ஐயப்பன் திருத்தலங்கள்
	


	

	
 
	
 
4:35:41 PM         Thursday, September 21, 2023

ஐயப்பன் திருத்தலங்கள்

ஐயப்பனின் அவதார மகிமை மிகவும் விஷேசமானது. மகிஷாசுரன் என்ற கொடும் அரக்கன் தேவர்களுக்கு தொடர்ந்து தொல்லைகளைக் கொடுத்துவர துர்க்காதேவி அவனை வதைத்து சம்ஹாரம் செய்ய அதனால் கோபம் கொண்ட அவனது தங்கை மகிஷி கடும் தவம் புரியலானாள். அவள் தவத்தின் பயனால் பிரம்ம தேவனிடம் பன்னிரண்டு ஆண்டுகள் பிரம்மச்சாரியாக இருந்து மனிதர்களுக்கு சேவை புரியக் கூடியவனாகவும் அரிக்கும் சிவனுக்கும் பிறக்கும் மகனாகவும் இருக்கும் ஒருவரிடம் இன்றி வேறு யாராலும் தன் அழிவு இருக்கக் கூடாது என்ற வரத்தைப் பெற்றாள். வரம் பெற்ற மகிஷி அந்த மமதையால் தேவர்களை பெரும் துன்பத்திற்கு ஆளாக்கினாள். அவள் தரும் தொல்லைகள் தாங்காத தேவர்கள் திருமாலிடம் தஞ்சமடைந்தனர். அவர்களை காப்பதாக வாக்கு கொடுத்த திருமால் தேவர்கள் மகிஷியிடம் இருந்து தப்பிக்க அமுது வாங்குவதற்காக அசுரர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தனர். பாற்கடலில் தோன்றிய சாகா நிலை தரும் அமுதை அசுரர்கள் அடைய முடியாதவாறு செய்வதற்காக திருமால் மோஹினி வடிவமெடுத்து அசுரர்களை மயக்கி அந்த அமுதினை தேவர்கள் மட்டும் உண்ணும்படி செய்தார். பின் சிவபெருமான் எண்ணி கடும் தவம் புரிந்த பத்மாசுரன் என்ற கொடிய அரக்கன் சிவனிடம் எவர் தலைமீது கையை வைக்கிறேனோ அவர் அக்கணமே எரிந்த சாம்பலாக வேண்டும் என்ற வரத்தை பெற வரம் தந்த சிவனிடமே வரத்தின் மகிமையை சோதித்துப் பார்க்க எண்ணிய பத்மாசுரன் சிவபெருமான் தலைமீது கைவைக்க முயல சிவபெருமான் அவனுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டார். இதை அறிந்த திருமால் மோகினி வடிவில் அவ்வரக்கனை மயக்கி அவனை தன் தலைமீதே தன்கையை வைக்கும்படி செய்து அவனை எரித்து சாம்பலாக்கினார். அப்போது சிவபெருமான் மோகினி வடிவில் உள்ள திருமாலின் அழகில் மயங்க இரு பெரும் சக்திகள் இணைய ஒரு பெரும் சக்தி வடிவமாக குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு பிரமன் தர்மசாஸ்தா என்று பெயர் சூட்டினார். சிவபெருமான் அக்குழந்தைக்கு தன் கழுத்தில் இருந்த மணிமாலையை அணிவித்து அக்குழந்தை பிறப்பதற்கான காரணத்தை எடுத்துக் கூறி பம்பை நதிக்கரையில் விட்டு மறைந்தார். அக்குழந்தை பிறந்ததின் முக்கிய நோக்கம் பிரம்மனிடம் வரம் பெற்ற மகிஷியை அழிப்பது ஒன்றேயாகும். பந்தள நாட்டை நீதி நெறியுடன் ஆண்டு வந்த மன்னன் ராஜசேகரன் தனக்கு பிள்ளையில்லாக் குறையை தீர்க்கும்படி சிவபெருமானை தொடர்ந்து தியானித்து வந்தான். அவன் ஒருநாள் வேட்டையாட காட்டிற்கு சென்ற சமயம் பம்பை நதிக்கரைக்கு அவன் வந்த போது சிவனார் அக்குழந்தையை அவன் காணும்படி செய்தார். தெய்வீக அம்சத்துடன் அழகுடன் தமக்கு கிடைத்ததை எண்ணி மன்னன் அக மகிழ்ந்தான். அப்போது இறைவன் அடியார் உருவில் வந்து இக்குழந்தையை நீ மணியுடன் கண்டெடுத்ததால் அக்குழந்தைக்கு மணிகண்டன் என பெயரிட்டு அழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். மணிகண்டன் பந்தள நாட்டிற்கு வந்ததின் காரணமாக ராணி கருவுற்று ஒரு ஆண்குழந்தையை பெற்றெடுத்தாள். இருகுழந்தைகளையும் மிக அன்பாக வளர்ந்து வந்தனர். தக்க பருவத்தில் குரு குலத்தில் சேர்த்து கல்வி பயிலச் செய்தனர். தன்னிடம் மாணவனாக வந்துள்ள ஐயப்பன் தெய்வ அவதாரம் என்பதை அறிந்து கொண்ட குருநாதர் ஐயப்பனுக்கு மானசீகமாக தொண்டு புரியலானார். ஐயப்பன் குரு காணிக்கையாக ஊனமுற்று இருந்த அவரது மகனின் ஊனத்தைக் குணப்படுத்தினார். மன்னர் ராஜசேகரன் மணிகண்டனுக்கு மகுடம் சூட்ட தன் மனைவியிடம் ஆலோசனை நடத்த இதை அறிந்த துன்மந்திரி ஒருவன் துர்போதனை செய்து மகாராணியின் மனதைக் கெடுத்து மணிகண்டனை அழித்துவிட திட்டமிட்டு பாலில் கடும்விஷம் கலந்து கொடுக்கும்படி செய்தான். விஷம் உண்டு உடல் நலிந்த மணிகண்டனை குணப்படுத்த எந்த மருத்துவராலும் முடியாது போகவே சிவபெருமானே துறவி உருவில் வந்து திருநீறு அணிவித்து குணப்படுத்தினார். அதன்பின் மணிகண்டனை கொல்ல முயன்ற முயற்சிகள் எல்லாம் பயனற்று போக இறுதியில் அவர்கள் முடிவாக அரசியாருக்கு தலைவலி என்றும் புலிப்பால் கொண்டு வந்தால்தான் அரசியாரின் தலைவலியைப் போக்க முடியுமென்றும் மருத்துவர் ஒருவரால் சொல்ல வைத்து மணிகண்டனை கானகத்துக்க அனுப்ப திட்டமிட்டனர். தாயின் வேண்டுகோளை நிராகரிக்க விரும்பாத ஐயப்பன் தந்தையின் அனுமதி பெற்று புலிப்பால் கொண்டு வர இருமுடி தலையில் தாங்கி கானகத்துக்கு தனியே புறப்பட்டார். பெரும் கொள்ளைக்காரனான வாபரை கானகத்தில் சந்தித்து அவனை நல்லவனாக திருத்தி அமைத்து அவனையே தன் நண்பனாக்கிக் கொண்டார். பின்பு எருமை உருக்கொண்ட மகிஷியைக் கொன்றார். அதனால் சாபவிமோசனம் அடைந்த மகிஷி அழகிய மங்கையாக உருமாறி தன்னை மணந்து கொள்ளும்படி மணிகண்டனை வேண்டினாள். மணிகண்டன் தான் கொண்டுள்ள பிரமச்சரிய விரதத்தையும் தன் அவதார நோக்கத்தையும் எடுத்துக் கூறி எப்போது என்னுடைய சன்னதிக்கு ஒரு கன்னிச்சாமி யார் கூட (அதாவது முதலாவது ஆண்டு என் கோவிலுக்கு வரும் பக்தர்) வராமல் இருக்கின்றனரோ அப்போது உன்னை மணந்து கொள்கிறேன் என்று கூறியதுடன் அவளைத் தன் சகோதரியாகப் பாவித்து அவளுக்கு தன் வலது பக்கத்தில் மஞ்சமாதா என்ற பெயரில் வீற்றிருக்க இடம் அருளுவதாக வாக்கு அளித்தார். மகிஷியை அளித்த மணிகண்டனை தேவர்களை வாழ்த்தி வணங்கினர். பின் தேவர்கள் யாவரும் புலிகளின் வடிவமாக மாறி ஐயப்பனுடன் பந்தள நாடு சென்றனர். மணிகண்டன் பெரும் புலிக்கூட்டத்துடன் வருவதைக் கண்ட நாட்டு மக்கள் பயந்து நடுநடுங்கி மன்னரிடம் சென்று முறையிட்டனர். பந்தள மன்னன் மணிகண்டனின் மகிமையை அறிந்து எதிர்கொண்டழைத்து மார்புற தழுவிக் கொண்டார். தம் சூழ்ச்சிகள் வெளிப்பட்டதை உணர்ந்த சூழ்ச்சிக்காரர்கள் மணிகண்டன் காலடியில் விழுந்து மன்னிப்பு வேண்டினர். மணிகண்டனும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கினார். புலிக் கூட்டமாக உருமாறி வந்த தேவர்கள் திரும்ப வழி அனுப்பி வைத்தார். பின் மன்னர் ராஜசேகரன் ஐயப்பனிடம் தந்தை மகன் உறவில் தான் செய்த தவறுகளுக்கு மனினிப்பு வேண்டினார். ஐயப்பன் தன் அவதார நோக்கம் முடிவுற்றதை எடுத்துக்கூறி அரசர் குரு மக்கள் அனைவருக்கும் உபதேசம் செய்வித்தார். மன்னர் ராஜசேகரன் தன் ராஜ்ய எல்லைக்குள் இருந்து என்றும் காட்சி கொடுக்க வேண்டும் என்று ஐயப்பனை பிரார்த்தித்து வேண்ட அதற்கு ஐயப்பன் தான் ஏய்தும் அம்பு விழும் இடத்தில் பதினெட்டு படிகள் அமைத்து கோவில் அமைக்க வேண்டும் என்றும் தன்னை காண வரும் பக்தர்கள் ஒரு மண்டலம் விரதம் இருந்து இருமுடி தாங்கிதான் கோவிலுக்கு வர வேண்டும் என்று கூறி மறைந்தார். மன்னரும் ஐயப்பன் கட்டளைப்படி அவ்விடத்திலே கோவில் அமைத்து கும்பாபிஷேகமும் நடத்தினார். கும்பாபிஷேகத் தினத்தன்று ஜோதி ரூபமாக மணிகண்டன் சாஸ்தாவின் விக்ரகத்தினுள் ஐக்கியமானதை அமைவரும் கண்டு பரவசமடைந்தனர். ஐயப்பன் அசரீயாக பந்தள மன்னன் மக்கள் வேண்டுதலின் பேரில் நான் வருடம் ஒருமுறை மகர சங்கராந்தி தினத்தன்று சூரியன் மறையும் நேரத்தில் காந்தமலை மீது ஜோதி ரூபமாக காட்சி கொடுத்து அருள் புரிவேன் என கூறி அருளினார். அதுபோன்று அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு வருடமும் மகர சங்கராந்தியன்று காந்தமலையில் ஜோதி வடிவமாக ஐயப்பன் காட்சி கொடுத்து அருள் புரிகின்றார். சுவாமி ஐயப்பனை மூலவராக கொண்ட திருத்தலங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Refine Search

×
×
×
×
×
×
×