சிவலோக தியாகேசர் கோவில், திருநல்லூர் பெருமணம்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் ஆச்சாள்புரம் செல்லும் கிளைச் சாலையில் சுமார் 5 கி.மீ. சென்று இந்த சிவஸ்தலம் அடையலாம். சிதம்பரம், சீர்காழியில் இருந்து மயேந்திரப்பள்ளி செல்லும் நகரப் பேருந்துகள் ஆச்சாள்புரம் வழியாகச் செல்கின்றன.
சுவாமி : சிவலோகத்தியாகர், சிவலோகத் தியாகேசர், பெருமணமுடைய மகாதேவர்.
உற்சவர் : திருஞான சம்பந்தர்
அம்பிகை : திருவெண்ணீற்று உமையம்மை, சுவேத விபூதி நாயகி, விபூதிகல்யாணி
தல விருட்சம் : மாமரம்
தீர்த்தம் : பஞ்சாக்கர, பிருகு, அசுவ, வசிஷ்ட, அத்திரி, சமத்கனி, வியாச மிருகண்டு தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர்
சிறப்புகள் : காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள ஐந்தாவது தலமாகும். சம்பந்தர் திருமணக் கோலத்துடன் சோதியுள்கலந்த தலம். சுவாமி சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர் ஆகியோர்களுக்கு இறைவன் கயிலை காட்சி அருள்புரிந்து உள்ளார். பிரம்மா இங்கு வந்து வழிபட்டு படைப்பு தொழிலை கைவரப்பெற்றார். விஷ்ணு வந்து வழிபட்டு அசுரர்களை வெல்லும் வரம் பெற்றார். இந்திரன் போகம் பெற்றான். சந்திரன் அபயம் பெற்றான். கங்கா தேவி தவம் செய்து இங்குள்ள வாசலில் எழுந்து இறைவனை வழிபட்டாள். இங்கு வந்து வழிபட்டால் வினைகள் நீங்கும். பந்த பாசம் விலகும். சம்பந்தருக்கு சிவஜோதியில் கலக்க செய்த இறைவனை வழிபடுபவர்களுக்கு முக்தி நிச்சயம்.
பிரம்மா, விஷ்ணு, இந்திரன், சந்திரன், திருஞானசம்பந்தர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார்,வசிஷ்டர், பராசரர், பிருகு, ஜமத்கனி முனிவர், கங்கா தேவி, காக முனிவர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர்.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கி ஐந்து நிலைகளை உடைய இராஜ கோபுரத்துடன் காட்சி அளிக்கிறது. ஆலயத்தின் 11 தீர்த்தங்களில் ஒன்றான பஞ்சாட்சர தீர்த்தம் கோவிலுக்கு எதிரில் உள்ளது. இராஜ கோபுரத்தின் உள்ளே கவசமிட்ட கொடி மரம் மற்றும் நந்தி மண்டபமும் அடுத்து நூற்றுக்கால் மண்டபமும் அமைந்துள்ளன. நூற்றுக்கால் மண்டபத்தில் திருஞானசம்பந்தர் அவர் மனைவி ஸ்தோத்திர பூராணாம்பிகையுடன் மணக்கோலத்தில் தனி சந்நிதியில் காட்சியளிக்கிறார். அதை அடுத்து கிழக்கு நோக்கிய சிவலோக தியாகேசர் சந்நிதி உள்ளது. சுவாமி கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், வேலைப்பாடமைந்த தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை உள்ளனர். சுவாமி சந்நிதி வாயிலில் மேற்புறம் வண்ணச் சுதையில் சம்பந்தர் ஐக்கியமான காட்சி உள்ளது. ஸ்ரீரிணவிமோசனர் சந்நிதியும், அதையடுத்து ஸ்ரீமகாலட்சுமி சந்நிதியும் கருவறை மேற்கு சுற்றுப் பிரகாரத்தில் உள்ளன. இறைவி திருவெண்ணீற்று உமையம்மை சந்நிதி தனிக்கோவிலாக மேற்கு வெளிப் பிரகாரத்தில் மதில் சூழ்ந்த தனி வாயிலுடன் ஒரு சுற்றுப் பிரகாரத்துடன் அமைந்துள்ளது.
திருஞானசம்பந்தர் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு உமையம்மையே நேரில் வந்து திருநீறு அளித்ததால் அம்பிகைக்கு திருவெண்ணீற்று உமையம்மை என்ற பெயர் ஏற்பட்டது. இறைவியின் சந்நிதியில் குங்குமத்திற்கு பதிலாக திருநீறு தான் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைப் பூசிகொண்டால் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நீடித்திருக்கும். வருடம் தோறும் வைகாசி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சம்பந்தரின் திருமண திருவிழா நடக்கிறது.
திருஞானசம்பந்தர் தன் பெற்றோரின் விருப்பப்படி திருமணம் புரிந்து கொண்டு தம் மனைவியுடன் சுற்றம் சூழ திருநல்லூர் பெருமணம் ஆலயம் வந்து இறைவனைத் துதித்தார். சம்பந்தர் தன்னுடன் வந்த சுற்றத்தாரையும் அடியார்களையும் சிவசோதியில் கலந்து முக்தி அடையும் படி கூறினார். சிலர் நெருப்புச் சோதியைக் கண்டு தயக்கமும் அச்சமும் கொள்ள, சம்பந்தர் அவர்களுக்கு நமச்சிவாய மந்திரத்தின் மேன்மையைக் கூறி நமச்சிவாய திருப்பதிகம் பாடி தம்முடன் வந்தோரை எல்லாம் அச்சோதியில் புகுமாறு சொல்லி, தாமும் தன் மனைவியுடன் சோதியுட் புகுந்து இறைவன் திருவடியைச் சேர்ந்தார். சம்பந்தருடன் சேர்த்து திருநீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார், திருநீலக்க நாயனார் ஆகிய நான்கு நாயன்மார்கள் ஒரே நாளில், ஒரே இடத்தில் முக்தி அடைந்த தலம் என்ற் பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.
ஆச்சாள்புரத்தில் இருந்து மிக அருகில் உள்ளது நல்லூர் என்ற கிராமம். இந்த நல்லூர் கிராமத்திலிருந்து தான் சம்பந்தர் திருமணத்திறகு பெண் அழைப்பு நடைபெற்றது. இந்த நல்லூர் கிராமத்திலுள்ள சுந்தர கோதண்டராமர் கோவிலும் பார்க்க வேண்டிய இடமாகும். இக்கோவில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஜாதக தோஷங்களால் திருமணத் தடை ஏற்படுவர்களுக்கு இந்த சுந்தர கோதண்டராமர் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி புனர்வசு நட்சத்திரத்தில் திருமஞ்சனம் செய்வித்தால் தடைகள் நீங்கி நல்லவரன் அமைந்து நல்வாழ்க்கை அமையும்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சிதம்பரம், சீர்காழி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை