பாபவிநாசகர் திருக்கோவில், பாபநாசம் (சூரியன்)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் , பொதிகை மலையின் அடியில் இக்கோவில் அமைந்துள்ளளது. முக்கூடல் - சேரன்மகாதேவி வழியாக பொதிகை மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இத்தலம் பாவநாசம் எனவும் அழைக்கப்படுகிறது.
புகை வண்டி மூலம் வருபவர்கள் திருநெல்வேலி சந்திப்பு மற்றும் தென்காசி சந்திப்பிற்கு இடையில் உள்ள அம்பாசமுத்திரம் புகைவண்டி நிலையம் வந்து அங்கிருந்து பேருந்துகள் மூலம் இக்கோவிலை அடையலாம். கோவில் வாசலிலேயே பேரூந்துகளிலிருந்து இறங்கிக் கொள்ளலாம். இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை
தீர்த்தங்கள் : தாமிரபரணி, வேத தீர்த்தம் , பழைய பாபநாஸதீர்த்தம் , வைரவ தீர்த்தம் , வான தீர்த்தம்
தல விருட்சம் : கிளா மரம்
நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்
சிறப்புகள் : மாமுனிவர் அகத்தியர் இட்ட மலரில் முதல் மலர் நின்ற இடம் இத்தலம் ஆகும். தாமிரபரணியாறு பொதிகை மலையில் தோன்றி சமவெளியை அடையும் இடமே பாபநாசம் ஆகும். இக்கோவிலின் எதிரிலேயே தாமிரபரணி ஆறு ஆண்டு முழுதும் வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இத்திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது . நாம் செய்த பாவத்தை நாசம் செய்யும் தலமாகும். இங்குள்ள படித்துறையில் நீராடி இறைவனை வழிபட்டால் , நாம் செய்த அணைத்து பாவங்களும் நீங்கும் ஐதீகம். தை அமாவாசை , ஆடி அமாவாசை நாட்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி வழிபடுவர். முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்ய உகந்த இடமாகும். நவக்கிரக தலங்களில் சூரியன் தலமான சூரியனார் கோவிலைத் தரிசித்த பலன் இத்தலத்தில் கிடைக்கும் என்பர்.
இக்கோவில் இயற்கை எழில் சூழ்ந்த ஆற்றின் கரையில் அற்புதமான கலையம்சத்துடன் விளங்குகிறது. ஏழு அடுக்குகள் கொண்ட பெரிய கோபுரம் நம்மை வரவேற்கிறது. கொடிமரம் நந்தீஸ்வரர்ரை வணங்கி கோவிலுக்குள் நுழைந்தால் , சிவன் கோவில் அம்பாள் கோவில் என இரு பகுதிகளாக விளங்குவதைக் காணலாம்.
கோவில் அமைப்பு : மகா மண்டபம் வழியாக அர்த்த மண்டபம் சென்று கருவறையில் இருக்கும் லிங்கம் மிகவும் சொர சொரப்பாக , ருத்திராட்ச முத்துக்களால் செய்தது போன்று விளங்குகிறது. முதல் பிரகாரம் சுற்றி வரும் போது சூரியன், சுரத்தேவர், அகத்தீஸ்வரர், தட்சணாமூர்த்தி , அறுபத்து மூவர் ஆகியோரைத் தரிசித்து கருவறையின் பின் பக்கம் வருகிறோம். அங்கு ஒரு தனிச் சந்நிதியில் , அகத்தியருக்கு கல்யாணக் காட்சி நல்கும் கோலத்தில் சிவன் பார்வதி திருமணக் கோலத்தில் உள்ளனர். அகத்தியர் அவருடைய மனைவி லோபாமுத்திரையுடன் சிவன் பார்வதி திருமணக் கோலத்தைக் கண்டு வணங்குகிறார்.
சிவன் பார்வதி திருமணம் காண சகல தேவர்களும் இமயம் வந்து விட்டதால் , வடபகுதி தாழ்ந்தும் தென்பகுதி உயர்ந்தும் விட்டது. உலகைச் சமநிலைப்படுத்த சிவன் அகத்தியரை தென் திசை நோக்கிச் செல்ல கட்டளையிட்டு இங்கு நடைபெறும் திருமணக் காட்சியைப் பொதிய மலைச் சாரலில் இருக்கும் பாபநாசத்திலே சித்திரை மாதப் பிறப்பு தினத்திலே வந்து காட்சி கொடுப்போம் என்று உத்தரவிட்டார். அகத்தியரும் விடைபெற்று வரும் போது தாமிரபரணி தீர்த்தத்தை இறைவனிடமிருந்து தமது கமண்டலத்தில் பெற்று வந்துள்ளார். இறைவனும் அகத்தியரை பொதியமலையை விட்டு நீங்காமல் எப்போதும் இருத்தல் வேண்டுமென்றும் , தாமிரபரணி நதியை இம்மலையின் உச்சியிலிருந்து பெறுக விட்டு விட வேண்டும் என்று கட்டளையிட்டார். அகத்தியருக்கு திருமணக் காட்சி கொடுத்த வைபவம் இக்கோவிலில் ஒவ்வொரு வருடம் சித்திரை முதல் தேதியன்று இரவு 12 மணியளவில் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
சுவாமி கோவிலுக்கு வடக்கில் அம்பாள் உலகம்மை எழுந்தருளியுள்ள சன்னிதானம் அமைந்துள்ளது. வலது கையில் மலர்ச் செண்டுடனும் இடது கையைத் தொங்க விட்டும் அருள் பாலிக்கும் அம்மையின் திருவதனம் சிரித்த முகத்துடன் விளங்குகிறது. இச்சந்நிதிக்கு எதிரில் பள்ளியறையும் அடுத்து வைரவர் சந்நிதியும் உள்ளது. இச்சந்நிதிக்கு எதிரில் இரெண்டாவது பிரகாரத்தில் நவக்கிரகங்கள் சந்நிதியும் திருமண மண்டபமும் உள்ளன. அகத்தியருக்கு திருமணக்காட்சி கொடுத்தது மட்டுமின்றி இத்தலம் அநேக புராணச் சிறப்புகளை உடையதாகவும் விளங்குகிறது. மும்மூர்த்திகளை விட தவத்தில் மேம்பட்டவரும் , இரெண்டு ருத்திரர்களின் ஆயுளைத் தனக்கு ஒரு வாழ் நாளாகக் கொண்டு கோடி வருடங்களை ஆயுளாகக் கொண்டவரும், மகேஷ்வரனுக்கு நிகரானவருமான விராட்டு என்பவர் , இத்தலத்தில் பூஜை செய்து மகா சிவராத்திரியன்று மோட்ச பதவி அடைந்தார். இவருடைய வேண்டுதல்படி இத்தினத்தில் இத்தலத்தில் பூஜை செய்பவர்கள் மோட்சத்தை அடைவார்கள் என்று கூறி சிவபெருமான் இப்பாபநாசலிங்கத்தில் மறைந்தருளி , எக்காலமும் இதனை விட்டு நீங்காது எழுந்தருளியுள்ளார் என்பர்.
நான்கு வேதங்களில் அதர்வணவேதமானது ஆகாய ரூபங்கொண்டும் மற்றைய மூன்று வேதங்களும், மூன்று களா விருட்சங்களாகி, இந்த லிங்கத்திற்கு நிழல் செய்தும் , தேனையும் , மலரையும் சொரிந்து பூஜை செய்கின்றன. இம்மூன்று களா மரங்களையும் , கர்ப்பகிரகத்தின் பின்னால் வெளிப் பிரகாரத்தில் நாம் இன்றும் காணலாம்.
நாரதர் அறிவுரைப்படி , பொதியமலை , சையமலை , தருத்தரமலை ஆகிய மூன்றும் , இத்தலத்து இறைவனை பூஜித்து வரும் போது ஒரு மகா சிவராத்திரியன்று , சிவபெருமான் இவர்களுக்கு தரிசனங் கொடுத்து , பாண்டியன், சேரன், சோழன் என மூன்று அரசர்களாகப் பிறக்க வரம் கொடுத்தருளினார். இவர்களும் நெடுங்காலம் வாழ்ந்து இறுதியில் மோட்சத்தை அடைந்தனர்.
அகத்திய மாமுனிவரால் யானையாகச் சபிக்கப்பட்ட இந்திரத்துய்மனன் என்ற அரசன், முக்களா முதல்வராகிய சிவனை நினைந்து தோத்திரம் செய்தும் , மலர் பறித்து பூஜை செய்தும் வந்ததால் , அவ்வாணையின் காலைக் கவ்விப் பிடித்த முதலையை தனது சக்ராயுதத்தால் விஷ்ணு கொன்று காத்தருளினார். சிவபெருமானும் அவ்விடத்தில் எழுந்தருளினார். சுயரூபம் பெற்ற இந்திரத்துய்மனன் , அத்தடாகக் கரையிலேயே சிவனும் ,விஷ்ணுவும் எழுந்தருளியிருக்க வேண்டுமென்று பிரார்த்திக்க , அதன்படி அருகிலுள்ள அத்தாளநல்லூர் தாமரைக் குளக்கரையில் இருவரும் கோவில் கொண்டுள்ளனர். இத்தலத்து இறைவனை வழிபட்டால் , சூரிய பகவானின் அருள் பெறுவதோடு, கண் மற்றும் தோல் சம்பத்தப்பட்ட நோய்கள் நீங்கும் என்பர்.
மார்கழி மாதத்தில் இத்தலத்தில் கங்கை வந்து நீராடுவதாகக் கருதப்படுகிறது. எனவே இந்த லிங்கத்தை யார் தரிசித்தாலும் அவர்களுடைய அனைத்துப் பாவங்களையும் போக்குவதோடு அவர்கள் நினைத்ததையெல்லாம் கொடுத்தருள்வதால் இத்தலம் பாபநாசம் என்று அழைக்கப்படுகிறது.
தலபுராணம் : சிறுவயதில் அண்ணன், தங்கை தனித்தனியே பிரிந்து சென்றனர். விதிவசத்தால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் சந்தித்தனர். யாரென்று தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு உறவு தெரிந்தது. செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடி கறுப்புப் போர்வையைச் சுற்றிக் கொண்டு முனிவர்களாகப் பல புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட்டனர். ஒருநாள் இறைவன் அவர்கள் கனவில் தோன்றி இந்த கறுப்புப் போர்வை எந்தத் தலத்தில் வெள்ளைப் போர்வையாக மாறுகிறதோ, அங்கு உங்கள் பாவம் நீங்கி முக்தி கிடைக்கும்.
இத்தலத்தில் மூன்று பிரகாரங்கள் உள்ளன. பலிபீடம், நந்தி, கொடிமரம் ஆகியவை உள்ளன. உள் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் வடக்கு நோக்கியும், எதிர்புறத்தில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கியும் உள்ளனர்.
இத்தலத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் பொதிகைமலையிலிருந்து வரும் அகஸ்தியர் அருவி இத்தலத்தின் வழியாக செல்லும் போது தாமிரபரணி என அழைக்கப்படுகிறது. இன்றைய சூழலில் தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி மட்டுமே உள்ளது.
காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : பாபநாசம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு