வரசித்தி விநாயகர்
திருத்தல அமைவிடம் : தமிழகத்திலிருக்கும் பிள்ளையார்பட்டி போல ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காணிப்பாக்கம் ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருளாதாலுகாவில் உள்ளது. ஒன்றாம் குலோத்துங்க சோழ அரசரால் 11 ம நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதன் பின் விஜயநகர அரசரர்களால் இந்த ஆலயம் விரிவுபடுத்தப்பட்டது.
மூலவர் : வரசித்தி விநாயகர்
தல வரலாறு: முன்னொரு காலத்தில் இப்பகுதியில் பேசமுடியாத, பார்க்க முடியாத, கேட்க முடியாத மூன்று சகோதரர்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களது தொழில் விவசாயம். ஊனத்தின் காரணமாக இவர்களால் இணைந்து தொழில் செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. ஊமையாக இருப்பவர் சைகை மூலம் உரம் போடு என்றால், செவிடாக இருப்பவர் தவறாகப்புரிந்து கொண்டு களை பறிக்க சென்று விடுவார். இவர்கள் மீது இறைவன் இரக்கம் கொண்டான்.
ஒரு முறை சகோதரர்கள் கிணற்றில் நீர் இறைத்து கொண்டிருந்தனர். தண்ணீர் வற்றிப்போனதால், கிணற்றை மேலும் தோண்டினர். அப்போது ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. உள்ளே கவனித்த போது, யானை முக கடவுள் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அந்த சிலையை வெளியே எடுக்க ஊர் மக்கள் கடும் முயற்சி செய்தனர். முடியவில்லை. எனவே கிணற்றுக்குள் இருந்த நிலையிலேயே பல்லாயிரம் இளநீர் கொண்டு அபிஷேகம் செய்தனர். அந்த இளநீர் அருகில் இருந்த காணி நிலத்திற்குள் பாய்ந்தது. எனவே அவ்வூருக்கு காணிப்பாக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. பிறகு கிணற்றுக்குள்ளேயே விநாயகரைச்சுற்றி சன்னதி எழுப்பினர். நீண்ட காலத்திற்கு பின் தற்போதுள்ள கோயில் உருவானது.
தலச் சிறப்புகள் : விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய விநாயகர் கோயில்களில் இதுவும் ஒன்று. இங்கு நடைபெறும் சத்தியப் பிரமாணம் நிகழ்ச்சி புகழ்பெற்றது. தினமும் மாலையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தவறு செய்தவர்களை விநாயகர் முன்பு சத்தியம் செய்யச் சொல்கிறார்கள். பொய் சத்தியம் செய்தால் கடவுள் தண்டிப்பார் என்று பயந்து உண்மையை ஒப்புக்கொண்டு விடுகிறார்கள். இங்கு விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் உள்ளது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் இங்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இன்னொரு அதிசய நிகழ்வு, இந்த விநாயகர் சிலை வளர்ந்து கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் ஒரு பக்தை விநாயகருக்கு கவசம் சார்தியிருக்கிறார். அந்த கவசம் தற்பொழுது சார்த்த முடியாத அளவிற்கு சிலை வளர்ந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. இங்கிருந்து எடுக்கப்படும் நீர் தான் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. இத்தலம் பரிகாரத்தலமாகவும் வேண்டுதல் தலமாகவும் விளங்குகிறது.
இங்கு நாகர் சன்னதியும் இருக்கிறது. நாகர் சிலைகளின் மீது மஞ்சள் தூள் அபிஷேகம் செய்து போல தூவி, குங்குமப் பொட்டிட்டு, மல்லிகைப்பூ முல்லைப்பூ, மஞ்சள் சாமந்திப்பூ சார்த்தி, தேங்காய் - ஆறு வாழைப்பழம் - ஊதுவத்தி ஐந்து ஏற்றி அர்ச்சனை செய்து ஏழு நெய் அகல் தீபம் ஏற்றி இவரை வணங்கினால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. தமிழ்நாட்டில் உள்ள எத்தனையோ சுயம்பு தலங்களை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். காணிப்பாக்கம் ஸ்ரீவரசித்தி விநாயகர் மிக, மிக எளிமையானவர். ஆனால் தன்னை தேடி, நாடி வரும் பக்தர்களை எளிமையில் இருந்து சகல யோகங்களையும் கொடுத்து அனுபவிக்க வைத்து, இந்த ஜென்ம பிறவியை நிறைவாக மாற்றும் அற்புத ஆற்றல்கள் கொண்டவர்.
தரிசன நேரம் : கோவில் தினமும் காலை 4.00 மணி முதல் இரவு 9.30 மணி வரையும் திறந்து இருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருப்பதி
அருகிலுள்ள ரயில் நிலையம் : சித்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு