ஸ்ரீ மஹா காளேஷ்வர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவில் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உஜ்ஜைனி ரயில் நிலையத்திலிருந்து 2.5 கி.மீ. தொலைவிள்ளது.
இறைவன் : ஸ்ரீ மகாகாளேஸ்வரர்
இறைவி : ஸ்ரீ ஹர்சித்தி மாதா
தலவிருட்சம் : ஆலமரம்
தீர்த்தம் : புஷ்கரணி
மகாபாரதத்தின்படி உஜ்ஜயினி அவந்தி அரசின் தலைநகரமாகும். உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது. சிவனுடைய 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் இங்கேயே உள்ளது.
தல சிறப்பு : மூலவர் மகா காளேஷ்வர் பெரிய அளவு லிங்க ரூபமாக காட்சியளிக்கிறார். தென்னிந்தியா போல் அல்லாமல் மூலவர் கருவறைக்குள் சென்று, மூலவரை தொட்டு நாமே நம் கைகளால் அபிஷேகம் செய்யலாம். வட மாநிலத்தவர் பாலாபிஷேகம் செய்வதோடு நில்லாமல் லிங்க சொரூபத்தை அப்படியே கட்டி தழுவி ஆராதிக்கின்றனர். ஸ்ரீ மஹா காளேஷ்வரர் தினமும் மூன்று வேளையும் பூஜை நடந்து வருகிறது. அரசித்தி தேவியாக மகாகாளி தோன்றிய இடத்தில், சிப்ரா நதிக்கரையில், ஒரு கோயில் கட்டி மக்கள் வழிபட்டு வருகின்றனர். முழங்கை பகுதி விழுந்த இடமே ஹர்சித்தி ஆலயமாயிற்று.
தல வரலாறு : புராண காலத்தில் விலாசன் என்ற பெயருடைய அந்தணன் ஒருவன் வாழ்ந்து வந்தான். சிவபக்தியில் சிறந்தவன். ஊருக்கருகே இருந்த காட்டினுள் தூசனன் என்பவன் வேதாளமாக சாபம் பெற்று அப்பக்கம் செல்வோரை கொன்று வந்தான். மக்கள் அக்காட்டு வழி செல்லவே பயந்தனர். அவ்வூர் மக்கள் ஒன்று கூடி, அந்தணரை அணுகி தங்கள் இன்னல்களுக்கு வழி காட்டுமாறு வேண்டிக் கொண்டனர். அந்தணரும், வேத விற்பன்னர்களைக் கொண்டு சிவபெருமானை வேண்டி ஒரு பெரும் யாகம் செய்வித்தார்.
யாகத்தின் முடிவில் யாக குண்டம் வெடித்து ஒரு பெரும் லிங்கம் தோன்றியது. அந்த லிங்கத்திலிருந்து கையில் சூலாயுதத்துடன் மகாகாளேச்வரர் தோன்றினார். மகாகாளர் காட்டிற்குள் சென்று சூலாயுதத்தால் வேதாளத்தை சம்ஹாரம் செய்தார். சாப விமோசனம் பெற்ற அந்த வேதாளமும் மறைந்தது. அந்தணரும், அந்த ஊர் மக்களும் மகாகாளரை அந்த ஊரிலேயே தங்கி தங்களை காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். ஆவேசம் தணிந்த மகாகாளரும் ஜோதி ரூபமாக லிங்கத்தினுள் சென்று மறைய இரண்டாக பிளவு பட்ட லிங்கம் ஒன்றாக கூடியது. அவ்வூர் மக்கள் அந்த லிங்கத்திற்கு ஒரு கோயில் கட்டி சிறப்பாக வழிபாடு செய்து போற்றி வருகின்றனர்.
கோயில் அமைப்பு : கோயில் மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டுள்ளது. முதல் அடுக்கில் ஓங்காரேஸ்வரரும், இரண்டாம் அடுக்கில் தாரகாஸ்வரரும் அமையப் பெற்றுள்ளனர். மூன்றாம் அடுக்கு பூமிக்கு கீழே அமைந்துள்ளது. சுயம்புவாகத் தோன்றிய ஹர்சித்தி தேவிக்கு விக்ரமாதித்திய மன்னன் ஆலயம் எழுப்பினார் என்றும் சொல்கிறார்கள். கோயிலின் கருவறையில் மஹாலக்ஷ்மி, மஹா சரஸ்வதிக்கு நடுவே தேவி ஹர்சித்தி வீற்றிருக்கிறாள். ஆனால் அவர்களது முழு உருவிலான சிலைகள் வைக்கப்படாமல் பிண்டி எனப்படும் கழுத்து பாகம் வரையிலான பகுதி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. மாகாளி ரூபத்தில் காட்சி தரும் தேவிக்கு சிவந்த பட்டுத்துணி போர்த்தி, அலங்காரம் செய்கிறார்கள். சன்னதிக்கு வரும் பக்தர்கள் மாகாளிக்கு புடவை சாற்றி வழிபடுகிறார்கள்.
சன்னதியில் தேவியின் இடப்புறம் பைரவர் சிலையும் வலப்புறம் வினாயகரது சிலையும் பதிக்கப்பட்டுள்ளன. ஹர்சித்தி மாதா சன்னதியை சுற்றி மேலும் பல தெய்வங்களுக்கு சன்னதிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒரு சன்னதியில் ஒரு கோடி நாகமந்திரப் பிரதிட்சை செய்யப்பட்ட கார்கோடன் எனும் நாகதேவர் கார்கோடக மகாதேவ் எனும் பெயரில் லிங்க வடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார். உலகில் உள்ள 84 கார்கோடக மகாதேவர் ஆலயங்களில் இதுவே முதலாமானது, முக்கியமானது. இந்த ஆலயத்துக்கு வந்து ஹரிசித்தியை வேண்டிக் கொண்டப் பின் கார்கோடக மகாதேவருக்கும் பூஜைகளை செய்தால் பிரச்சனைகள் தீரும் என்கிறார்கள்.
இந்த சன்னதி மிகுந்த சக்தி வாய்ந்த சன்னதியாகும். இங்கு உள்ள கார்கோடன் உலகில் உள்ள அனைத்து நாக தேவிகளையும், நாக தேவர்களையும் தன்னுடன் அடிமையாக வைத்துக் கொண்டு இருக்கிறாராம். ஹர்சித்தி மாதா ஆலயத்தின் உள்ளே, பூமிக்கு கீழே ஒரு சிறு அறையில் மஹாமாயா எனும் சக்தி வாய்ந்த தேவியின் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படுவது இல்லை. பூசாரி மட்டுமே செல்வார். ஆனால் அந்த தேவியை அந்த சன்னதியை சுற்றி மேலே எழுப்பட்டு உள்ள சுவற்றின் துவாரம் வழியேதான் தரிசிக்கலாம். மஹாமாயா துர்கையின் அம்சம். அவளை அங்கு வணங்கித் துதிப்பதின் மூலம் திருஷ்டி தோஷங்கள் விலகும் என்று நம்பப்படுகிறது. சன்னதியின் முன்புறத்தில் ஒரு கண்ணாடிக் குடுவையில் அகண்ட ஜோதி ஒன்று ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. பல காலமாக அணையாமல் உள்ளது.
ஹர என்றால் சிவன், சித் என்றால் சித்தம் என்பதாகும். அரன் என்னும் சிவபெருமான் சித்தத்தைப் பூர்த்தி செய்தமையால், மகாகாளிக்கு அரசித்தி தேவி எனப்பெயர் வழங்கலாயிற்று என்றும் அசுரர்களை அழித்ததினால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் ’ அனைத்துக் காரியங்களிலும் வெற்றி ‘ பெற்றுத் தருபவள் எனும் விதமாக ஹர்சித்தி தேவி என அவள் அழைக்கப்படுவாள்.
நடை திறக்கும் நேரம் : இந்த திருக்கோவில் காலை 5.00 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : இண்டோர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : உஜ்ஜைனி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு