வாரணாசி அன்னபூரணி
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் அன்னபூரணி, நலவாழ்வைத் தரும் இந்துக் கடவுளாக கருதப்படுகிறார். இவர் பார்வதியின் அம்சமாவார். காசி (வாரணாசி) நகரின் தலைமைக் கடவுளாக அன்னபூரணி வர்ணிக்கப்படுகிறார்.
சிறப்புகள் : சாதாரண நாட்களில் கருவறையில் அன்னபூரணி அம்மனின் தரிசனம் கதவின் துவாரம் வழியாகவே பக்தர்களுக்குக் கிட்டுகிறது. கருவறைக்கு எதிரே எண்கோண வடிவம் கொண்ட மண்டபம் இருக்கிறது. அங்கே அமர்ந்து பக்தர்கள் பஜனை செய்கிறார்கள். பூஜை நேரத்தில் ஆலயமணி முழங்குகிறது. பசுவின் முகம் கொண்ட இந்த ஆலயமணியின் நாதத்தில் பக்தர்களின் கோஷம் கலந்து ஒலிக்கிறது. கற்பூர ஆரத்தி காட்டி குங்குமப் பிரசாதம் அளிக்கிறார்கள்.
காசியில் தீபாவளியன்று விசேஷமான அலங்காரங்களுடன் எழுந்தருளுவது அன்னபூரணி. அன்று அன்னபூரணியின் தரிசனத் துக்காக பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடுகிறார்கள். காசியில் விசுவநாதர் ஆலயத்துக்கு இணையாக மிகச் சிறப்புடன் விளங்குவது அன்னபூரணியின் ஆலயம். காசியில் இருப்பவர்களுக்கு அன்னவிசாரம் இல்லை என்பது வாக்கு. காசிக்கு வரும் பக்தர்களும் அன்னதானம் செய்வதையே சிறப்பாகக் கருதுகிறார்கள். ஈசனுக்கே அன்னபூரணி உணவளித்ததாக வரலாறு கூறுகிறது.
தல வரலாறு : காசி நகரில் தேவதத்தன், தனஞ்செயன் என்ற சகோதரர்கள் இருந்தனர். தேவதத்தன் பணக்காரன், தனஞ்செயனோ தரித்திரன். ஒரு நாள் மணிகர்ணிகை துறையில் நீராடி, விஸ்வேஸ்வரர்- விசாலாட்சியை தரிசித்து விட்டு, பசியுடன் முக்தி மண்டபத்தில் அமர்ந்திருந்த தனஞ்செயன், தன்னை அன்னதோஷம் பிடிக்க என்ன காரணம் என்று யோசித்தவாறு உறங்கினான். அப்போது அவனது கனவில், சந்நியாசி ஒருவர் காட்சி தந்து, தனஞ்செயா முன்பு காஞ்சியில் சத்ருதர்மன் என்ற ராஜகுமாரன் இருந்தான். அவன் தோழன் ஹேரம்பன். ஒரு முறை அவர்கள் வேட்டைக்குச் சென்று, காட்டில் வழி தவறி பசியால் பரிதவித்த அவர்களைக் கண்ட முனிவர் ஒருவர், தமது ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்று அவர்களை உபசரித்தார்.
முனிவர் வழங்கிய அன்னம் சத்ருதர்மனுக்கு அமுதமாகத் தித்தித்தது. ஹேரம்பனுக்கோ, அது அற்பமாகத் தோன்றியது. எனவே, சிறிதளவு உண்ட பின் மீதியை எறிந்து விட்டான். அப்படி அன்னத்தை அவமானப்படுத்தியதாலேயே ஹேரம்பனான நீ இப்போது தனஞ்செயனாகியிருக்கிறாய். அன்னத்தை அவமதிக்காத சத்ருதர்மன், தேவதத்தனாகி செல்வ வளம் பெற்றுள்ளான். நேம நியமங்கள் வழுவாமல் விரதமிருந்து அன்னபூரணியைச் சரணடைந்து ஆராதித்தால் உனது அன்னதோஷ நிலை மாறி அவள் அருள் பெறலாம் என்றார்.
அதன் பின் தனஞ்செயன் அன்னபூரணி விரத நேம நியமங்களை விசாரித்தபடி, காமரூபம் என்ற இடத்தை அடைந்தான். அங்கு மலையடிவார ஏரிக்கரை ஒன்றில் தேவ கன்னியர்கள், பூஜையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களை அணுகி யாரைப் பூஜிக்கிறார்கள் என்று கேட்டான் தனஞ்செயன். பிரம்மனின் தலையைக் கொய்ததால், பிரம்மஹத்தி பீடித்த சிவனின் பசிப்பிணி அகல பரமசிவன் கையிலுள்ள கபாலத்தில் அன்னபூரணி அவதாரம் எடுத்து, ஆதிசக்தி அன்னமிட்டு கபாலத்தை நிரப்பினள். அதனால் ஈசனின் பிரம்மஹத்தி நீங்கியது. அப்படிப்பட்ட அன்னபூரணியை ஆராதிக்கிறோம் என்றனர். மேலும் அவர்கள் தனஞ்செயனுக்கு விரத முறைகளை விளக்கினர். அதன்படி காசிக்கு வந்த தனஜ்செயன், விரதம் இருந்து அன்னபூரணியின் அருள் பெற்றான்.
இந்த விரதத்தை யார் மேற்கொண்டாலும் அவர்களுக்கு அன்னத்துக்கு குறைவிருக்காது. உனக்கு அருள் பாலிக்க நான் காசிக்கே வருகிறேன். ஈசனின் ஆலயத்துக்குத் தென்புறம் எனக்கு ஒரு கோயில் எழுப்பினால், நான் அங்கு வந்து அமர்கிறேன் என்றாள். அதனால் வற்றாத செல்வத்துக்கு அதிபதியான தனஞ்செயன், அன்னபூரணிக்கு எழுப்பியதே இந்த அன்னபூரணி ஆலயம்.
புராண வரலாறு : சிவபெருமான் தன் மனைவி பார்வதியிடம், உலகம் மாயை என்றும் இம்மாயையில் உணவும் ஒரு பகுதி எனக் கூற, உணவு உட்பட அனைத்துப் பொருட்களின் கடவுளாக வணங்கப்படும் பார்வதி சீற்றமடைந்தார். இவ்வுலகம் பொருளால் ஆனது என்றும் பொருள்களுக்குள் ஆற்றல் உண்டென்றும் நிரூபிக்க மறைந்தார். பார்வதியின் மறைவு உலக இயக்கத்தைப் பாதித்து உலகமே வெறுமையானது. எங்குமே உணவின்றி எல்லாரும் பசியால் வாடினர். மக்களின் பசியறிந்து பரிவுற்ற அன்னை பார்வதி, மீண்டும் தோன்றி காசியில் உணவுக்கூடம் அமைத்தார்.
உடனே தன் உணவுத் தட்டை எடுத்துக் கொண்டு பார்வதியிடம் சென்ற சிவன், இப்போது உலகம் பொருள்களால் ஆனது என்றும் மாயையல்ல என்றும் அறிந்து கொண்டேன். இதைக் கேட்டு மகிழ்ந்த பார்வதி, தன் கையால் உணவு வழங்கி மகிழ்ந்தார்.
உருவ வழிபாட்டில், அன்னபூரணி கையில் தங்கக் கரண்டியும் உணவுப் பாத்திரமும் கொண்டுள்ளவராக வர்ணிக்கப்படுகிறார். நிறைய நகைகளை அணிந்து, அரியணையில் அமர்ந்து தோற்றமளிக்கிறார். சிவபெருமான் உணவு வழங்குமாறு வேண்டி, பாத்திரத்துடன் கையேந்தி நிற்கிறார். பார்வதி, தன் பக்தர்கள் அனைவரும் உண்ணும்வரை தான் உண்பதில்லை எனக் கூறப்படுகிறது.
கட்டிட அமைப்பு : இவ்வாலயம் வட இந்தியச் சிற்பக் கலை பாணியில் கட்டப்பட்டது. பேஷ்வாக்களின் ஆட்சிக் காலத்தில் சர்தார் சந்திரசூட் அவர்களால் இவ்வாலயம் நிர்மாணிக்கப்பட்டது. அன்னபூரணியின் இருபுறமும் ஸ்ரீதேவியும் பூதேவியும் தங்கத்தில் செய்த விக்கிரகங்களாக கையை உயர்த்தி அபயமளித்து ஆசீர்வாதம் கூறும் விதமாகவே இருக்கிறது. காசி விசுவேசுவரர், வெண்ணீறணிந்த பெருமான்- வெள்ளி மலையமர்ந்த ஈசன் வெள்ளி விக்கிரகமாக ஜொலிக்கிறார். லட்டுகளால் செய்த தேரில் அன்னை பவனி வருகிறாள். அந்த இனிப்பையே பிரசாதமாகவும் வழங்குகிறார்கள். பக்தர்கள் அன்னபூரணிக்கு காணிக்கை ரூபாய் நோட்டுகளாக மழைபோலப் பொழிகிறார்கள்.
உலக உயிர்களுக்கு வற்றாத உணவளிப்பவள் ஸ்ரீ அன்னபூரணி. ஈசனுக்கே உணவளிக்கும் அன்னை. உலகின் பசி போக்குபவள். வெறும் வயிற்றுப் பசியை அல்ல. ஒவ்வொரு மனிதரின் ஞானப் பசியையும் போக்க இங்கே எழுந்தருளியிருக்கிறாள். கொள்ளை அழகு மிக்க அன்னையின் கருணை உருவத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். அன்னபூரணியைப் பூஜை செய்து வழிபடும் முதல் நாள் தன திரயோதசி. அன்று தங்க அன்னபூரணிக்குப் பூஜைகள் உண்டு. ஆனால் முழு தரிசனம் கிடைக்காது. திரை போட்டு மறைத்து விடுகிறார்கள். அடுத்த நாள் தீபாவளி. அன்று தரிசனத்துக்காக சந்நிதியைத் திறந்து வைக்கிறார்கள். தீபாவளியன்று ஐசுவரியங்களை அளிக்கும் தேவியாக விளங்கும் அன்னபூரணிக்கு குபேர பூஜை நடக்கிறது. அன்று கங்கா ஸ்நானம் செய்துவிட்டு ஏராளமான மக்கள் குறிப்பாக சுமங்கலிகள் தரிசனம் செய்கிறார்கள். அடுத்த நாள் சகலவிதமான தன, தான்ய, சம்பத்துகளை அளிக்கும் தேவிக்கு லட்சுமி பூஜை நடைபெறுகிறது.
தீபாவளிப் பண்டிகையின்போது, மூன்று நாட்களும் காசியில் உள்ள கோவில்களில் திருவிழாக் கோலம் கண்ணைக் கவருகிறது. காசி விசுவநாதர் ஆலயத்திலும், அன்னபூரணி கோவிலிலும் இந்தச் சிறப்பு தனி ஒளியுடன் துலங்குகிறது. அன்னம் மலைபோலக் குவித்து வைக்கப்படுகிறது. வகை வகையான இனிய பணியாரங்கள் குவியல் குவியலாக வைக்கப்படுகின்றன
நடை திறக்கும் நேரம் : தினமும் காலை 4.00 மணி முதல் 11.30 மணி வரையும் மாலை 7.00 மணி முதல் இரவு 11.00 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : பாபத்பூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : வாரணாசி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு