மஹாபலேஸ்வர் திருக்கோவில் - திருக்கோகர்ணம்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் வட உத்திர கன்னட மாவட்டத்தில் கோகர்ணா அமைந்துள்ளது. ரயில்வே நிலையத்தில் இருந்து 32 கி.மீ தொலைவில் மஹாபலேஸ்வர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு சிறப்புமிக்க கோடிதீர்த்தம் உள்ளது.
இறைவர் : மகாபலேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், ஆத்மலிங்கேஸ்வரர்.
இறைவி : கோகர்ணேஸ்வரி, தாம்ரகௌரி, பத்ரகர்ணிகை.
தேவாரப் பாடியவர் : சம்பந்தர், அப்பர்
பீடம் : கர்ண பீடம்
தீர்த்தம் : 33 தீர்த்தங்கள் உள்ளன. கோகர்ண, தாம்ரகௌரிநதி, கோடி, பிரமகுண்ட
பரசுராம ஷேத்திரம்.
தல சிறப்புகள் : வலது காது விழுந்த இடம். திருக்கோயிலில் சிவலிங்கம் பாக்கு அளவில் சிறியதாக உள்ளது. இத்தலத்து வழக்கப்படி மக்கள் திருமேனியைத் தொட்டு வழிபடலாம். இவ்விடத்தில் அம்மை தாமிர கவுரி என்ற நாமத்தில் சிவனை திருமணம் செய்த தலம். இவள் நதி வடிவ அம்பிகை ஆவாள். நடுவிலுள்ள சதுரமேயில் வட்டமான பீடமுள்ளது, இப்பீடத்தின் தென்கிழக்குப் பகுதியில் வெடிப்பொன்று உள்ளது. இதன் நடுவிலுள்ள வெள்ளை நிறமான உள்ளங்கையளவுள்ள பள்ளத்தின் நடுவில் கொட்டைப்பாக்கு அளவில் மகாபலேஸ்வரர் சிவலிங்கபாணம் தென்படுகிறது. பசுவின் காதுபோலக் குழைந்து தோற்றமளிக்கும் அருட்காட்சி நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. "துவிபுஜ" விநாயகர் இவர் முடியில் யானைத் தலையில் இருப்பதுபோல இருபுறமும் மேடும் நடுவில் பள்ளமும் உள்ளது. இஃது இராவணன் குட்டியதால் ஏற்பட்ட பள்ளமென்கின்றனர். இங்கு இத்தலத்திற்கு வருவோர் முதலில் கோடி தீர்த்தத்தில் நீராடி, பின்பு கடல் நீராடி, பிண்டதர்ப்பணம் செய்து, மீண்டும் நீராடி பிறகு மகாபலேஸ்வரரை வழிபட வேண்டும்.
தல வரலாறு : சுவாமி பசுவின் காதுபோலக் குழைந்து காணப்படுவதால் இத்தலம் இப்பெயரைப் பெற்றது. இலங்கை வேந்தன் இராவணன் கயிலைமலை சென்று சிவபிரானை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். சிவபிரான் உமையம்மையோடு காட்சித்தந்து வேண்டுவனயாது? என வினவினார். இராவணன் இலங்கை அழியாதிருக்க அருளவேண்டும் என்றான். அதற்கிசைந்த பெருமான் இராவணன் கையில் பிராணலிங்கத்தைக் கொடுத்து இதனை இலங்கைக்கு எடுத்துச் சென்று பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தால் இலங்கை அழியாது. இச்சிவலிங்கத்தைத் தலையில் சுமந்து செல்லவேண்டும், வழியில் இதனைக் கீழே வைத்தால் எடுக்கவாராது என அருளி மறைந்தார். இராவணன் பிராணலிங்கத்தைச் சிரவில் சுமந்து இலங்கை நோக்கிச் சென்றான். நாரதர் மூலம் இதனை அறிந்த இந்திரன் பிராண லிங்கத்தை இராவணன் பிரதிட்டை செய்துவிட்டால் இராவணன் அழியான், தேவர்கள் துயர்நீங்காது என எண்ணித் தேவர்கள் புடைசூழ கயிலைமலை சென்று விநாயகரை வேண்டினான். இந்திரனின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர் இராவணன் கோகரணத்தை அடையும் வேளையில் அவன் வயிற்றில் நீர்சுரக்குமாறு செய்ய வருணனை ஏவிவிட்டு, ஒரு சிறுவன் போல அவன்முன் தோன்றி நின்றார். இராவணன் வந்த அந்தச் சிறுவனை நோக்கிச் சிவலிங்கத்தை அச்சிறுவன் கையில் கொடுத்துச் சிறுநீர் கழித்து வருமளவும் அதனைக் கையில் வைத்துக்கொண்டு நிற்குமாறு வேண்டினான். சிறுவனாக வந்த விநாயகர், இராவணனை நோக்கி என்னால் சுமைபொறுக்க இயலாத நேரத்தில் மூன்றுமுறை உன்னை அழைப்பேன் அதற்குள் வராவிட்டால் நிலத்தில் வைத்துவிடுவேன் என அருளினார். இராவணனும் இசைந்து சென்றான். நெடுநேரம் ஆகியும் அவன் வராதரால் மூன்றுமுறை, அழைத்து சிவலிங்கத்தைப் பூமியில் வைத்துவிட்டார். இராவணன் வந்து சிவலிங்கத்தை இருபது கரங்களாலும் எடுக்க முயன்றான். இராவணன், மகாபலம் உடையவர் இவ்விறைவர் எனக் கூறி அந்த அந்தணச்சிறுவன் செய்த தவறுக்காக மூன்றுமுறை அவனது தலையில் குட்டினான். சிறுவனாக வந்த விநாயகர் தம் உண்மை வடிவை அவனுக்குக் காட்டிப் பந்துபோல அவனைத் தூக்கி எறிந்து விளையாடினார். இராவணன் பிழைபொறுக்க வேண்டினான். விநாயகர், உன் தலையில் இவ்வாறே மூன்றுமுறை குட்டிக்கொள் என்று கூறினார். இராவணன் தான் செய்த பிழைக்கு வருந்திக் குருதிசோரத் தலையில் குட்டிக் கொண்டு அவரை வழிபட்டு அருள் பெற்றான். விநாயகர் சினம் தணிந்து தலையில் குட்டிக்கொண்டு வழிபடுவோருக்கு வேண்டும் வரங்கள் தருவதாகக் கூறி இராவணனின் பிழைகளைப் பொறுத்து அவனுக்கு நல்வரங்கள் தந்தருனிர்.
கோயிலமைப்பு : தெற்கிலும் மேற்கிலும் வாயில்கள் உள்ளன. மேற்குவாயில் வழியாகக் கடற்கரைக்குச் செல்லலாம். கோயில் கடற்கரைக்கு அருகில் உள்ளது. தெற்கு வாயில் வழியாக உட்சென்றால் கோபுர வாயில் கடந்ததும் விசாலமான
வெளிப்பிராகாரம். உள்வாயில் தாண்டியதும் ரிஷபதேவர் தரிசனம். அம்பாள்
சந்நிதி கிழக்கு நோக்கியது. பக்கத்தில் தாம்ரகுண்டமென்னும் தடாகம்
உள்ளது. உட்புறம் மகாபலேஸ்வரர் கருவறை பக்கத்தில் தத்தாத்ரேயர்,
ஆதிகோகர்ணேஸ்வரர் சந்நிதிகள் உள்ளன.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : கோவா
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்டா
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு