சைவர்களின் பிரதான கோயிலாக கைலாயமலை விளங்குகிறது. சிவபெருமானின் இருப்பிடங்கள் பலவற்றுள் மிக முக்கியமானதாக விளங்குகிறது. தென் தமிழகத்தில் திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் ஓடும் தாமிரபரணி நதிக்கரையில் உள்ள ஒன்பது புகழ்பெற்ற தலங்கள் நவகைலாயம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொருவர் ஜாதகத்திலும் குறிப்பிட்ட காலத்தில் ஒரு தசை ஆட்சி புரியும். ஒவ்வொரு தசைக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு தசையின் போதும் எந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டால் நன்மை பெறலாம்? என்ற கேள்விக்கு 9 தலங்களில் 9 கிரக அம்சமாக சிவபெருமான் இருந்து அருள் பாலிக்கிறார். நவகைலாயங்கள் தோன்றிய வரலாறு சுவையானது. அகத்தியரின் சீடர்களில் ஒருவர் உரோமச முனிவர். அவருக்கு சிவபெருமானின் கடாட்சம் பெற்று முக்தி பெறவேண்டுமென்று விருப்பம். தனது ஆசையை அகத்தியரிடம் கூறினார். அதை கேட்ட அகத்தியர் தாமிரபரணி நதியில் நீராடி சிவபெருமானை வழிபட்டால் உனது ஆசை நிறைவேறும். நீ ஆற்றின் கரை வழியாகவே சங்கு முகம் செல். உனக்கு வழிகாட்ட ஆற்றில் ஒன்பது மலர்களை விடுகிறேன். ஒவ்வொன்றும் எந்த இடத்தில் ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் சிவலிங்கத்தை வைத்து வழிபடு என்று கூறினார். அதன்படி ஒவ்வொரு மலரும் ஆற்றின் இருபுறங்களிலும் உள்ள ஒவ்வொரு ஊரின் கரையோரத்தில் ஒதுங்க அந்தந்த ஊர்களிலேயே உரோமச முனிவர் லிங்கம் வைத்து வழிபட்டார். இறுதியில் தாமிரபரணி கடலில் சங்கமம் ஆகும் இடத்தில் முனிவர் பூசை செய்து இறைவன் அருள் பெற்று முக்தி அடைந்தார் அவர் வைத்த லிங்கங்கள் நவகைலாயங்களாக உருவாகி நவகிரகங்கள் அருள் புரியும் தலங்களாயின. பின்னாளில் அந்தந்த இடங்களில் கோயில்கள் கட்டப்பட்டன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது