலும் சூரியனின் ஒளிக்கற்றைகள் சுவாமி மீது படுகின்றன. தேவர்கள் வழிபட்ட தெய்வநாதேஸ்வரரை வணங்கிட தோஷங்கள் நீங்கும். குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யோக தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் குரு பெயர்ச்சி, மகா சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், திருக்கார்த்திகை, ஆடிப்பெருக்கு போன்றவை இக்கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இத்தலத்தில் அரம்பையர்களான தேவ மாதர்கள் பூசித்துப் பேறு பெற்றனர். அரம்பையாதியர் பூசித்து பேறுபெற்றதால் அரம்பையங்கோட்டூர் இலயம்பையங்கோட்டூர் என மருவியது. குருந்த விநாயகர், யோக தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மன், துர்க்கை, சுப்பிரமணியர், அரம்பை நாதர் முதலிய சந்நிதிகள் உள்ளன. திருவிற்கோலத்து இறைவன் போல் இங்கும் இறைவன் தீண்டாத் திருமேனியாக உள்ளார்.
காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். ஆலய குருக்கள் வீடு அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்யலாம்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
ரயில் நிலையம் : கடம்பத்தூர்
பஸ் வசதி : இல்லை
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை