ஆரண்ய சுந்தரேஸ்வரர் கோவில், கீழை திருக்காட்டுப்பள்ளி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து இளையமுதுகுளபுரம் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
சுவாமி : ஆரண்ய சுந்தரேஸ்வரர்
அம்பிகை : அகிலாண்ட நாயகி
தலவிருட்சம் : பன்னீர் மரம்
பதிகம் : திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள் : ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது. இத்தலத்திற்கு ஆரண்யஸ்வரம் என்ற பெயரும் உண்டு. இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வன் இவரை வழிபட்டதால், இவர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு. அதன் நடுவே பலிபீடமும், நந்தியும் இருக்க, இடதுபுறம் இரண்டு சிவலிங்கங்கள் உள்ளன. பிரம்மேசர், முனி ஸ்ரீசர் என்ற அந்த இரண்டு சிவ லிங்கங்களை அடுத்து முருகப் பெருமான் சன்னிதி உள்ளது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் நின்ற கோலத்தில் இங்கு அருள்பாலிக்கிறார். வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரர் சன்னிதி உள்ளது. தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி ஆறு முனிவர்கள் சூழ காட்சி தருகிறார். அவர் அருகே சுவற்றில் மன்னன் ஒருவன் சிவபெருமானை பூஜை செய்யும் கற்சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.
கோவில் அமைப்பு : ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பை தாண்டி உள்ளே நுழைந்ததும், நீண்ட பிரகாரம் காணப்படுகிறது. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் பிரம்மேசர், முனியீசர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. அடுத்து, சுப்பிரமணியர், பைரவர், சூரியன் சந்நிதிகள் உள்ளன. கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பமுள்ளது. மேற்கு நோக்கிய சுவாமி சந்நிதியும் இடதுபுறம் அம்பாள் சந்நிதியும் ஒரு சேரத் தரிசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. இத்தலத்து இறைவன் ஆரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக சதுரபீட ஆவுடையாரில் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் தசலிங்கம் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. இங்கு சுவாமியே பிரதானம் என்பதால் இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை. சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோரும் பிரகாரத்தில் இருக்கின்றனர்.
மேற்கு திருச்சுற்றில் கற்கட மகா கணபதி உள்ளார். நண்டு பூஜித்தகணபதி இவர். இவரது பீடத்தில் நண்டு உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. கடக ராசிக்காரர்கள் இந்த விநாயகருக்கு, அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டால், அவர்களுக்கு ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.
இந்த விநாயகரை அடுத்து இரட்டை லிங்கம் உள்ளது. இந்த இரண்டு லிங்கங்களும் இணைந்து காணப்படும் அமைப்பு சிறப்பானது. இந்த இரட்டை லிங்கத்தை அபிஷேகம் செய்து ஆராதித்து வழிபட்டால், இழந்த பதவியை மீண்டும் பெறலாம். சுமார் 1000 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், சம்பந்தரால் பாடப்பெற்ற தலம் ஆகும். ஆலய கிழக்கு திருச்சுற்றில் உள்ள பிரம்மேசரை பூஜை செய்து வழிபடுபவர்கள், 100 அசுவ மேத யாகம் செய்த பலனை அடைவார்கள். பிரம்மன் இத்தலத்தில் வியாக்ரபாதேஸ்வரர், கபாலீசர், அகஸ்தியேசர், முனீசர், சுக்ரேஸ்வரர், பிரம்மேஸ்வரர் உள்ளிட்ட பத்து சிவலிங்க திருவுருவங்களை எழுந்தருளிவித்து வழிபட்டார். இது ஆரண்ய முனிவர் வழிபட்ட அருள்பெற்ற தலம். இவர் மகா காளம்மையை தம் பூஜை முடியும் வரை காவலாக இருக்குமாறு கேட்டுக்கொண்டு இறைவனை வழிபட்டார் என தல வரலாறு கூறுகிறது.
ஆலயம் மகாமண்டபத்தின் இடது புறம் அன்னை அகிலாண்டநாயகி தென்திசை நோக்கி நின்ற கோலத்தில், புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கிறாள். இறைவன் கருவறையில் சதுர பீட ஆவுடையாரின் மேல்திசை நோக்கி வீற்றிருக்கிறார். சிவபெருமான் பலாசவனம் என்றும், மதங்காஸ்ரமம் என்றும் வழங்கப்படும் திருநாங்கூரிலும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமாக 12 பீடங்களில் எழுந்தருளியுள்ளார். இந்த 12 ஆலய இறைவனும், ஏக காலத்தில் வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் ஒன்று சேருவார்கள். இவர்கள் அனைவரும் திருநாங்கூரில் அமைந்துள்ள மதங்கீஸ்வர சுவாமி ஆலயத்தில் ரிஷப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் திவ்ய தரிசனம் தரும் வைபவம் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்த வைபவத்தில் அகோர பீடம் என அழைக்கப்படும், இத்தல இறைவனும் இறைவியும் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமான சம்பவமாகும்.
தல வரலாறு : இந்திரன் ஒரு முறை, தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதியை அவமதித்தான். பின்னர் அசுர குலத்தைச் சேர்ந்த விசுவரூபன் என்பவனை, தேவர்களின் குருவாகக் கொண்டு ஒரு வேள்வியைச் செய்தான். ஆனால் விசுவரூபன் தேவர்கள் அழியுமாறு வேள்ளி செய்தான். இதையறிந்து அவனை இந்திரன் கொன்றான். விசுவரூபனின் தந்தையான துவாட்டா என்பவர், தனது மகனின் இறப்பை அறிந்து வேதனை கொண்டார். இந்திரனை அழிக்க ஒரு வேள்வி நடத்தினார். அதில் இருந்து விருத்திராசூரன் என்பவர் தோன்றி தேவர்களை துன்புறுத்தினான். அவனை அழிக்க புதியதொரு ஆயுதம் தேவைப்பட்டது. எனவே ததீசி என்ற முனிவரின் முதுகு தண்டுவடத்தில் ஆயுதம் செய்யப்பட்டது. அதுவே வஜ்ராயுதம். அதைக் கொண்டு விருத்திராசூரனை அழித்தான் இந்திரன். வேள்வியில் தோன்றிய விருத்திராசூரனை அழித்ததால் இந்திரனுக்கு தோஷம் ஏற்பட்டது. அந்த தோஷம் நீங்குவதற்காக பல்வேறு தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டான். பின்னர் திருவெண்காடு, கீழை திருக்காட்டுப்பள்ளி இறைவனை வணங்கி தோஷம் நீங்கப்பெற்று, மீண்டும் தேவலோக ஆட்சியை கைப்பற்றினான்.
தினந்தோறும் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சீர்காழி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை