சென்னிமலை தண்டாயுதபாணி கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டின் கொங்கு மலைப்பகுதி ஈரோடு மாவட்டத்தில், ஈரோடுநகரிலிருந்து 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஈரோட்டிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், பெருந்துறையிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
சுவாமி : சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி), ஸ்ரீ சிரகிரிவேலவன்
அம்பாள் : அமிர்தவல்லி, சுந்தரவல்லி
தீர்த்தம் : 20 வகை தீர்த்தங்கள் உள்ளன. இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், இமயன் தீர்த்தம், காசிபதீர்த்தம், பட்சி தீர்த்தம், நிருதிதீர்த்தம், சிவகங்கை காசிக்கிணறு, மாமங்க தீர்த்தம், வரடி தீர்த்தம், காளி தீர்த்தம், தேவி தீர்த்தம், செங்கழுநீர், வாலி விஷ்ணு தீர்த்தம், நெடுமால் சுனை, பிரம்ம தீர்த்தம், தேவர்பாழி, நவவீர தீர்த்தம், சாரதா தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் முதலிய தீர்த்தங்கள் இத்தலத்தில் உள்ளன. இத்தனை தீர்த்தங்கள் இருந்தாலும், சென்னிமலை ஆண்டவரின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய காரியங்களுக்கு, மலை அடிவாரத்தில் இருந்து திருமஞ்சன தீர்த்தம், மலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தல விருட்சம் : புலியமரம்
பாடியோர் : அருணகிரிநாதர்
தல சிறப்புக்கள் : இந்தியப் புகழ்பெற்ற இந்த கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் செய்தபின் தயிர் புளிப்பதில்லை என்ற அதிசியமும் நிகழ்கிறது. தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்து, பேரொளியும், பேரழகும், பெருங் கருணையும் பொங்க அற்புதக் காட்சி தந்து அருள்பாலிக்கிறான்.மலையாண்டவர் கோயிலுக்கு மேற்கே வள்ளி தெய்வானையின் ஆலயம் அமைந்துள்ளது. ஒருகல்லில் வடிவமைக்கப்பட்ட இவ்விருவரின் கற்சிலைக்கு நடுவில் கீழே ஒரு அற்புத லிங்கமும் இச்சிலையிலே இருக்கிறது. தேவராய சுவாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய ‘கந்த சஷ்டி கவசம்’ என்ற முருகன் மீதான கவசத்தை அரங்கேற்ற முருகனை வேண்டியபோது முருகனே கனவில் தோன்றி சென்னிமலை தலத்திலே வந்து அரங்கேற்றம் செய்ய அருளினார். அதன்படி இந்த சென்னிமலை தலத்திலே ‘கந்த சஷ்டி கவசம்’ என்ற கவசமாலை அரங்கேற்றம் செய்யப்பட்டது. முருகனின் 10வது படை வீடாக கருதபடுகிறது. கந்தர் சஷ்டி கவசம் பாடலில் வரும் சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக என்ற வரிகள் சென்னிமலை தண்டாயுத பாணியைக் குறிக்கும்.
இத்தல இறைவனை தண்டாயுதபாணி என்றும் அழைப்பார்கள். இங்கு இறைவன் அக்னி மூர்த்தியாக இரண்டு தலைகளைக் கொண்ட முருகப்பெருமான் திருக்காட்சியளிக்கிறார். வள்ளி தெய்வானை இருவரும், முருகப்பெருமானை திருமணம் செய்வதற்காக, அமிர்தவல்லி சுந்தரவல்லி என்ற பெயரில் தவம் செய்த சிறப்புமிக்க ஆலயம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைகிறது. மலையின் மீதும் காகம் பறப்பதில்லை. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். இடும்பனுக்கு பொதிகை மலை செல்ல வழி காட்டிய தலம். தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது.
கோயில் அமைப்பு : பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,749 அடி உயரத்தில் பசுமை மிக்க மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடிகளாலும் சூழப்பட்ட அழகிய வனப்பகுதியில் உள்ளது. மலைப்படி ஆரம்பம் முதல், மலை உச்சிவரை கடம்பனேசுவரர், இடும்பன், வள்ளியம்மன் பாதம், முத்துக்குமாரவாசர் என்ற மலைக்காவலர், ஆற்றுமலை விநாயகர் என்று சிறுசிறு சன்னதிகள் உள்ளன. நீண்ட இலைகளுடன் கூடிய துரட்டி மரம் என்ற மிகப் பழைய மரம் ஒன்று இங்கு மலைப்படி வழியில் உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படிகளில் ஏறிச்சென்று முருகனை தரிசிக்கலாம்.
கோவிலின் பின் மலைப் பகுதியில் புண்னாகுச் சித்தர் கோவில் அமைந்துள்ளது. இதன் அருகே சரவணமாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது. சென்னிமலை குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில் புண்னாகுச் சித்தர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது. இக்குகை, பழனி வரை செல்வதாக நம்பப்படுகிறது. இக்கோவிலுக்கு மலைப்பாதையாக வாகனங்கள் செல்ல, ரோடு வசதி உள்ளது. தேவஸ்தானம் மூலம், பக்தர்களை அழைத்து செல்ல பஸ் வசதி உள்ளது. பக்தர்களே, அவர்களது வாகனங்களில் சென்று வரவும் அனுமதி உண்டு. அத்துடன், மலைப்பாதையாக, 1,320 திருப்படிகள் ஏறி செல்ல படிகள், நிழற்கூரைகள் உள்ளன. இவ்வழியாகவே அதிக பக்தர்கள் சென்று, தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 1984, ஃபிப்ரவரி, 12ம் தேதி உலக அதிசயமாக, இரட்டை மாட்டு வண்டி, படி வழியாக மலையேறிய அதிசயம் நிகழ்ந்தது. முதல் நாள் இரவே மலை மற்றும் நகரம் முழுவதும், பல லட்சம் பேர் திரண்டனர். அதிகாலையில், இரட்டை மாட்டு வண்டி, தடையின்றி, படிகள் வழியாக ஏறிச்சென்ற நிகழ்வு, இறைவனின் திருவிளையாடலாக கருதப்படுகிறது.
தல வரலாறு : நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாடுடன் இருக்க இடுப்புக்கு கீழ் பாதம் வரை கரடுமுரடாக இருக்க அதை உளி கொண்டு செதுக்க முயன்றார். அப்போது சிலையில் இருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்டு எல்லோரும் பயந்து போய் வேலையை நிறுத்தி விட்டு அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். சிலை இடுப்புக்கு கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம். தவிர ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் யுத்தம் ஏற்பட்டபோது ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் சென்னி மலை என்று கூறுகின்றனர்.
சென்னிமலை முருகனுக்கு மலைமேல் மண்டபம் கட்ட தீர்மானித்தார் நிலத்தம்பிரான். கட்டும்போதே மலையடிவாரத்தில் உள்ள கயிலாசநாதர் கோயிலுக்கு மதில் எழுப்பும் பணியையும் மேற்கொள்ள விரும்பினார். அப்போது கோவையும், மலபாரும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன. கதவுக்கு மரம் தேடி பொள்ளாச்சி நகருக்குச் சென்றார் தம்பிரான். ஆனைமலையில் ஒரு பெரிய மரத்தைப் பார்த்த அவரும், அவருடைய சீடர்களும் அந்த மரத்தை வெட்ட ஆரம்பித்தனர்.
அப்போது அங்கே வந்த ஆங்கிலேய அதிகாரி, அவர்களைத் தடுத்தார். “யாரைக் கேட்டு மரத்தை வெட்டுகிறீர்கள்?” என்று ஆங்கிலத்தில் அதட்டினார். அவரிடம், ‘சென்னியாண்டவன் வெட்டச் சொன்னார்; வெட்டுகிறேன் என்று பதில் சொல்லி, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார் நிலத்தம்பிரான். காரணம், அவருடைய பதில் ஆங்கிலத்திலேயே இருந்ததுதான். அதிகாரியே தன் ஆட்களைக் கொண்டு, அந்த மரத்தை வெட்டி சென்னிமலைக்கு அனுப்பி, தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சென்னிமலை அடிவாரத்தில் கயிலாச நாதர் ஆலயத்தில் இப்போதும் இருக்கும் அந்த முன் கதவுதான் அது. ஒரே மரத்தால் செய்யப்பட்டது.
முந்நூறு ஆண்டுகளுக்கு முன், பத்து வயதுப் பையன் செங்கத்துறையான் பஞ்சம் பிழைக்க சென்னிமலைக்கு வந்து, ஒரு பண்ணையாரிடம் வேலைக்கு சேர்ந்தான். தன்னுடைய 25வது வயதிலும் அப்பாவியாக இருந்த அவன் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது, கையில் வேலுடன் சென்னியாண்டவர் காட்சி தந்தார். நிலத்தம்பிரானே என்று அழைக்கவும் செய்த அவர், இந்த சிரகிரி மலைமேலே எனக்கு நீ ஒரு கோயில் கட்டு என்றருளி மறைந்தார். சென்னிமலை மீது முருகனுக்குக் கோயில் கட்ட ஆரம்பித்தார் நிலத்தம்பிரான். கோயில் திருப்பணிகள் நடந்தபோது தம்பிரான் ஊர் ஊராகச் சென்று, மக்களது குறைகளைத் தன் ஆன்மிக சக்தியால் தீர்த்து வைப்பார். அதன்மூலம் கிடைத்த தொகையுடன் கட்டிடப் பணியாட்களுக்குக் கூலி கொடுக்கக் குறிப்பிட்ட நாளன்று சென்னிமலைக்கு வந்து விடுவார். அவர் கூலி கொடுக்கும் முறை வித்தியாசமானது. பொரி மூட்டைகளை அவிழ்த்துக் கொட்டி, கடலலையை கலக்குவதுபோல, பணத்தை பொரியுடன் கலக்கி, தன் இரு கைகளால் அள்ளிப் போடுவார். அந்தப் பணத்தை எண்ணிப் பார்த்தால் அவரவர் செய்த வேலைக்கான கூலி துல்லியமாக இருக்கும்.
கோயில் வேலைகளை முடித்த தம்பிரான் கும்பாபிஷேகத்துக்கு நாள் குறித்தபோது, சென்னியாண்டவன் தன்னை அழைப்பதை உணர்ந்தார். சென்னிமலை அடிவாரத்தில் தனக்காக தானே ஏற்கெனவே அமைத்திருந்த சமாதியில் போய் அமர்ந்தார். அந்த நிலையிலேயே 15ம் நாள் சமாதியானார். மலைப்படி அருகே செங்கத்துறை பூசாரியார் மடம் ஒன்று இருக்கிறது. அங்கு அவர் சமாதிக்கு மேலே முருக விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து, சிறு கோயில் கட்டியிருக்கிறார்கள். மகா மண்டபத் தூணில் நிலத்தம்பிரானது சிலை உள்ளது. அருகில் உள்ள ஊரிலிருந்து சிவாச்சாரியார் ஒருவர் வந்து பூஜை செய்து, வில்வ மரப்பாலால் ஆண்டவன் நெற்றியில் பொட்டு வைப்பார். ஒருநாள் சிவாச்சாரியார் வராததால் நிலத்தம்பிரானே பூஜை செய்தார். அப்போது உயரம் குறைந்த தம்பிரானுக்காக ஆண்டவர் தலையைக் கொஞ்சம் தாழ்த்தி பொட்டை தன் நெற்றியில் ஏற்றுக் கொண்டாராம். அதனால் இப்போதும் அந்த சிலை தலை தாழ்த்தியபடியே இருக்கிறதாம்.
தைப்பூசத் தேர்த்திருவிழா, திங்கட்கிழமை, சசுடி திதி, கார்த்திகை நட்சத்திரம், அமாவாசை மற்றும் பௌர்ணமி சிறப்பு பூசை நாட்கள் திருமணம், வரன்கள், விவசாயம், கிணறுவெட்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதிகள் ஆகியவை குறித்து முடிவு செய்ய ஆண்டவர் முன்னால் அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்திரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்தபின்பு காரியத்தை தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாக கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களை பக்தர்கள் தொடங்குவதில்லை. முருகன் நடுநாயகமாக, மூர்த்தியாக, செவ்வாய் கிரகமாக அமைந்து மூலவரைச் சுற்றி எட்டு நவகிரகங்கள் உள்ளன. மூலவரை வழிபட்டாலே நவகிரகங்களை வழிபட்ட பலன் உண்டு.
இத்தலம், செவ்வாய் பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது. ஏற்கனவே, நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலிலும், முருகப்பெருமான் செவ்வாய் அம்சமாகவே அருள்பாலிப்பதால், செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. அதுபோல, சென்னிமலையும், பரிகார ஸ்தல சிறப்பு பெற்றுள்ளது. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உடையவர்கள், இத்தலத்தில் முருகனுக்கு நெய்தீபம் ஏற்றி, வழிபட்டால் தோஷத்துக்கான *காரணிகள் நீங்கி, சுபிட்ஷம் பெருவர். இரவு அர்த்த ஜாம பூஜை முடிந்ததும் சிரசு பூ கேட்டல் என்ற அற்புத அருள் வாக்கு நிகழ்வு சிறப்பாகும். முதல் பூஜை தண்டாயுத பாணிக்கே பின்னரே விநாயகருக்கு.
திருக்கோவில் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : பெருந்துறை
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு