முல்லைவன நாதர் கோவில், தென்திருமுல்லைவாசல்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. சீர்காழியில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 7வது தலம் ஆகும்.
சுவாமி : முல்லைவனநாதர், மாசிலாமணீசர் , யூதிகா பரமேஸ்வரர்
அம்பிகை : அணிகொண்ட கோதையம்மை,சத்தியானந்த சவுந்தரி
தல விருட்சம் : முல்லை
தீர்த்தம் : பிரம்ம, சந்திர தீர்த்தங்கள்
பதிகம் : திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள் : பஞ்சாட்சர மந்திரம் பற்றி அறிந்து கொள்ள இங்குள்ள முல்லைவன நாதரை அம்மன் வழிபட்டதால், சிவபெருமான் குருவாக இருந்து அம்மனுக்கு உபதேசித்தார். எனவே இத்தலத்தில் சிவன் குருவாக வீற்றிருக்கிறார். உமாதேவி வழிபட்டுத் தட்சிணாமூர்த்தியிடம் ஐந்தெழுத்து உபதேசம் பெற்ற தலமாதலால் இங்கு பள்ளியறையும், பூஜையும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. சூரிய, சந்திர கிரகணம், அமாவாசை காலங்களில் இங்கு வந்து பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு மறு பிறப்பில்லை என்பது ஐதீகம். இத்தலத்தில் வாயு திசையிலுள்ள கிணற்றில் கங்கை நித்திய வாசம் செய்கிறாள். அக்னி திசையிலுள்ள பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி சந்திரன் தனக்கிருந்த் நோயைப் போக்கிக் கொண்ட தலம் இதுவாகும்.
தல வரலாறு : கரிகால் சோழனின் பாட்டனார் முதலாம் கிள்ளி வளவன் சரும நோயால் மிகவும் வேதனைப்பட்டான். நோய் தீர வேண்டுமானால் சிவத்தலம் ஒன்றில் உள்ள தீர்த்தத்தில் நீராட வேண்டுமென அரண்மனை வைத்தியர்கள் கூறினர். நோய் தீர தன் பரிவாரங்களுடன் இத்தலத்தின் அருகில் உள்ள கடலில் நீராட வந்தான். அப்போது இந்த பகுதி முழுவதும் முல்லை கொடிகளாக இருந்தது. எனவே இவர்கள் வந்த குதிரையின் குளம்பு முல்லை கொடிகளில் சிக்கிக் கொண்டது. அதற்கு மேல் குதிரைகளால் நகர முடியவில்லை. முல்லைக் கொடிகளை கிள்ளிவளவன் வாளால் வெட்டும் போது, அதன் கீழேயிருந்த சுயம்பு மூர்த்தியின் மீது பட்டு இரத்தம் பெருகியது. அதிர்ச்சியடைந்த கிள்ளிவளவன், ஏதோ ஒரு உயிரை வெட்டி விட்டோமே என பார்க்க, அங்கே லிங்கம் ஒன்று ரத்தம் வழிய காட்சியளித்தது. தெரியாமல் மாபெரும் தவறு செய்து விட்டோமே என வருந்திய மன்னன், தன்னைத்தானே வெட்ட முற்பட்டான். உடனே ஈசன் பார்வதியுடன் ரிஷபாரூடராக காட்சி தந்து கிள்ளிவளவனை காப்பாற்றினார். எனவே தான் இத்தலத்திற்கு திருமுல்லை வாசல் என்று பெயர் வந்தது. லிங்கத்தில் வாளால் வெட்டுப்பட்ட காயத்தழும்பை காணலாம்.
திருமுல்லைவாயில் என்ற பெயரில் இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் இருக்கின்றன. இவற்றை வேறுபடுத்திக் காட்ட தொண்டை நாட்டில் உள்ள சிவஸ்தலம் வடதிருமுல்லைவாயில் என்றும், காவிரியின் வடகரையில் சீர்காழிக்கு அருகில் உள்ள சிவஸ்தலம் தென்திருமுல்லைவாசல் என்றும் குறிப்பிடப்படுகின்றன.
கோவில் அமைப்பு : உப்பனாற்றின் வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலை நேரே பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபத்தைக் காணலாம். ஒரு பிராகாரத்துடன் விளங்கும் இவ்வாலயத்தின் இறைவன் முல்லைவனநாதர் மூன்றரை அடி உயரத்தில் பெரிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு மாணிலாமணி ஈஸ்வரர், யூதிகா பரமேஸ்வரர் என்ற பெயர்களும் உண்டு. உள் பிராகரத்தில் வரசக்தி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய ஷண்முக சுப்பிரமணியர், தட்சிணாமூர்த்தி, பைரவர், திருஞானசம்பந்தர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. தட்சிணாமூர்த்தியின் திருவுருவம் மிக அழகாக உள்ளது.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : உண்டு