ஓணகாந்தேஸ்வரர் கோவில், திருவோணகாந்தன்தளி
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்னும் மாநிலத்தில் உள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரான காஞ்சிபுரத்தினுள் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு மேற்கே சருவ தீர்த்தத்திற்கு வடமேற்கில் சுமார் 1 கி.மீ தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை மின் நிலையம் அருகில் உள்ளது.
சுவாமி : ஓணகாந்தீசுவரர்
அம்பிகை : காமாட்சியம்மை
பதிகம் : சுந்தரர் - 1
திருத்தலச் சிறப்புகள்: சுந்தரர் திருப்பதிகம் பாடிப் பொன் பெற்ற திருவூர். வாணாகரனுடைய படைத் தலைவர்களாகிய ஓணன், காந்தன் வழிபட்ட திருவூர். இங்கு மூன்று சன்னிதிகள் உள்ளன. ஓனன் வழிபட்ட சிலையும், காந்தன் வழிபட்ட சிலையும், சலந்தரன் வழிபட்ட சிலையும் இங்கு இருக்கின்றன.
வாணாசுரன் என்ற அரசனுடைய சேனாதிபதிகளான ஓணன், காந்தன் என்னும் அசுரர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற காரணத்தால் இத்தலம் ஓணகாந்தன்தளி என்று பெயர் பெற்றது. 3 நிலை இராஜ கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி தருகிறது. ஆலயத்தினுள் மூன்று கருவறைகளும், மூன்று சிவலிங்கங்களும் உள்ள சிறப்பு மிக்க ஆலயம் இதுவாகும். கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நேரே பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. ஓணன், காந்தன் இவ்விருவரும் வழிபட்ட ஓணேஸ்வரர், காந்தேஸ்வரர் ஆகிய இரு சிவலிங்கத் திருமேனிகளும் கோயிலில் அடுத்தடுத்து தனிச் சந்நிதிகளாக உள்ளன.
முதல் சந்நிதியில் ஓணேஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மூலவரின் பின்புறம் கருவறைச் சுற்றில் சிவன் உமையம்மையின் திருமணக் கோலத்தைக் காணலாம். ஓணேஸ்வரர் சந்நிதி அர்த்த மண்டபத்தில் சுந்தரர் மற்றும் இறைவனின் திருப்பாத தரிசனம் காணலாம். அடுத்து 2-வது சந்நிதியில் காந்தேஸ்வரர் தரிசனம் தருகிறார். 3-வது கருவறையில் சலந்தரன் வழிபட்டதாகச் சொல்லப்படும் சலேந்தரேஸ்வரர் சிவலிங்கத் திருமேனி தனியே சிறு கோவிலாக உள்ளது. இது பிற்காலப் பிரதிஷ்டையாகும். இத்தலத்திலுள்ள வயிறுதாரிப் பிள்ளையார் சந்நிதியை சம்பந்தர் தனது பதிகத்தின் 2-வது பாடலில் குறிப்பிடுகிறார். இது தவிர மற்றொரு விநாகயரான ஓங்கார கணபதியும் காந்தேஸ்வரர் சந்நிதியில் வெளியே காணப்படுகிறார். இவரின் சிலையில் பக்தியுடன் காது வைத்துக் கேட்டால் ஓம் என்ற ஒலி மெல்லிய அளவில் கேட்பதாக சொல்லப்படுகிறது. இத்தலத்தில் தட்சினாமூர்த்தி சனகாதி முனிவர்கள் உடன் இருக்க வலது காலை முயலகன் மீது வைத்தபடி காட்சி தருகிறார். முருகர் தனது மயில் வாகனத்தில் அமர்ந்தபடி தனது இரு தேவியர் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மனே பிரதான அம்பாளாக வீற்றிருப்பதால் இத்தலத்திலுள்ள சிவன் ஆலயங்களில் அம்பாளுக்கு என்று தனி சந்நிதியில்லை. திருஓணகாந்தன்தளி ஆலயத்திலும் அம்பாள் சந்நிதி தனியாக இல்லை. கோவிலுக்கு வெளியே தான்தோன்றி தீர்த்தம் உள்ளது. வன்னி மரமும், புளிய மரமும் இத்தலத்தின் தல விருட்சங்களாகும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு