கைலாசநாதர் திருக்கோவில், கோடகநல்லூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி - முக்கூடல் செல்லும் சாலையில் உள்ள நடுக்கல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
நட்சத்திரம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம்
தல தீர்த்தம் : தாமிரபரணி தீர்த்தம்
தல விருட்சம் : வில்வம்
சிறப்புகள் : இங்கு சிவபெருமான் , செவ்வாய் பகவான் வடிவில் அருள்புரிவதாகக் கூறுவர். ஒரு மனிதன் வாழ்நாளில் செவ்வாய் திசையின் ஆட்சி நடக்கும் போது நன்மைகள் மட்டுமே நடக்க வேண்டி வழிபாடு செய்ய வேண்டிய தலமாகும். நவக்கிரக தலங்களில் செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவிலைத் தரிசித்த பலன் கிடைக்கும். செவ்வாய்த் தோஷம், திருமணத் தடைகள் நீங்கவும் , சகல நோய்கள் குணமாகவும் மக்கள் அதிக அளவில் வருகின்றனர். இவ்வூருக்கு அருகில் பாயும் தாமிரபரணி தட்சிண கங்கை என்பர்.
தல வரலாறு : இத்தலத்து புராண பெயர் கார்க்கோடக சேத்திரம் மற்றும் கோடகனூர் என்பதற்கு புராண வரலாறுகள் உள்ளன. பரீட்சீத் மஹாராஜாவையும் , நளமகாராஜாவையும் தீண்டிய கார்க்கோடகன் என்னும் பாம்பு பாப விமோசனம் பெற வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கித் தவம் செய்தது. மகாவிஷ்ணுவின் அறிவுரைப்படி இத்தலத்திற்கு வந்து கடுந்தவம் செய்து முக்தி பெற்றது. இத்தலத்தில் தற்போதும் நல்ல பாம்புகள் மலிந்து கிடப்பதாகவும் , நல்லூருக்கு எவ்வித தீங்கும் செய்வதில்லை என்றும் கூறுவர். இத்தலத்தின் வடக்குப்புறத்தில் ஸ்ரீகைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது . கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், சிவகாமி அம்பாள் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். இக்கோவிலில் கொடிமரம் , கோபுரம் ஆகியவை இல்ல. இங்கு ஒரு நேர பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இருப்பினும் இங்குள்ள நந்திக்கு தினமும் திருக்கல்யாணம் நடைபெறுவது இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். இக்கோயில் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. ஆதிசங்கரர் இவ்வூரை 'தட்சிண சிருங்கேரி' என்று கூறியுள்ளார். தாமிரபரணி ஆற்றை இவ்வூர் மக்கள் 'தட்சிண கங்கை' என்கிறார்கள். மனோன்மணியத்தில் வரும் சுந்தர முனிவர் இவ்வூரில் அவதரித்த சுந்தர சுவாமிகளையே குறிக்கும். இன்றும் இங்கு கருநாகப் பாம்புகள் அதிகம். கோடைக்காலத்தில் இங்கு குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் அது நாளடைவில் மருவி கோடகநல்லூர் என்றாயிற்று. இந்த ஊரின் மேற்கிலுள்ள பெரிய பிரான் கோயில் கல்வெட்டில் கோடனூர் என்ற குலசேகர சதுர்வேதி மங்கலம் என்று ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோயில் அமைப்பு : சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். கோயிலுக்குள் கோபுரமோ, கொடிமரமோ இல்லை. இக்கோயிலில் விநாயகர், முருகன், வள்ளி தெய்வானைஆனந்த கௌரி அம்பாள், நந்தி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மொத்தம் இரண்டு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மாசி மாதம் சிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. பங்குனி மாதம் வருஷாபிஷேகம் திருவிழாவாக நடைபெறுகிறது. திருவாதிரை, சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. மற்ற நாட்களில் ஒரு வேளை மட்டுமே பூசை நடைபெறுகிறது.
திறக்கும் நேரம் : காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை
அருகில் உள்ள ரயில் நிலையம் : சேரன்மகாதேவி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை