திருவேங்கைவாசல், வியாக்ரபுரீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் வட்டத்தில் திருச்சி செல்லும் ரோட்டில் 5 கி.மீ தூரம் சென்று, திருவேங்கைவாசல் விலக்கில் திரும்பி கோயிலுக்குச் செல்ல வேண்டும்.பேருந்து வசதி அதிகமில்லை. புதுக்கோட்டையில் இருந்து கார், ஆட்டோவில் சென்று வரலாம்.
இறைவன் : வியாக்ரபுரீஸ்வரர், திருவேங்கைநாதர்
இறைவி : பார்வதி தேவி
தல விருட்சம் : வன்னி்
தல சிறப்புகள் : மேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் ஒளி விழுகிறது. யோக தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரர் வடிவில் காட்சி தருவது அபூர்வம். எங்குமில்லாத சிறப்பாக சிவனின் மூலஸ்தானத்திற்கு எதிரில் அவர் பார்வை படும்படியாக கணபதி வீற்றிருக்கிறார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி ஒரு பாதி ஆண் தன்மையும், மறுபாதி பெண் தன்மையும் கொண்டு, அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார்.
தல வரலாறு : திருவேங்கைபதி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. ஒரு முறை காமதேனு தாமதமாகச் சென்றதால் இந்திரனின் சாபத்திற்கு உள்ளானார். காமதேனு தன்னுடைய சாபம் நீங்குவதற்காக கபில முனிவரிடம் கருத்து கேட்க அவர் இரு காதுகளிலும் கங்கை நீரை நிரப்பி சிவனை வழிபட்டால் சாபம் நீங்கும் என்று கூறினார். இந்த முறையை தொடர்ந்து செய்து வந்த காமதேனுவின் பக்தியை சோதிக்க சிவன் புலி உருவில் வந்து காமதேனுவைக் கொல்லப் போவதாகக் கூறினார். சிவ பூசை முடித்து வந்தபின் தன்னைக் கொல்லலாம் என்று காமதேனு கூறவே, சிவன் காமதேனு மீது பாய்வது போலப் பாய்ந்து சென்று தேவியுடன் காட்சி தந்து சாபத்திற்கு விமோசனம் தந்தார். சாப விமோசனம் அடைந்த காமதேனு தன்னைப் போலவே அனைவருக்கும் அருள வேண்டும் என்று கேட்க, காமதேனுவின் ஆவலை பூர்த்தி செய்தார் சிவபெருமான்.
புகழ்பெற்ற தொண்டைமான் மன்னர்களின் குலதேவதையாக விளங்கிய, திருகோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் - கோகர்ணேசுவரர் திருத்தல வரலாரோடு தொடர்புடையது இந்த வியாக்ரபுரி என்னும் திருவேங்கைவாசல். பண்டை நாட்களில் மகிழ மரங்கள் அடர்ந்த காட்டில் இருந்தவர் மகிழவனேஸ்வரர் என்னும் வகுளவனேஸ்வரர் என்றும் வழங்கப்படும் சிவபெருமான். இவர்தான் திருகோகர்ணம் திருத்தலத்தின் பழைமையான மூலமூர்த்தி. சாப விமோசனுத்துக்காகத் தன் காதுகளில் கங்கை நீரை எடுத்து வந்து தினமும் அந்த ஈசனுக்கு அபிஷேகம் செய்து வந்தது காமதேனப் பசு. அப்படி வந்த பசுவின் பக்தியை சோதிப்பதற்காக மகாதேவர், வேங்கையாக உருவெடுத்துப் பசுவை வழிமறித்த தலம்தான் திருவேங்கை வாசல் என வழங்கப்படுகிறது. திருகோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் கோகர்ணேசுவரரை தரிசிக்கும் அன்பர்கள் சிரமம் பாராமல் இந்தத் திருக்கோவிலுக்கும் வந்து சுவாமியையும் அம்பிகையையும் தரிசித்துச் செல்வது பெரும் பயன் நல்குவதாய் இருக்கும்.
கோவில் அமைப்பு : கோயில் சுற்றுப்பிரகாரத்தில் எண்கோண வடிவில் தவக்கோல சன்னதி உள்ளது. முருகப்பெருமான் தாமரை மீது, ஒரு காலை மடித்து மறு காலை நீட்டி அமர்ந்து, தவம் புரியும் கோலத்தை தரிசிக்கலாம். இவரிடம் வேலும் இல்லை. மயிலும் இல்லை. ஆண்டி கோலத்திலும், ராஜ அலங்காரத்திலும் முருகனை வழிபட்டு வந்த நமக்கு, இப்படி தவக்கோலத்தில் முருகனை தரிசிப்பது வித்தியாசமான அனுபவமாகும். இங்கு நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்கள் அமையவில்லை. அதற்கு பதிலாக 9 விநாயகர்கள் அமர்ந்துள்ளனர். எல்லா கோயில்களிலும் மூலஸ்தானத்தின் முன்னால் இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆனால், இங்கு ஒரு பக்கம் துவாரபாலகரும், மறுபக்கம் விநாயகரும் இருக்கிறார்கள். மேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் கதிர்கள் பட்டு சூரியபூஜை நடப்பதை காண கண்கோடி வேண்டும். இது தவிர கோயிலினுள் உள்ள 800 ஆண்டு பழமையான வன்னி மரம் நம்மை மேலும் வியப்பில் ஆழ்த்தும். இங்கு எந்த ஒரு சன்னதி இருந்தாலும், அங்கிருந்து மற்றொரு சன்னதியை பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. உதாரணமாக சிவன் சன்னதியிலிருந்து பார்த்தால் தேரடி விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியிலிருந்து பார்த்தால் காலபைரவர் சன்னதியும், மகாவிஷ்ணுவின் சன்னதியிலிருந்து பார்த்தால் மகாலட்சுமி சன்னதியும் தெரியுமாறு அமைந்துள்ளன.
மூலவர் வேங்கைவன நாதர் சிறிய சிவலிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அர்ச்சகர் காட்டும் தீபராதனை ஒளியில் கூர்ந்து பார்த்தால் அதில் இறைவனின் வேங்கை வடிவத்தைக் கண்டு பிரமிப்படையலாம். சிவலிங்கத்தின் மேல் பகுதியில் வட்டமான இரண்டு வேங்கைக் கண்களையும், ஆக்ரோஷமாய்த் திறந்துள்ள வேங்கையின் வாய்ப்பகுதியையும் கண்டு ஆனந்தித்து அருள்பெறலாம். இருபத்தோரு கல்வெட்டுகள் இந்தத் திருக்கோவிலில் உள்ளன. இவற்றில் மிகவும் பழைமையானது கி.பி. 1011 இல், முதலாம் ராஜராஜன் காலத்தில் பதிவாகியுள்ளது, இக்கல்வெட்டில் ஈசனின் திருநாமம் திருமேற்றளிப் பெருமான் என்பதாக உள்ளது. அடுத்து கி.பி. 1037 இல் பதிவாகியுள்ள கல்வெட்டில் சிவனை சூடாமணி விடங்கன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. பெரும்பாலான கல்வெட்டுகள் பூஜைக்கு நிலம் போன்றவை வழங்கிய தகவல்கள் தாம். ஆலயத்தின் மகாமண்டபம் சோழர்களின் கட்டுமானம். அம்பிகையின் கருவறை பிற்கால சோழர் காலம் அல்லது பாண்டியர்களின் தொடக்க காலம் என்று கருதப்படுகிறது. விமானம் இரண்டு அடுக்ககளில் உருவாகியுள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில் அது.
சிவபெருமான் அருள்பாலிக்கும் கருவறையின் வெளிப்புறச் சுற்றில், முப்புறமும் கோஷ்ட தேவதைகள் இருத்தல் மரபு. இத்திருக்கோயிலில், வடபுறம் உள்ள புழை வெறுமையாக உள்ளது. மேற்குப் புறப் புழையில் நின்ற திருக்கோலத்தில் மகா விஷ்ணு இடம் பிடித்திருக்கிறார். தென்புறப் புழையை ஒட்டி ஒரு சிறுமண்டபமே எடுப்பித்திருக்கிறார்கள். சிதிலமான கட்டப்பகுதிகளில் விழுந்து கிடந்திருக்கக் கூடிய தூண்களை வைத்து இதை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தத் தென்புறப் புழையில்தான், திருவேங்கை வாசல் ஆலயத்தின் ஒப்புவமையற்ற சிற்பச் செல்வமான ஞானதட்சிணாமூர்த்தி இடம் பெற்றிருக்கிறார். இவர் மிகவும் அரிதான நுட்பக் கலை வடிவம்.
அம்பிகையின் சந்நிதி தெற்குப் பார்த்து அமைந்துள்ளது. சுவாமியின் எதிரில் உள்ள நந்திக்குத் தென்புறம் ஒரு கம்பம் நிற்கிறது. இதைக் கம்பத்தடிக் கருப்பர் என்னும் கிராம தேவதையாக வழிபடுகிறார்கள். திருக்கோயில் எடுப்பிக்கப்படுவதற்கு முன்னால் வேங்கை வனக் கடவுளுக்குத் துணையாக இருந்த கருப்பர் என்று சொல்வார்கள். திருச்சுற்றின் தென்புறத்தில், கிழக்கு நோக்கி இன்னொரு பிரகதாம்பாளின் கருவறையும் உண்டு. இந்தத் திருமேனியின் வலக்கர விரல் ஒன்று பின்னப்பட்டு விட்டதாகவும், அதனால் இதை வழிபாட்டிற்கு உகந்ததன்று என்று ஒதுக்கி, பக்கத்திலுள்ள திருக்குளத்தில் போட்டு விட்டு வேறு புதிய வடிவத்தை உருவாக்கியதாகவும், அப்போது அம்பிகையே மன்னன் மற்றும் குருக்களின் கனவில் தோன்றி உன் குழந்தைக்கு கொஞ்சம் ஊனமிருந்தால் அப்படியே விட்டுவிடுவாயா? தூக்கி வீசி விடுவாயா? என்று கேட்டதாகவும், அதன் விளைவாய், மன்னர் அன்னைக்கு தனிக் கருவறை எழுப்பி அம்பிகையை வைத்து வழிபட்டு வந்ததாகவும் சொல்வார்கள். இந்த கோவில் ராஜா ராமச்சந்திரத் தொண்டமான் எடுப்பித்தது. இந்த தேவியை தெற்கத்தி அம்பாள் என்கிறார்கள். மன்னன் கனவிலும் கோவில் குருக்களின் கனவிலும் ஒரே சமயத்தில் வந்து பேசியதால் அம்மனை பேசும் தெய்வம் பிரகதாம்பாள் என்றும் அழைப்பார்கள். இந்த அருள்மிகு பிரகதாம்பாள் சமேத வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோவில் சக்தித்தலம், குருஸ்தலம், சூரிய ஒளிக் கோவில், பிற வழிக் கோவில் என்றெல்லாம் புகழப்படுகிறது. நவகிரக தோஷம் அகலவும் இங்கு அன்பர்கள் வந்து வழிபடுகிறார்கள்.
மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை,திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும். வைகாசி விசாகம் பத்து நாள்கள் மற்றும் தைப்பூசம் போன்ற விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : புதுக்கோட்டை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை