கல்யாணசுந்தரேஸ்வரர் கோவில், திருவேள்விக்குடி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலத்தில் இருந்து வடகிழக்கே 3 கி.மீ தொலைவில் திருவேள்விக்குடி உள்ளது. குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகள் உண்டு.
சுவாமி : கல்யாணசுந்தரேஸ்வரர், கௌதுகேஸ்வரர்.
அம்பாள் : பரிமள சுகந்த நாயகி, கெளதுகேஸ்வரி.
தீர்த்தம் : மங்கள தீர்த்தம் (கெளதுகா பந்தன தீர்த்தம்)
பதிகம் : திருஞானசம்பந்தர், சுந்தரர்
சிறப்புக்கள் : தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் 23வது திருத்தலம் ஆகும். இத்தல இறைவன் கிழக்கு நோக்கிய சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவபெருமானது திருமண வேள்வி நடந்தத் திருத்தலம் என்பதால் வேள்விக்குடி என்று பெயர் பெற்றது. ஈஸ்வரிக்குக் கங்கனதாரனம் செய்தபடியால், கெளதுகா பந்தனச் ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.
இத்தலம் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமை வாய்ந்துள்ளது. திருஞானசம்பந்தர், சுந்தரரால் பாடல் பெற்ற தலம். இத்தலத்து இறைவன், பகலில் திருவேள்விக் குடியிலும், இரவில் திருத்துருத்தி குத்தாலத்திலும் எழுந்தருளி இருப்பதாகப் பதிகங்கள் கூறுகின்றன.
கோவில் அமைப்பு: இங்குள்ள கோவில் 3 நிலையுடன் கூடிய கிழக்கு நோக்கிய இராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் உடையதாய் திகழ்கிறது. கருவறைக்கு முன்னே அர்த்த மண்டம், மகாமண்டபம் உள்ளன. நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் வரசித்திவிநாயகர் உள்ளார். இறைவன் கருவறை கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்தநாரீஸ்வரர், சந்திரசேகரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சிலாஉருவில் அம்பாள் வலதுபுறமும், இறைவன் இடதுபுறமும் உள்ளதைக் காணலாம். அர்த்த மண்டபத்தில் நடராஜர் மற்றும் விநாயகர் திருஉருவங்கள் இருக்கின்றன. இத்தலத்து இறைவன் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும் இறைவி பரிமள சுகந்தநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோயிலில் ஈசானமூர்த்தி, பரிமளசுகந்தநாயகி, ஆடல்வல்லான், கல்யாணசுந்தரர் கல்யாணசுந்தரி, வலஞ்சுழி விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், ராமர் சீதை லட்சுமணர் அனுமார், கஜலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. திருச்சுற்றில் ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரர், விநாயகர், நாவுக்கரசர் ஆகியோர் உள்ளனர். அகத்தியர் வாதாபியைக் கொன்றதால் அவருக்கு ஏற்பட்ட சாபம் இத்தலத்தில் தான் நீங்கியது. அகத்தியருக்கும் இத்தலத்தில் அர்த்த மண்டபத்தில் தனி சந்நிதி இருக்கிறது. அம்பாள் பரிமளசுகந்த நாயகியின் சந்நிதி முதல் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. செம்பியன் மாதேவி, இராஜராஜ சோழன், பராக்கிரம சோழன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தமான கெளதுகா பந்தன தீர்த்தம் ஆலய முகப்பு வாயிலுக்கு எதிரே உள்ளது. நீண்ட நாட்கள் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து கெளதுகா பந்தன தீர்த்தத்தில் நீராடி மணவாளேஸ்வரர் மற்றும் பரிமளசுகந்த நாயகியை வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
திருமணத் தலம் என்பதால், கொடி மரமும், நவக்கிரகமும் கிடையாது, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள், ஈசான்யத்தில் உள்ள ஈஸ்வரனுக்கு 48 அகல் தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்து வழிபட்டால், நலம் கிடைக்கும். பவுர்ணமி தினத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை திருமண தடை நீங்க யாகம் நடக்கிறது. இந்த யாகத்தில் திருமணத் தடை உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து வழிபடலாம். திருமணம் முடிந்தவுடன் தம்பதிகள் இத்தலத்திற்கு வந்து சுவாமி அம்பாளுக்கு அர்ச்சனை செய்து நன்றி சொல்லிவிட்டால் போதும்.
தல வரலாறு : ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார். உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். பசு வடிவில் இருந்த அன்னை பார்வதி, சாபவிமோசனம் பெற்று, பரத முனிவரின் மகளாகப் பிறந்து, சிவபெருமானை மணம்புரிந்தார். பார்வதி தேவி, பரமேஸ்வரனை நினைத்து 16 திங்கட்கிழமை விரதம் இருந்து, மணலில் லிங்கம் வரித்து பூஜை செய்து வந்தார். 17ம் நாள் திங்கட்கிழமை ஈசன் தோன்றி, அம்மனுக்கு கங்கணம் கட்டி, வேள்விகள் செய்து, பிரம்மா நடத்தி வைக்க மணம் புரிந்து கொண்டார்.
அரச குமாரன் ஒருவனுக்கு நிச்சயித்திருந்த பெண்ணின் தாய் தந்தையர் திருமணத்திற்கு முன் இறந்து விட்டனர். இதன் பின் பெண் வீட்டார் இத்திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்பதால் அரசகுமாரன் இத்தலம் வந்து இறைவனை வணங்கி, தடைப்பட்டு நின்ற திருமணத்தை நடத்தி வைக்க வேண்டினான். அரசகுமாரனின் வேண்டுதலை ஏற்ற சிவன் ஒரு பூதத்தை அனுப்பி அந்த பெண்ணை அழைத்து வந்து, திருமணம் செய்து வைத்தார்.
சிவனின் தோழரான சுந்தரர் இங்கு வந்து அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு, தனது நோய் நீங்கி குணமடைந்தார். சிவ பெருமான் தன்னில் ஒரு பகுதி பாகத்தை உமையவளுக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரர் வழிபாட்டு முறையை முதன் முதலாக தொடங்கியதே திருவேள்விகுடியில் தான் என்றும் கருதப்படுகிறது.
இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ள திருமணஞ்சேரி என்ற தலத்தில் தான் சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்றது.
காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை