இலங்கை ( நயினா தீவு ) நாகபூசணி
திருத்தல இருப்பிடம் : இலங்கை கொழும்பில் இருந்து 431 கி.மீ. தூரத்திலும், யாழ்ப்பாணத்தில் நகரில் இருந்து 38 கி.மீ. தொலைவிலும் நயினா தீவு அமைந்துள்ளது. நயினா தீவிற்குத் தரை வழியாகப் பயணிப்பதற்கான பாதைகள் இல்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து நயினா தீவு செல்வோர் குறிகாட்டுவான் வரை பேருந்தில் சென்று, குறிகாட்டுவானில் இருந்து படகு ஊடாக நயினாதீவு தீவிற்கு செல்ல முடியும். நயினா தீவிக்குள் ஒரு உள்ளூர் பேருந்து சேவை உள்ளது.
அம்பாள் : நாகபூசணி
தல தீர்த்தம் : தீர்த்தக்கேணி
தல விருட்சம் : வன்னி
தலச் சிறப்புகள் : கருவறையில் அமைந்துள்ள சுயம்பு நாகபூஷணி அம்மன், நீள்உருளை வடிவத் திருமேனியராக எழிலாக காட்சி தருகின்றாள். என்றாலும், அலங்காரத்தால் அன்னையின் முகம் மட்டுமே காட்சியளிக்கிறது. பின்புறம் சீறும் நாகமாக ஐந்து தலை நாகம் உள்ளது. காளிதாசரால் வணங்கப்பட்ட தலங்களுள் இதுவும் ஒன்று. அன்னை கொலுவிருக்கும் சந்நதியின் அருகில் சிறிய நீரோடை செல்கிறது. அதிலுள்ள நீர்தான் தேவியின் பிரசாதமாக பக்தர்களுக்குத் தரப்படுகிறது. அந்த நீர் மிகவும் சுவையுடையாக உள்ளது. இந்திரன் வழிபட்ட தலம்.
தல வரலாறு : ஈழத்தில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர், நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே, நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயமாகும். இந்திரன் தனது சாபம் நீங்கி அம்மனுக்கு ஆரம்பத்தில் சிறிய ஆலயம் கட்டினான் என்றும்,ஆதியில் அன்னைக்கு நாகம் அயலிலுள்ள புளியந்தீவில் இருக்கும் நாகதம்பிரானிடம் பூப்பறித்து கடல்வழியாக வரும் வேளையில் கருடன் இடைமறித்து நாகத்தை கொல்ல எத்தனிக்கும் பொழுது அவ்வழியே வந்த வணிகரான மாநாய்க்கன் பிணை தீர்த்து நாகத்தை வழிபடச்செய்தான் என்றும்,மகாபாரதத்தில் அர்சுனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர நாகதீவு வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றதும் அந்த மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்றும் அழைப்பர். மணிமேகலையில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான்இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டைமண்டலத்தேசத்தவரும் ஆவர். எனவே நயினாதீவானது பல கர்ணபரம்பரைக் கதைகளோடும் பலபுராண இதிகாசங்களோடும் பின்னிப் பிணைந்திருப்பதை அறியமுடிகிறது.
சுயம்புவாகத் தோன்றிய அம்பிகையின் வடிவத்தை, இந்தியாவில் இருந்து வந்த நயினாபட்டர் என்ற வேதியர் பூஜித்து வந்தார். நயினா தீவுக்கு அருகில் உள்ள புளியந்தீவில் இருந்த நாகமொன்று, அம்மனைத் தரிசிக்க தினந்தோறும் கடலில் நீந்தி வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு வரும் போது, அம்மனுக்கு அர்ச்சனை செய்ய, புளியந்தீவில் இருந்து பூக்களை கொண்டு வருவது வாடிக்கை. ஒருநாள் வழக்கம் போல் பூக்களுடன் நீந்தி வந்த நாகத்தை, கருடன் ஒன்று உணவாக்க முயன்றது. இதனால் பதறிய நாகம், கடலில் எழும்பி நின்றிருந்த கல் பாறை ஒன்றில் ஒதுங்கியது. அந்த இடத்திற்கு வந்த கருடனுக்கும், நாகத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அந்த நேரத்தில் வாணிகம் செய்வதற்காக காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்து, கப்பல் மூலம் இலங்கை சென்று கொண்டிருந்தான் மாநாயக்கன் என்ற வணிகன். அவன் நாகத்தை கருடன் கொல்ல முயல்வதைக் கண்டு மனம் இரங்கினான். நாகத்தை காப்பாற்றும் நோக்கில் கருடனிடம், ‘நாகம் அம்மனை வழிபடும் நோக்கத்தைத் தடுக்க வேண்டாம்’ என்று வேண்டினான். அதற்கு கருடன், ‘ஐயா! அம்மன் மீது உமக்கு பக்தி இருக்குமானால், கப்பலில் உள்ள உன் பொருட்கள் அனைத்தையும் அம்மன் ஆலயத்திற்குத் தர சம்மதம் சொல்வீரா? அப்படி நீ ஒப்புக்கொண்டால், நானும் உமக்காக இந்த நாகத்தை விட்டு விடுகிறேன்’ என்றது.
கருடனின் சவாலுக்கு வணிகன் ஒப்புக்கொண்டான். தான் கப்பலில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கோவிலுக்கு வழங்கி விட்டான். இதனால் நாகம் விடுதலை பெற்று, வழக்கம் போல அம்மனை வழிபட்டது. வணிகன் கொடுத்த பொருட்களைக் கொண்டு கோவில் அழகாகவும், சிறப்பாகவும் கட்டமைக்கப்பட்டது. நயினா தீவின் அருகே பாம்பு சுற்றிய கல் இருப்பதையும், கருடன் கல் இருப்பதையும் இன்றும் காணலாம்.
ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம், நயினா தீவை ‘மணிபல்லவம்’ என்று குறிப்பிடுகிறது. குலோதர, மகோதர என்ற இரண்டு நாக அரக்கர்களுக்கிடையே மணியாசனம் காரணமாக எழுந்த பெரும் போரை விலக்கி வைக்க, புத்தர் இங்கு எழுந்தருளியதாக பவுத்த நூல்கள் கூறுகின்றன. இத்தீவில் பழமையான பவுத்த கோவில்கள் இருந்ததற்கான சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. அம்மன் ஆலயத்திற்கு சற்றுத் தொலைவில் புனரமைக்கப்பட்ட பவுத்த ஆலயம் ஒன்றும், படித்துறையும் உள்ளது. இந்து சமயத்தவருக்கும், பவுத்த சமயத்தவருக்கும் புனித தலமாக நயினா தீவு விளங்குகின்றது. சக்தியின் அறுபத்திநான்கு பீடங்களில் இங்குள்ள பீடம் புவனேஸ்வரி பீடமென்றும் குறிப்பிட்டு, பீடத்திற்குரிய அன்னையை வணங்கி அமைதி பெறுமாறு உபதேசம் செய்து அமைதியை நிலைநாட்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கோவில் அமைப்பு : இலங்கை நாட்டின் தேர்களில் நாகபூஷணி ஆலயத் தேர் தனித்துவம் வாய்ந்தது. இத்தேரில் வரலாற்று நிகழ்வு, கிருஷ்ணர், அஷ்டலட்சுமி, நாகம் புளியந்தீவில் பூப்பறித்தல், கருடன் காத்திருப்பது, மணல் லிங்கம் எழுப்பி வழிபடும் காமாட்சி போன்ற வரலாறுகள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், தேரில் நாகபூஷணி பவனிவர, தேரோட்டியாக பிரம்மனின் மனைவி பிரமாணி இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மூன்று வரிசையில், எட்டுத்திசைகளிலும், மரச்சிற்பங்கள் கலைநயத்தோடு மிளிர்கின்றது. சுயம்புவாய் அமைந்துள்ள ஐந்து தலையுள்ள சர்ப்பச்சிலை, எங்குமே காணப்படாத புதுமையும் அற்புதமும் கொண்ட அமைப்பாகும். இந்த சர்ப்பத்தின் முன்பாகவே நாகராஜேஸ்வரியின் திருவுருவம் காணப்படுகின்றது. இவ்வாறான தோற்ற அமைப்பை நோக்கும்போது, ஆரம்பகாலத்தில் நாகவழிபாடு மட்டுமே காணப்பட்டு, பிற்காலத்தில் அம்பாளின் திருவுருவத்தை ஸ்தாபனம் செய்து, வழிபாட்டு முறையில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இவ்வாறான ஐந்து தலையையுடைய படமெடுக்கும் நாகத்தினை வழிபாடு பொருளாகக் கொண்ட ஆலயத்தை வேறெங்குமே காணமுடியாது. இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலயம், ஆகம முறைப்படி கிழக்கு நோக்கியவாறு, சமுத்திரத்தை நோக்கிக் காணப்படுகின்றது. இந்த ஆலயம் திராவிட முறைப்படி கட்டப்பட்டு, ஆகமமுறை தழுவிய கோயிலாகக் காணப்படுகின்றது.
இங்கு சுயம்பு வடிவான நாகத்தையும், அம்பாளையும் கொண்டுள்ள கர்ப்பக்கிரகம் காணப்படுகின்றது. அதோடு இருநிலை விமானம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், வசந்த மண்டபம், தெற்குப்புற ராஜகோபுரம், கிழக்குப்புற ராஜகோபுரம், நவகிரகக் கோயில்கள், நால்வர்கோயில், சண்டேஸ்வரர் கோயில், பைரவர், சூரியன், சந்திரன் ஆகிய பரிவார மூர்த்திகள், யாகசாலை, வாகனசாலை, திருக்கேணி ஆகியவற்றைக் கொண்டு அற்புதக் கோயிலாக விளங்குகின்றது. அம்மனின் திருவுருவம், தெற்கு நோக்கித் தென்கோபுரவாயில் வழியாக வணங்கக் கூடிய முறையில், மகாமண்டபத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இத்திருவுருவத்தின் தோற்றமும் அங்கலட்சணங்களும், மனோன்மணி அம்பாளுக்குரியதாகக் காணப்படுகின்றது. இவ்வன்னை நான்கு திருக்கரங்களுடன் திகழ்கின்றாள்.
இங்கு நடைபெறும் ஆனிமாத உற்சவம் மிகவும் சிறப்பானது. ஆனிப் பெளர்ணமி உற்சவம் கடல் நடுவே மிகவும் கோலாகலமாக நடைபெறும். இக்கோயிலின் திருவிழாக் காலங்களில் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் திரளாக வந்து கூடுவர். கோயிலில் பகல் மற்றும் இரவு நேர அன்னதானம் கொடுக்கப்படுகிறது. நயினை ஸ்ரீநாகபூஷணி அம்மன் ஆலயத்திலும் அதன் சுற்றிலும் சித்தர்களும், ஞானியரும், அருளாளர்களும் உறைந்துள்ளனர். இங்குள்ள அன்னை ஸ்ரீநாகபூஷணி, வேண்டுவார் வேண்டுவனவற்றை அருள்கிறாள். திருமணமாகாத கன்னிப் பெண்கள் அன்னையின் அருளால் திருமண வாழ்க்கை கிடைக்கப் பெற்றுள்ளனர். மகப்பேறில்லாதோர் நாகப்பிரதிஷ்டை செய்து பூஜித்து, மகப்பேறு பெற்றுள்ளனர். நோயுற்றோர் அன்னையே சரணமென்று துதித்து, நோய்கள் நீங்கப் பெற்றுள்ளனர்.
காலை 5.30 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கொழும்பு
அருகிலுள்ள ரயில் நிலையம் : யாழ்ப்பாணம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை