வடமூலநாதர் கோவில், திருப்பழுவூர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், அரியலூர் திருவையாறு சாலை வழித்தடத்தில் அரியலூரிலிருந்து தெற்கே சுமார் 12 கி.மீ. தொலைவிலும், திருவையாறில் இருந்து வடக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது. திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு ஆகிய இடங்களில் இருந்து கீழப்பழுவூர் வர பேருந்து வசதிகள் உள்ளன.
சுவாமி : ஆலந்துறையார், வடமூலநாதர், வடமூலேஸ்வரர்
அம்பாள் :அருந்தவநாயகி, ஸ்ரீயோக தபஸ்வினி
தல மரம் : ஆலமரம்
தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், கொள்ளிடம்
பதிகம் : திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள் : கருவறையுள் கருணாமூர்த்தியாய் மூலவர் ஸ்ரீவடமூலநாதர் அருள்பாலிக்கின்றார். புற்று வடிவாய், மண் லிங்கமாக சதுர ஆவுடையாரின் நடுவே அபூர்வ தோற்றத்துடன் அருட்காட்சி தருகிறார். புற்று மண்ணால் ஆன சிவலிங்கமானதால் இவருக்கு அபிஷேகத்தின்போது குவளை சாற்றப்படுகின்றது. மிகவும் அரிய தரிசனம் இது. இடை மண்டபத்தின் வலப்புறத்தில், அன்னை இங்கு அருந்தவம் புரிந்ததன் அடையாளமாக தவக்கோலத்தில் இருக்கும் தவசம்மன் ஸ்தாபிக்கப்பட்டுள்ளாள்.
கோவில் அமைப்பு : தலமரமாக ஆலமரம் விளங்குவதால் பழுவூர் என்று பெயர் பெற்றது. இவ்வூர் மேலப்பழுவூர், கீழைப்பழுவூர் என்ற இரு பிரிவாக உள்ளது. இந்த சிவாலயம் ஒரு முகப்பு வாயிலுடனும், அதையடுத்து கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடனும் காட்சி அளிக்கிறது. முகப்பு வாயிலின் இருபுறமும் நந்திதேவர் வீற்றிருக்கிறார். ராஜகோபுரத்தைக் கடந்தால் கொடிமரம், பலிபீடம், நந்தி உள்ளது. வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. அம்பாள் சந்நிதி ஒரு சுற்றைக் கொண்டு தனிக் கோவிலாகவே காணப்பெறுகிறது. அம்பாள் இங்கு ஸ்ரீயோக தபஸ்வினி என்னும் திருநாமம் கொண்டு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தமிழில் இந்த அம்பாளுக்கு அருந்தவ நாயகி என்று பெயர். மகாதபஸ்வினி என்று அம்பிகை துதிக்கப்படுகிறாள். யோகக் கலையையும் திருமண வரத்தையும் ஒருசேர அளிப்பவள் இவள். அகிலாண்ட நாயகியாம் அன்னை பார்வதிதேவி ஆதியில் தவம் புரிந்த புண்ணிய திருத்தலம் திருப்பழுவூர். இதன் காரணமாக இத்தலம் யோக வனம் எனப்பட்டது.
சுவாமியை தரிசிக்க திறந்தவெளி மண்டபம் தாண்டி உள்ள ஒரு வாயில் வழியே உள்ளே சென்றால் மகா மண்டபம் உள்ளது. அதன் இருபுறமும் உள் பிராகாரத்திற்கான விசாலமான வழிகள் உள்ளன. அடுத்து, இடைமண்டபமும் கருவறையும் அமைந்துள்ளன. கருவறை வாயிலின்மேல் சயனக்கோலத்தில் திருமாலின் புடைப்புச் சிற்பம் அற்புதமாக வடிக்கப்பட்டுள்ளது. கருவறை சுற்றில் சப்த ரிஷிகள், உமைபங்கர்,சப்தமாதா, காசி விஸ்வநாதர்- விசாலாட்சி, பஞ்சபூத லிங்கங்கள், கஜலட்சுமி, கால சம்ஹார மூர்த்தி, கஜ சம்ஹார மூர்த்தி ஆகிய தெய்வச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.
பரசுராமர், தந்தை உத்தரவிட்டதின் பேரில் தன் தாயைக் கொன்ற பழிதீரும் பொருட்டு வழிபட்ட தலம். மேலப் பழுவூரில் உள்ள மற்றொரு சிவாலயத்தில் ஜமதக்னி முனிவருக்கு சிலா உருவம் உள்ளது. பங்குனியில் நடைபெறும் விழாவில் மூன்றாம் நாள் சுவாமி மேலப்பழுவூர் சென்று அங்குள்ள ஜமத்கனி முனிவருக்குக் காட்சி தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
தினமும் காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை , திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், திருவையாறு
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை