பாட்னா (சர்வானந்தகரி ) பாட்னேஸ்வரி
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் பீஹாரின் தலைநகராக விளங்கும் பாட்னா ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 10 கி,மீ தொலைவில் பட்னா தேவி என்ற பெயருடன் மக்களுக்கு அருட்காட்சி வழங்குகிறாள்.
அன்னை : சர்வானந்தகரீ (நர்மதா)
இறைவன் : வத்ரசன் (வயோமகேசர்)
சர்வானந்தகரீ (மகதா பீடம்)
தல சிறப்பு: இந்த நகரில் இரு கோயில்கள் உள்ளன. ஒன்று பாரி படான் என்றும் மற்றொன்று சோடி படான் என்றும் அழைக்கப்படுகின்றன. தேவியின் சேலை விழுந்ததாக உப பீடமாக வணங்கப்படுகிறது. 51 சக்தி பீடங்களில் 32வது சக்தி பீடமாக விளங்கும் இது, அன்னையின் உடற்கூறுகளில் வலது முழங்கால் விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. பாட்னேஸ்வரி அல்லது பாடலி புத்ரேஸ்வரி வடக்கு நோக்கியுள்ளாள். கோவிலில் மஹா காளி, மஹா சரஸ்வதி, மஹா லக்ஷ்மி ஆகியோர் ஒன்றாக அருள்கின்றனர். மேலும் பைரவரும் அருள்கிறார். மேலும் சோட்டி பாட்டன் தேவியும் (சிறிய பாட்னா தேவி) பாட்னாவில் அருள்கிறாள். சோட்டி பாட்டன் தேவி கோவிலானது இங்குள்ள மாத்ரு ரூபிணியான ஸ்ரீலலிதா தேவிக்கு பக்தர்கள் புடவைகள் சமர்ப்பித்து வணங்குகிறார்கள்.
இங்கு சிறிய படான் தேவி கோயிலுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. தேவி பாட்னேஸ்வரி சர்வானந்தகரியாகப் போற்றப்படுகிறாள். செவ்வாய்க் கிழமைகளில் புதுமணத் தம்பதிகளும் பிறந்த குழந்தைகளுடன் தாய்மார்களும் வந்து இவளது ஆசியை வேண்டி வணங்குகின்றனர். இந்த அக்ஷர சக்திதேவி சிவந்த நிறத்துடன் சிவப்புப் பட்டாடை உடுத்தி சின்முத்திரை, தாமரை, அபய வரத கரங்கள் தரித்த நான்கு கரங்களுடன் அருட்காட்சி அளிக்கின்றாள். மதநீர் வடியும் வெண்ணிற யானை இந்த அம்பிகையின் வாகனமாகத் திகழ்கின்றது. பீடசக்தியின் நாமம் சர்வானந்தகரி. இந்த சக்தி பீடத்தை வ்யோமேசர் எனும் பைரவர் பாதுகாக்கிறார். இந்த சக்தி பீடம் பாட்னாவில் மஹாராஜ்கஞ்ச் என்ற இடத்தில் பாட்னேஸ்வரி ஆலயத்தில் உள்ளது.
கோவில் அமைப்பு : பாரிபடான் கோயில் கங்கைக் கரையில் வடக்கு பார்த்து உள்ளது. சுமார் ஒரு அடி உயரத்தில் மஹாகாளி அரை அடி உயரத்தில் மகாலட்சுமி. சுமார் ஒரு அடி உயரத்தில் மகா சரஸ்வதி. கீழே அரை அடிக்கும் குறைவான உயரத்தில் முக மண்டலத்துடன் பைரவர். இவையாவும் பளபளக்கும் கருமை நிற கற்களால் செய்யப்பட்ட நின்ற திருக்கோலங்கள் முப்பெரும் தேவியருக்கும் சிவப்பு பட்டாடை பளபளக்கும் ஆபரணங்களும் முத்துக்களும் சார்த்தப்பட்டிருக்கின்றன. வெள்ளிக் கண்மலர்கள் வாய்க்கும் வெள்ளிக்காப்பு பிலிகிரி வேலைப்பாட்டுடன் கூடிய கிரீடங்கள். அதற்கு மேல் மிக அழகான பெரிய வெள்ளிக்குடைகள்.
ஊரின் பெயராலேயே அன்னையின் பெயரும் பாட்னேஸ்வரி என்று அழைக்கப்படுகின்றது. சரணடைந்த பக்தர்களைக் காப்பவள். வரங்களை வாரி வழங்குபவள். ஆயிரம் திருநாமங்களை கொண்டவள். தன் திருக்கரங்களில் பாசாங்குசமும், புஷ்ப பாணங்களும் ஏந்தியருளும் தேவி. பக்தியில் கீழ் நிலையிலிருந்தாலும் அன்னையை நம்பினால் எவர்க்கும் உயர்நிலை தருபவள். பற்றுகளை அறுத்தவர்க்கு எளியவரான நீலகண்டரின் ராணி.
இந்நகரில் மேலும் இரு சக்தி பீடங்கள் இருப்பதாக கூறுகிறார்கள். சக்திதேவியின் தொடைப் பகுதி விழுந்த இடம் தற்போதுள்ள மகாராஜ்கஞ் என்று அழைக்கப்படுகின்றது. இங்கு ஒரு பெரிய கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு பரிபதான் தேவி கோயில் என்று பெயர். சதிதேவியின் புடவையின் பாகம் விழுந்த இடம் சோட்டா பதான் தேவி கோயிலாகும். சிடிசெளக் பகுதியில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இப்பகுதி மிகவும் நெரிசலான இடமாகும். இத்திருக்கோயில்கள் பலமுறை புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளன.
பரிபதான் தேவி ஆலயம் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. மற்ற கோயில்களைப் போலவே கருவறை, பிராகாரம், பிராகார தேவதைகள், தீர்த்தம் போன்றவை அனைத்தும் இத்தலத்திலும் உண்டு. காளி, லக்ஷ்மி மற்றும் சரஸ்வதிக்கு கற்சிலை திருவுருவங்கள் அமைக்கப்பட்டு சிறந்த முறையில் அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. இத்தேவியர் அனைவரும் சிம்மாசனத்தில் வீற்றருள்கின்றனர். இந்நகரத்தை நிறுவியவரால் இத்தேவியர்கள் வழிபடப்பட்டதாக செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. பார்வதி இங்கு தனியாகக் கோயில் கொண்டிருக்கிறாள். அதனால், பளிங்குக் கல்லாலான சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமைகளில் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
முகலாய மன்னர்கள் இந்நகரை அஸிமாபாத் என்றும் குப்தர்கள் காலத்தில் பாடலிபுத்திரம் என்றும் இந்நகர் வழங்கப்பட்டது. சிட்டி செளக் பகுதியில் கட்டப்பட்டுள்ள சோட்டாபதான் தேவியின் திருக்கோயில் குருகோவிந்த் சிங் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட சீக்கிய குருத்வாராவிற்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. இங்கு கருவறையில் அமைக்கப்பட்டுள்ள தேவியின் சிலை, பாரிபத்தான் தேவியின் சிலை போன்றே உள்ளது. இங்கும் பல பரிவார தேவதைகளுடன் சூரிய மூர்த்திக்கும் சிலை உள்ளது.
ஆடுகளும், புறாக்களும் நேர்த்திக் கடனாக தரப்படுகின்றன. இவளே மகாகாளியாகவும், சீதளா தேவியாகவும் வழிபடப்படுகிறாள். நவராத்திரி மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அஷ்டமி, நவமி மற்றும் தசமி போன்ற திதிகள் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : பாட்னா
அருகிலுள்ள ரயில் நிலையம் : பாட்னா
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு