இந்திரன் குகைக்கோயில், கன்னியாகுமரி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில், நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்குச் செல்லும் வழியில் மருந்துவாழ் மலைக்குப் பின்புறமாக உள்ள மயிலாடி பெருமாள்புரத்தில் இருக்கும் குன்று, ‘தேவேந்திரன் பொத்தை’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் குன்றில்தான் தேவர்களின் தலைவனான இந்திரனின் குகைக்கோயில் உள்ளது.
மூலவர்: இந்திரன்
திருத்தல சிறப்புகள் : ஆள் நடமாட்டமே இல்லாத, சுற்றிலும் மரங்களும் செடிகளும் அடர்ந்து காணப்படும் மலைப்பகுதியில், தரைமட்டத்தில் இருந்து சுமார் 360 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது இந்திரன் கோயில். குறுகலான படிக்கட்டுகளில், பிடிமானக் கம்பியைப் பிடித்தவாறுதான் மேலேறிச் செல்ல முடியும். மேலே, இயற்கையாக அமைந்த குகையில் புடைப்புச் சிற்பமாக நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார் இந்திரதேவன். அவர் அருகிலேயே சிவ- பார்வதியர், அகத்தியர் ஆகியோரையும் லிங்க மூர்த்தம் ஒன்றையும் தரிசிக்க முடிகிறது.
நின்ற கோலத்தில் அருளும் இந்திரனின் நான்கு கரங்களில் இரண்டு, அஞ்சலி ஹஸ்தமாகத் திகழ்கிறது. இந்திரன் பார்க்கும் திசையில் நாமும் பார்த்தால், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய ஸ்வாமி திருக்கோயிலின் கோபுரம் தெரிகிறது. தேவேந்திரன் பொத்தையில் இருந்து, இந்திரன் தாணுமாலய ஸ்வாமியை வணங்குவதாக ஐதீகம்.
வரலாறு : கௌதம மகரிஷியின் பத்தினியான அகலிகை பேரழகு கொண்டவள். அவளை அடைய விரும்பிய இந்திரன், ஒருநாள் நடுநிசியில் சேவலின் வடிவம் எடுத்துக்கொண்டு கௌதமரின் ஆசிரமத்துக்குச் சென்று கூவினான். பொழுது விடியும் நேரம் வந்துவிட்டதாக நினைத்த கௌதமர் எழுந்து ஆற்றுக்கு நீராடச் சென்றார். அப்போது, கௌதமரின் வடிவத்தில் ஆசிரமத் துக்குச் சென்ற இந்திரன், அகலிகையை களங்கப் படுத்திவிட்டான். ஆற்றுக்குச் சென்ற கௌதமர் இன்னும் நடுநிசியே தாண்டவில்லை என்பதைத் தெரிந்துகொண்டார். ஏதோ சூழ்ச்சி நடந்து விட்டது என்பதைப் புரிந்துகொண்டவர், ஆசிரமத்துக்கு விரைந்தார். இந்திரனின் சூழ்ச்சியை அறிந்துகொண்ட கௌதமர், இந்திரனின் உடல் எங்கும் கண்கள் தோன்றட்டும் என்றும் அகலிகையைக் கல்லாகும்படியும் சபித்துவிட்டார். இந்திரன் வெட்கித் தலைகுனிந்தான். அவன் உடம்பெல்லாம் கண்கள். அவன் தேஜஸ் மறைந்தது. தேவலோக மங்கைகள் அவனைக் கண்டு ஒதுங்கினர். அவன் சாப விமோசனம் தேடி அலைந்தான். தொடர்ந்து தேவகுருவிடம் சென்றும் விமோசனத்துக்கு வழிகேட்டான்.
குரு பகவான், “தேவர் தலைவனே! பூவுலகில் வனங்களில் சிறந்ததான `ஞான கான' எனும் வனத்துக்குச் செல். அங்கே மும்மூர்த்திகளின் அம்சமாக தாணுமாலயர் கோயில் கொண்டிருக் கிறார். அவரைப் பூஜித்து வழிபட்டால், உனது பாவம் கரையும்'' என்று அருள்பாலித்தார்.
அதன்படியே தன்னந்தனியனாக பூலோகத்தின் ஞான கான வனத்தை அடைந்தான் இந்திரன். அவனுடைய தேர் நின்ற இடம் 'தேரூர்' எனச் சிறப்பு பெற்றது. இந்திரனின் வாகனமான `ஐராவதம்' எனும் யானை, சித்தர்கிரி எனப்பட்ட மருந்துவாழ் மலைக்கு வந்தது. இந்திரன் நின்ற திசையை நோக்கி வணங்கியது; அங்கே தனது தந்தத்தால் கீறி ஒரு தீர்த்தத்தையும் உண்டாக்கியது. இந்திரன் அதற்கு ‘ஔஷத தீர்த்தம்’ எனப் பெயர் வைத்தான். தொடர்ந்து ஞான கான வனத்தில் தவம் இருந்த இந்திரன், `பூஜைக்கு நதியின் நீரும் இருந்தால் நன்றாக இருக்குமே' என எண்ணினான். அவனது எண்ணவோட்டத்தை அறிந்த ஐராவதம் மீண்டும் தனது தந்தத்தை தரையில் ஊன்றிக் கிளற, அந்த இடத்தில் இருந்து ஊற்றாகப் பொங்கிய நீர் ஆறாகப் பிரவாகம் செய்தது. அந்த ஆறு ஓடிய இடம் `கோட்டாறு' எனப்பட்டது. இங்ஙனம் தீர்த்தங்களை உண்டாக்கி சிரத்தையுடன் இந்திரன் மேற்கொண்ட தவத்துக்கும் பூஜைக்கும் பலன் கிடைத்தது; தாணுமாலயன் தோன்றி அவனுடைய சாபம் நீங்க அருள்பாலித்தார்.
இன்றைக்கும் இந்திரன் சுசீந்திரம் தாணு மாலயன் ஸ்வாமி கோயிலுக்கு நடுநிசியில் வந்து பூஜிப்பதாக ஐதீகம். நள்ளிரவில் இந்திரன் நடத்தும் பூஜையால் பொருட்கள் இடம் மாறி இருக்கும். இதைவைத்து இந்திரன் பூஜை செய்ததை அறியக்கூடும் என்பதால், முதல் நாள் இரவு பூஜை செய்தவர் அல்லாமல், மறுநாள் காலை பூஜையை வேறொரு நம்பூதிரி செய்வது, சுசீந்திரம் கோயிலில் இன்றளவும் உள்ள வழக்கம்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் எனும் ஊரில் அமைந்துள்ளது தாணுமாலயன் கோயில். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ள இக்கோயில் தாணுமாலயன் கோயில் என அழைக்கப்படுகிறது. அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் நீங்க தேவேந்திரன் இத்தலத்துக்கு வந்து மும்மூர்த்திகளை ஒரே சமயத்தில் வழிபட்டு விமோசனம் பெற்ற தலம் இது. சுசீ என்றால் தூய்மை என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று.
தல வரலாறு : இந்திரன் கோயில் இருக்கும் இடம், சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், மரங்கள் அடர்ந்த வனப் பகுதியாகத் திகழ்ந்ததாம். அதில் பல விலங்குகள் வாழ்ந்து வந்தன. அக்காலத்தில், மலையடிவாரத் தில், சிற்பி ஒருவர் அம்மி - குழவி கொத்தும் பணி செய்து வாழ்ந்தார். திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை களில் மலைக்கு மேலிருந்து பேரிரைச்சல் எழுமாம். அதே போல், மாலை வேளையில் மேள - தாள முழக்கங்களுடன் குரவை சத்தமும் கேட்குமாம். இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இருந்துள்ளார் சிற்பி. இந்நிலையில், ஒரு வெள்ளிக்கிழமை மாலை வேளையில், பேரொலியும் அதைத் தொடர்ந்து மணிச் சத்தமும் கேட்டுள்ளது. அதற்குப் பிறகும் சிற்பியால் தனது ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
செங்குத்தான மலைப்பாதையில் மிகவும் கஷ்டப்பட்டு ஏறி, சுமார் 360 அடி உயரத்துக்கு வந்ததும், அங்கே குகைக்கோயில் ஒன்று இருப்ப தைக் கண்டு மெய்சிலிர்த்துப்போனார். அதேநேரம் இடி - மின்னலுடன் பெருமழை பிடித்துக்கொள்ள, அவர் கண்களுக்குப் புறக்காட்சிகள் மறைந்தன. குகையும், துதிக்கையை அசைத்தபடி நிற்கும் யானையும் மட்டுமே அவரது விழிகளுக்குப் புலப்பட்டன. சிற்பி மனமுருக வேண்டவும் மழை நின்றது. மெதுவாக, பாறையைப் பிடித்து கீழே இறங்கி வீடு திரும்பிய சிற்பி, எவரிடமும் பேசாமல் மெளனம் கடைப்பிடித்தார்.
திடீரென ஒரு நாள், வெள்ளை யானை வாகனராக சிற்பியின் கனவில் தோன்றிய இந்திரன், “என்னை மக்கள் காண வருவதற்கு மலை அடிவாரத்தில் இருந்து படிகளை அமைக்க வேண்டும்.அது உனது பணி” என்று அருள் செய்து மறைந்தார். விழித்தெழுந்த சிற்பி, தனது கனவு குறித்து எவரிடமும் பகிர்ந்துகொள்ள வில்லை. சில நாட்கள் கழித்து, மக்கள் ஏறுவதற்கு வசதியாக, தன்னால் இயன்றளவுக்கு குறுகிய படிகளை (360 படிகள்) பாறையில் செதுக்கி அமைத்தார்.
பிற்காலத்தில் படிக்கட்டுகள் சற்றே அகலப்படுத்தப்பட்டு, பிடித்து ஏறுவதற்கு வசதியாக கைப்பிடி கம்பிகளையும் அமைத்தார்களாம். அரம்பத்தில், இந்திரன் குகை முகப்பு, பனையோலைகளால் வேயப்பட்டு திகழ்ந்ததாம். பிற்காலத்தில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் அமைக்கப்பட்டது. தற்போது கான்கிரீட் கட்டுமானத்தில் சுவாமி ஐயப்பன் சந்நிதி முதலானவையும் அமைக்கப் பட்டுள்ளன. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலையில், பக்தர்கள் வந்து இந்திரனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வணங்கிச் செல்கின்றனர்.
இந்தக் கோயிலின் அருகில் வற்றாத சுனைகள் இரண்டு உள்ளன. அதேபோல், இந்திரன் குகை அருகில் மேலும் இரண்டு குகைகளும் உள்ளன. அவற்றில் ஒன்று அடைக்கப்பட்டுள்ளது. மற்றொரு குகைக்குள் தவழ்ந்து நுழைந்து வெளியேறி னால், நினைத்தது நடக்குமாம். இந்தக் கோயிலுக்கு வரும் பெண்கள், சுனையில் குளித்துவிட்டு தலை துவட்டாமல் ஈரத்துணியுடன் இந்தக் குகையின் வழியே தவழ்ந்து வந்தால், பாவம் நீங்கி நோய்நொடிகள் அகலும். அமாவாசை, பௌர்ணமி திதிகளில் சுனை நீரில் தீர்த்தமாடினால், பித்ருக்களின் ஆசி கிடைக்கும். பழிபாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.
குழந்தை இல்லாத பெண்கள் இந்தக் கோயிலுக்கு வந்து இந்திரனை வேண்டிக் கொள்கிறார்கள். அவர்களது வேண்டுதல் பலித்து, ஆண் குழந்தை பிறந்தால் இந்திரன் என்றும், பெண் குழந்தை பிறந்தால் தெய்வயானை என்றும் பெயர் சூட்டுவது வழக்கம். பின்னர், ஓராண்டு கழித்து இந்திரன் கோயிலுக்கு குழந்தைகளை எடுத்து வந்து சிறப்பு பூஜைகளைச் செய்கிறார்கள்.அதேபோல், பூப்படையாமல் இருக்கும் பெண்கள் இந்திரன் கோயிலுக்கு வந்து பூஜை செய்து வழிப்பட்டால், விரைவில் பூப்படைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்திரன் சந்நிதிக்கு வலதுபுறம் ஆஞ்சநேயர் சந்நிதியும், அதற்கு வலப்புறத்தில் வள்ளி தெய்வானையோடு முருகன் அருள்பாலிக்கும் சந்நிதியும் உள்ளன. இந்திரன் சந்நிதிக்கு இடதுபுறம் தேவி சந்நிதியும், ஐயப்பன் சந்நிதியும் அமைந் துள்ளன. மலையேறும் பக்தர்கள், இந்திரன் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறத்தில் காயத்ரி அம்மன் சந்நிதியையும் தரிசித்து வரலாம். வெள்ளிக்கிழமை பூஜை விசேஷம். திருக் கார்த்திகை தீபத்தன்று, தீபம் ஏற்றி பக்தர்களுக்கு கொழுக்கட்டை பிரசாதம் வழங்கப்படுகிறது. வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்துக்கு முன் தினம் தொடங்கி, மறுநாள் வரை வருடாந்தர பூஜைகள் சிறப்புற நடைபெறுகின்றன.
தினமும் காலை 7.00 மணி முதல் 7.30 மணி வரை, வெள்ளிக்கிழமைகளில் மட்டும் காலை 7.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை.
அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்
அருகிலுள்ள ரயில் நிலையம் : நாகர்கோயில்
பேருந்து வசதி : உண்டு
உணவு வசதி : இல்லை
தங்கும் வசதி : இல்லை