சத்யவாகீஸ்வரர் கோவில், திருஅன்பில் ஆலந்துறை
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் திருச்சி மாவட்டம், திருச்சியில் இருந்து 20 கி.மீ. தொலைவிலுள்ள லால்குடி சென்று அங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் இத்தலம் உள்ளது. வைஷ்ணவ 108 திவ்யதேசங்களில் ஒன்றான அன்பில் வடிவழகிய நம்பியின் ஆலயம் இத்தலத்திற்கு மிக அருகில் உள்ளது. திருச்சி மற்றும் லால்குடியில் இருந்து செல்ல பேருந்து வசதிகள் உள்ளன.
சுவாமி : சத்யவாகீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர்
அம்பாள் : சௌந்தர நாயகி
தல மரம் : ஆல மரம், வில்வம் மரம்
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள் : தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 57வது தலம் ஆகும். இத்திருக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்று நம்பப்படுகிறது. இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பிரம்மன் வழிபட்ட மூர்த்தம் பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமமும் இவருக்கு உண்டு. திருஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக் காதைப் பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டதால், இத்திருகோவிலில் இருக்கும் விநாயகர் "செவி சாய்த்த விநாயகர்" என்றும் அழைக்கப்படுகிறார். காதில் குறைபாடு உள்ளவர்கள் இத்தலம் சென்று விநாயகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பு.
தல வரலாறு : ஒரு முறை திருஞானசம்பந்தர் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ள இத்தலத்தை தரிசிக்க வந்தபோது கொள்ளிட ந்தியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருந்தது. சம்பந்தரால் கோவிலை நெருங்க முடியவில்லை. தூரத்தில் நின்ற படியே சுயம்புவாய் அருள்பாலிக்கும் சிவபெருமானைப் பாடினார். காற்றில் கலந்து வந்த ஒலி ஓரளவே கோயிலை எட்டியது. ஞானசம்பந்தரின் பாட்டை நன்கு கேட்பதற்காக விநாயகர் தன் யானைக்காதை பாட்டு வந்த திசை நோக்கி சாய்த்து கேட்டு ரசித்தார். ஒரு காலை மடக்கி, இன்னொரு காலை குத்துக்காலிட்டு அமர்ந்து விநாயகர் பாட்டை ரசித்த அக்காட்சியை சிற்பமாக இன்றும் எழிலுற இவ்வாலயத்தில் காட்சி தருகிறது.
கோவில் அமைப்பு : 5 நிலை இராஜகோபுரத்துடன் விளங்கும் இத்தலத்தில் மூலவர் சத்யவாகீஸ்வரர் கிழக்கு நோக்கி சுயம்புவாக எழுந்துள்ளார். பிரம்மா வழிபட்ட மூர்த்தம் ஆதலால் இறைவனுக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமமும் உண்டு. கோயிலின் உள்ளே சப்தமாதர், பிட்சாடனர், விசுவநாதர், விசாலாட்சி, பைரவர், முருகன் சன்னதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதியும் உள்ளது.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சி, லால்குடி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை