அருட்சோமநாதேஸ்வரர் கோவில், திரு நீடூர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை மணல்மேடு சாலையில் இருந்து வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் நீடூரில் சாலை ஓரத்திலேயே கோவில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து நீடூர் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
சுவாமி : அருட்சோமநாதேஸ்வரர், கான நிர்த்தன சங்கரர், பாடியாடிய தேவர்
அம்பாள் : வேயுறு தோளியம்மை, ஆலாலசுந்தர நாயகி, வேதநாயகி, ஆதித்ய அபயப்பிரதாம்பிகை
தல விருட்சம் : மகிழமரம்
தீர்த்தம் : ஆனந்த, செங்கழுநீரோடை, சூரிய, சந்திர, இந்திர, பத்ரகாளி, முனிவரர், ப்ருதி குண்டம், வருண தீர்த்தங்கள்
பதிகம் : திருநாவுக்கரசர், சுந்தரர்
சிறப்புக்கள் : தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும்.
கோவில் அமைப்பு : இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் மேற்புறத்தில் ரிஷபாரூடனர், முருகர், விநாயகர் ஆகியோரின் வண்ண சுதையாலான திருமேனிகளைக் காணலாம். வாயிலைக் கடந்தவுடன் தலமரம் மகிழம் உள்ளது. நந்தி, பலிபீடம் மற்றும் கொடிமரம் ஆகியவற்றையும் காணலாம். இந்த ஆலயம் இரண்டு பிரகாரங்களைக் கொண்டுள்ளது. முருகர், சிவலோகநாதர், கைலாயநாதர், காசி விசுவநாதர் மற்றும் மகாலக்ஷ்மி ஆகியோரின் சந்நிதிகள் உள் பிரகாரத்தில் இருக்கின்றன. பிராகாரத்தில் இடதுபுறம் மூன்று கணபதிகள் சிந்தாமணி கணபதி, செல்வ கணபதி, சிவாநந்த கணபதி என்ற பெயர்களுடன் இத்தலத்தில் காட்சி தருவது சிறப்பாகும். கருவறையின் கோஷ்டங்களில் தட்சினாமூர்த்தி, பிரம்மா, அண்ணாமலையார், சண்டிகேஸ்வரர் மற்றும் துர்க்கை உருவங்கள் உள்ளன.
ஒரு நிலை கோபுரத்துடனுள்ள 2-வது வாயில் கடந்து உள்ளே சென்றால் நேரே இத்தல இறைவன் அருட்சோமநாதேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். ஆவணி மாதத்தில் சுவாமி மீது சூரிய ஒளி விழுகிறது. இறைவியின் சந்நிதி வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் சந்நிதி முன்மண்டபத்தில் சனீஸ்வரர் கிழக்கு பார்த்தபடி தனியே இருக்கிறார். ஒரே இடத்தில் இருந்து அம்பாளையும், சனியையும் தரிசிக்கும் வகையில் சந்நிதிகள் அமைந்துள்ளன. இதனால் சனிதோஷம் விலகும் என்கிறார்கள். இங்கு நவக்கிரக சந்நிதி கிடையாது.
தல வரலாறு : இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் தேவேந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மணலால் உருவாக்கப்பட்ட இந்த சிவலிங்கத்தை இந்திரன் பூஜித்ததாக ஐதீகம். சூரியன் மற்றும் சந்திரன் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டுள்ளனர். அசுரன் ஒருவன் முன்வினைப் பயனால் அடுத்த பிறவியில் நண்டாகப் பிறந்தான். அவன் தன் பாவங்களுக்கு விமோசனம் பெற நாரதரிடம் ஆலோசனை கேட்க, அவர் இத்தலத்தில் சிவனை வழிபட்டால் விமோசனம் கிடைக்கப்பெறும் என்றார். அதன்படி நண்டு உருவில் இருந்த அசுரன் இங்கு வந்து காவிரி ஆற்றில் நீராடி சிவனை வழிபட்டான். சிவன் அவனுக்கு காட்சி கொடுத்தார். அவன் தனக்கும் ஐக்கியமாவதற்கு வசதியாக லிங்கத்தில் துளையையும் ஏற்படுத்திக் கொடுத்தார். நண்டு வடிவில் இருந்த அசுரன், லிங்கத்திற்குள்ளே சென்று ஐக்கியமானான். இப்போதும் ஒரு நண்டு உள்ளே செல்லும் அளவில் லிங்கத்தில் துளை இருப்பதைக் காணலாம். ஆடி மாத பெளர்ணமி தினத்தில் இங்கு சிவனுக்கு கற்கடக பூஜை நடக்கிறது. அதைக் காண மக்கள் அதிக அளவில் வருகிறார்கள்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை