உத்வாக நாதர் கோவில், திருமணஞ்சேரி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை கும்பகோணம் சாலை வழியில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் திருமணஞ்சேரி இருக்கிறது. மயிலாடுதுறையில் இருந்து நகரப் பேருந்து வசதியும், குத்தாலத்தில் இருந்து ஆட்டோ, வாடகைக் கார் வசதிகளும் உண்டு.
சுவாமி : அருள் வள்ளல் நாதர், உத்வாக நாதர்
அம்பாள் : கோகிலாம்பாள், யாழின்மென்மொழியம்மை
தல விருட்சம் : கருஊமத்தை
தீர்த்தம் : சப்தசாகரம்
பதிகம் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள் : தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 25வது தலம் ஆகும். ஸ்ரீகல்யாணசுந்தரமூர்த்தி, அம்பிகையுடன் திருமணக் கோலத்தில் அழகும் அற்புதமும் நிறைந்து காட்சிதருகிறார். அதனால் இவருக்கு மாப்பிள்ளை ஸ்வாமி என்றே திருநாமம் அமைந்தது. திருமணம் கைகூடாது தடைபட்டு நிற்பவர்கள் திருமனஞ்சேரியில் உள்ள கல்யாணசுந்தரப் பெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவில் திருமணம் ஆகும் என்பது இத்தலத்தின் மகிமைகளில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் இராகு தோஷ நிவர்த்திக்கும் இத்தலம் மிக சிறப்புடையதாகும். இராகு தோஷத்தினால் பீடிக்கப்பட்டு, புத்திர பாக்கியம் கிட்டாத தம்பதியர் இத்தலத்திலுள்ள சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோவில் கொண்டுள்ள இராகு பகவானுக்கு பால் அபிஷேகமும், பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டு வந்தால் தனது இராகு தோஷம் நீங்கப் பெற்று புத்திரப் பேறு பெறுவர் என்பது அனுபவ உண்மையாகும்.
தல வரலாறு: பார்வதி தேவி பூமியில் சிவபெருமானை திருமணம் செய்ய விரும்பி தவமிருந்து, திருமணஞ்சேரி என்னும் இத்தலத்தில் சிவபெருமானை திருமணம் செய்ததாக கோவில் புராணம் தெரிவிக்கிறது. உமாதேவி ஒருமுறை கைலையில் சிவபெருமானை வணங்கி மற்றொருமுறை சிவபெருமானை பூவுலகில் மணந்து கொள்ள வேண்டும் என்ற தனது விருப்பத்தைத் தெரிவித்தாள். சிவபிரானும் கருணை கொண்டு அவ்வாறே வாக்களித்தார். அதன்பின் ஒருமுறை உமாதேவி சிவனிடம் சற்று அலட்சியமாக நடக்க, அதனால் சிவபெருமான் சினங்கொண்டு உமாதேவியாரை பூவுலகில் பசுவாகி வாழ கட்டளையிட்டார். பசு உருக்கொண்ட உமாதேவி தன் செயல் நினைத்து வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்க, தக்க சமயம் வரும்போது தோன்றி மணம் செய்து கொள்வேன் என்று வரமளித்தார்.
உமாதேவியுடன் திருமகள், கலைமகள், இந்திரானி ஆகியோரும் பசு உருக்கொண்டு பூவுலகில் உலவி வந்தனர். திருமால் பசு மேய்ப்பவராக உருவெடுத்து அப்பசுக்களை பராமரித்து வந்தார். அம்பிகை உமாதேவி பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்ற சிவபெருமான் அம்பிகைக்கு சுய உருவம் கொடுத்தருளினார். சுய உருவம் பெற்ற உமாதேவி பரத முனிவரிடம் வளர்ந்து வரும் வேளையில் அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்துகொள்ள சிவபெருமான் தீர்மானித்தார். பரத மகரிஷி நடத்திய யாக வேள்விக் குண்டத்தில் சிவபெருமான் தோன்றி பசு உருவில் இருந்த உமாதேவிக்கு சுய உருவம் கொடுத்து இத்தலத்தில் திருமணம் புரிந்து கொண்டார். சிவபெருமான் உமாதேவி திருமணம் நடைபெற்ற இத்தலம் திருமணஞ்சேரி என்று பெயர் பெற்றது.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கியிருக்கும் இவ்வாலயம் இராஜ கோபுரம் 5 நிலைகளை உடையது. இராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் கொடிமர கணபதி காட்சி தருகிறார். அடுத்து முறையே கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. பிறகு 3 நிலை 2வது கோபுரத்தைத் தாண்டி உள்ளே நுழைந்தவுடன் கருவறையில் கிழக்கு நோக்கி இத்தலத்து இறைவன் உத்வாகநாதர் அழகுற அருட்காட்சி தருகிறார். கருவறையின் முன் மண்டபத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கியவாறு இத்தலத்து இறைவி கோகிலாம்பாள் அமர்ந்த நிலையில் திருமணப் பெண் போன்றே அருட்காட்சி தருகிறாள்.
கருவறையின் இடதுபுறம் நிருத்த மண்டபத்தில் இவ்வாலயத்தின் உற்சவமூர்த்தியான கல்யாணசுந்தரர் அம்பிகை கோகிலாம்பாளுடன் கல்யாண கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். மற்றும் நடராஜர், சுப்பிரமணியர், தட்சினாமூர்த்தி, பிரம்மா, இராகு பகவான், துர்க்கை, மகாவிஷ்னு ஆகியோர் சந்நிதிகள் இவ்வாலயத்தில் இருக்கின்றன. மன்மதன் சிவபெருமான் மீது தன் மலர்க்கணைகளைத் தொடுத்து அதனால் அவரது நெற்றிக்கண் தீயினால் எரிந்து சாம்பலானான். அதனால் மனம் நொந்து திருந்தி மன்மதன் சிவப்பெருமானை துதிக்க சிவபெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறுபெற வரமருளியது இத்தலத்தில் தான் நிகழ்ந்தது. இறைவனின் திருமணத்திற்கு மாலைகளாக மாறி வந்த சப்த சாகரங்களும் இங்கேயே தங்கித் தீர்த்தமானதாகச் சொல்லப்படுகிறது. சப்தசாகரம் என்று அழைக்கப்படும் இந்த தீர்த்தம் கோயிலின் பக்கத்தில் உள்ளது.
சகோதரியின் திருமணத்துக்கு வந்திருந்த தேவர்பெருமக்களையும் முனிவர்களையும் வரவேற்று உபசரிப்பதற்காக ஓரிடத்தில் நின்றுகொண்டிருந்தார் திருமால். அந்த இடத்தை எதிர்கொள்பாடி என்றும் மேலத் திருமணஞ்சேரி என்றும் அழைக்கின்றனர். அந்த இடத்திலேயே கோயில்கொள்வது எனத் திருவுளம் கொண்ட பெருமாள், இன்றைக்கும் ஸ்ரீலட்சுமியுடன் ஸ்ரீலட்சுமி நாராயணராக சேவை சாதிக்கிறார்.
இங்கே, மேற்கு நோக்கியபடி பெருமாள் காட்சி தருவது சிறப்பு என்கின்றனர். அதாவது, திருமணக் கோலத்தில் நின்றருளும் சிவ பார்வதியைப் பார்த்தபடியே அந்தத் திசை நோக்கி நிற்கிறாராம் பெருமாள். உத்ஸவரின் திருநாமம் ஸ்ரீவரதராஜர். மடியில் ஸ்ரீலட்சுமியை அமர்த்தியபடி, கருணையும் கனிவும் பொங்கக் காட்சி தரும் ஸ்ரீலட்சுமி நாராயணரைத் தரிசித்தால் சகல பாவங்களும் பறந்தோடிவிடும்.
தன் திருக்கரத்தில் அமிர்த கலசத்தை ஏந்தி, வடக்குப் பார்த்தபடி ஸ்ரீதன்வந்திரி பகவான் தனிச்சந்நிதியில் இருந்து அருள்பாலிக்கிறார். அஸ்த நட்சத்திர நாளில் அல்லது புதன்கிழமைகளில் இங்கு வந்து ஸ்ரீதன்வந்திரிக்கு மூலிகைத் தைலம் சார்த்தி, நெய் தீபமேற்றி, 11 முறை வலம் வந்து பிரார்த்தித்தால் தீராத நோயும் தீரும். ஸ்ரீதும்பிக்கையாழ்வார், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீகிருஷ்ணர், ஐந்து தலை நாகர், ஸ்ரீராமானுஜர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. வெள்ளிக்கிழமை ராகுகால வேளையில், ஐந்துதலை நாகருக்கு தீபமேற்றி, துளசிமாலை சார்த்தி வேண்டிக்கொண்டால், ராகு தோஷம் விலகும். சத்ரு பயம் நீங்கும்.
திருமணஞ்சேரி கோயிலில் திருமணத்திற்கான பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் ஒரு சுப முகூர்த்த தினத்தில் திருமணஞ்சேரி கோயிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்றதும் முதலில் அக்கோயிலின் சப்தகிரி தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு, புத்தாடை அணிந்து கொண்டு, 2 மலர் மாலைகள், 2 தேங்காய், கற்பூரம், குங்குமம், மஞ்சள், நெய், சந்தனம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வாங்கி, அர்ச்சகரிடம் கொடுத்து, கோயில் மூலவராக இருக்கும் கல்யாண சுந்தரருக்கு மாலை சாற்றி வேண்டும். பிறகு சுந்தரர் மற்றும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, பூஜைகள் செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கு உள்ள நெய் தீபம் வைக்கப்படும் மேடையில் எண்ணி ஐந்து நெய் தீபங்களை ஏற்ற வேண்டும்.
பிறகு அங்கு திருமண மேடையில் கோயில் அர்ச்சகரால் வழங்கப்படும் எலுமிச்சம் பழத்தை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். தெய்வங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, பிரசாதமாக வழங்கப்படும் மலர் மாலையை பத்திரப்படுத்தி உங்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். வீட்டிற்கு சென்றதும் தலைக்கு ஊற்றி குளித்து விட்டு, அந்த மாலையை முறை உங்கள் கழுத்தில் போட்டு, இறைவனை மனதார வணங்கி, அம்மாலையை உங்கள் வீட்டு பூஜையறையிலேயே பத்திரமாக வைக்கவேண்டும்.
பிறகு கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட விபூதி மற்றும் குங்குமத்தை தினமும் உங்களின் நெற்றியிலிட்டு இறைவனை வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்கின்ற 90 நாட்களுக்குள்ளாக திருமணத்திற்கான வரன் அமையும். மேலும் இந்த பத்திரப்படுத்தபட்ட மாலையானது திருமணம் ஆன உடனே திருமண தம்பதிகளான கணவன்,மனைவி இருவரும் சேர்ந்து திருமணஞ்சேரி கோயிலுக்கு வந்து கோவிலில் அந்த மாலையை குறிப்பிட்ட இடத்தில் இட்ட பிறகு, அங்கிருக்கும் இறைவனுக்கு அர்ச்சனை செய்து வேண்டுதலை முடித்து, தங்களின் விருப்பம் போன்ற காணிக்கையை கோயிலுக்கு செலுத்துவது நன்மைகளை உண்டாக்கும். திருமணம் பிராத்தனை நிறைவு பெற்றவுடன் தங்கள் பழைய மாலையை இங்கு உள்ள தொட்டியில் போட வேண்டும். பரிகார பூஜைகள் 30 நிமிடம் இடைவெளியில் தொடர்ந்து நடைபெறும்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை, கும்பகோணம்
பஸ் வசதி : இல்லை
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை