காளத்தியப்பர் கோயில், திருக்காளத்தி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் காளஹஸ்தி என்னும் பெயரில் இத்திருத்தலம் உள்ளது. சென்னையிலிருந்து 110 கி.மீ. தொலைவில் உள்ள தலம். திருப்பதியிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருப்பதி ஆகிய முக்கிய நகரங்கலிலிருந்து இத்திருத்தலத்திற்கு பேருந்து செல்கின்றன.
சுவாமி : காளத்தி நாதர், குடுமித் தேவர்
அம்பிகை : ஞானப் பூங்கோதை, ஞானப் பிரகன்னாம்பிகை
தலமரம் : வில்வ மரம், கல்லால மரம்
தீர்த்தம் : பொன்முகலி ஆறு
திருத்தலச் சிறப்புகள்: இது பஞ்ச பூதத்தலங்களுள் வாயுத்தலம். மூவர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலம். நக்கீர தேவ நாயனார் கயிலை பாதி, காளத்தி பாதி என்று பாடியுள்ள சிறப்புப் பெற்ற தலம். இத்திருத்தலத்தில் சுவர்ணமுகி எனப்பெறும் பொன்முகலி ஆறு செல்கிறது. இது வடக்கு நோக்கிச் செல்வதால், உத்தரவாகினி என்னும் சிறப்புடையது. இத்தலத்திற்குத் 'தக்ஷிண கைலாசம்' என்று ஒரு பெயரும் உண்டு. தட்சிணா (தென்) கயிலாயம் என்னும் சிறப்புடையது. சுவர்ணமுகி எனப்படும் பொன்முகலி ஆற்றின் கரையில் உள்ள தலம்.
பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவில் கட்டிய இராஜராஜ சோழன் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும். இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.
இறைவன் சந்நிதியில் எரியும் திருவிளக்குகளில் ஒன்று எப்போதும் காற்றால் மோதப்பட்டது போல் அசைந்து கொண்டே இருக்கின்றது. இறைவன் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பொன்முகலியாறு ஓடுகின்றது. சீ-சிலந்தி: காளம் - பாம்பு: அத்தி - யானை: இம்மூன்றும் வழபட்டதால் 'சீகாளத்தி' என்று பெயர் பெற்றது. இத்தலத்தின் வடக்கில் துர்க்கை மலையும் தெற்கில் கண்ணப்பர் மலையும் கிழக்கில் குமரக்கடவுள் மலையும் அமைந்துள்ளது.
சிவபெருமானிடம் பேரன்பு பூண்ட 63 நாயன்மார்களுள் கண்ணப்ப நாயனாரும் ஒருவர். கண்ணப்ப நாயனார் இப்பெருமானை வணங்கி ஆறு தினங்களில் முக்திப் பேறு பெற்றார். சிவலிங்கத் திருமேனியின் கண்ணில் இரத்தம் கசிவதைப் பொறுக்காது கண்ணப்ப நாயனார் தன் கண்ணை அம்பால் இடந்து அப்பிய தலம். சிலந்தி, பாம்பு, யானை ஆகிய மூன்றும் வழிபட்டுப் பேறு பெற்ற தலம். இது ராகு, கேது ஸ்தலமாகும். தோஷ நிவர்த்தி செய்யப்படும் சிறப்புத் தலமாக உள்ளது. இங்கு அகத்தியர் வழிபட்ட பாதாள விநாயகர் சந்நிதி தனியாக உள்ளது. 35 அடி ஆழத்தில் 20 படிகள் இறங்கிச் சென்று தரிசிக்க வேண்டும். நவக்கிரகங்கள் சுவாமிக்குக் கவசம் ஆகும் நிலையில் ஒன்பது பகுதிகளுடன் கூடிய ஏணி ரூபத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். ஓவ்வொரு படியிலும் மூன்று நக்ஷத்திரங்களாக 27 நக்ஷத்திரங்களும் மூல விக்ரஹத்தில் அடங்கியிருப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். சுவாமியின் நாக ரூபம் ராகுவாகவும், அசையும் தீபம் கேதுவாகவும் கருதப்படுகிறது. காளஹஸ்தி க்ஷேத்திரம் ஓர் நவக்கிரஹ தோஷ நிவர்த்தி தரும் நவக்கிரக் கோவில்.
வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் திருக்காளத்திப் புராணம், சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. அப்பர் இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார்.
வரலாறு : இந்தியாவில் வாயு கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே கோயிலான காளஹஸ்தி கோயில் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவருமான இராசேந்திர சோழன் கட்டிய கோவிலாகும்.மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று. சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக் கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக்கோயிலில் உள்ளன. சோழர்களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக்கோயிலுக்கு அளித்துள்ளனர்.
பல்லவர் காலத்தில் இருந்த இக் கோயிலை 10 ஆம் நூற்றாண்டளவில் சோழர்கள் திருத்தி அமைத்தனர். முதலாம் குலோத்துங்க சோழன், தெற்குவாயிலில் அமைந்துள்ள கலிகோபுரத்தை அமைப்பித்தான். மூன்றாம் குலோத்துங்க சோழனும் சில சிறு கோயில்களை இங்கு எடுப்பித்துள்ளான். 12 ஆம் நூற்றாண்டில் மன்னன் வீரநரசிம்ம யாதவராயன் தற்போதுள்ள சுற்று வீதிகளை அமைப்பித்ததுடன், நாற்புறமும் நான்கு கோபுரங்களையும் கட்டுவித்தார். கிபி 1516 ஆம் ஆண்டைச் சேர்ந்த விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயனின் கல்வெட்டு ஒன்றின்படி, அவர் நூறுகால் மண்டபமொன்றையும் மேற்குப் புறக் கோபுரத்தையும் கட்டுவித்ததாகத் தெரிகிறது.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காளஹஸ்தி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு