நீலகண்டேசுவரர் கோவில், திருமண்ணிப்படிக்கரை (இலுப்பைபட்டு)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவில் இருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் பாப்பாக்குடி என்ற ஊரிலிருந்து 2 கி.மீ. தொலைவில் மண்ணியாற்றின் தென்கரையில் உள்ளது. தற்போது இலுப்பைப்பட்டு என்று அழைக்கப்படுகிறது.
சுவாமி : நீலகண்டேசுவரர், படிக்கரைநாதர்
அம்பாள் : அமிர்தகரவல்லி, மங்களநாயகி
தல விருட்சம் : இலுப்பை
தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம், அமிர்த தீர்த்தம்
பதிகம் : சுந்தரர்
சிறப்புக்கள் : இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 30வது தலமாகும். மண்ணியாற்றின் கரையில் அமைந்ததனால் திருமண்ணிப்படிக்கரை என்றும், இலுப்பை மரம் தலவிருட்சமாக உள்ளதால் இலுப்பைப்பட்டு என்றும் பெயர் பெற்றது. பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட தலம். துரியோதனன் பஞ்சபாண்டவர்களைக் கொல்ல இங்குள்ள தீர்த்தத்தில் விஷத்தைச் சேர்த்தான். அம்பிகை அவ்விஷத்தைத் தன் கையிலிருந்த அமுதத்தால் முறித்து பிறகு அந்நஞ்சை இறைவன் சிவபெருமான் உண்டார். அதனாலேயே இத்தலத்து இறைவன் நீலகண்டர் எனப் பெயர் பெற்றார். அமிர்தத்தைத் தன் கையில் வைத்திருந்த காரணத்தால் இறைவி அமிர்தகரவல்லி எனப் பெயர் பெற்றார்.
தல வரலாறு : பஞ்சபாண்டவர்கள் வனவாசம் செய்தபோது, இங்கு சிலகாலம் தங்கியிருந்தனர். சிவபூஜை செய்ய விரும்பிய அவர்கள், இங்கு தேடிப்பார்த்தும் இலிங்கம் கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் ஐந்து பேரும் ஒரு இலுப்பை மரத்தின் அடியில், இலுப்பைக்காயில் விளக்கேற்றி, சிவனை மனதில் எண்ணி வணங்கினர். சிவன் ஐந்து பேருக்கும் தனித்தனி மூர்த்தியாகக் காட்சி தந்தார். அவர்கள் சிவனிடம், தங்களுக்கு அருளியதைப் போலவே இங்கிருந்து அருள் செய்ய வேண்டுமென வேண்டிக்கொண்டனர். சிவனும் ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளினார். தற்போதும் இக்கோயிலில் ஐந்து இலிங்கங்கள் தனித்தனி சன்னதியில் இருக்கிறது.
தர்மர் வழிபட்ட சிவன் நீலகண்டேஸ்வரர், அர்ஜுனன் வழிபட்ட சிவன் படிகரைநாதர், பீமனால் வழிபட்டவர் மகதீஸ்வரர், நகுலன் வழிபட்டவர் பரமேஸ்வரர், சகாதேவன் வழிபட்டவர் முத்துகிரீஸ்வரர் என்ற பெயர்களில் அருளுகின்றனர். இவர்களில் நீலகண்டேஸ்வரர், படிகரைநாதருக்கு அம்பிகை சன்னதி உண்டு. படிகரைநாதர் சன்னதியிலேயே மங்களாம்பிகை தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். பீமன் வழிபட்ட சிவன், சோடஷலிங்கமாக, 16 பட்டைகளுடன் இருக்கிறார். பதினாறு செல்வமும் பெற இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஐந்து மூர்த்திகளும் மூலவராக இருந்தாலும், நீலகண்டேஸ்வரர், படிகரைநாதர் இருவரும் பிரதான மூர்த்திகளாக வணங்கப்படுகின்றனர். இவர்களுக்கு எதிரில் மட்டுமே நந்தி இருக்கிறது. சகாதேவன் வழிபட்ட முத்துகிரீஸ்வரர், தெற்கு நோக்கி இருக்கிறார். சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கின்றனர்.
கோவில் அமைப்பு : 3 நிலை இராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் இடதுபுறம் தலமரம் இலுப்பை உள்ளது. பிராகாரத்தில் பீமன், நகுலன், பூசித்த லிங்கங்களும், அடுத்து திரௌபதி வழிபட்ட வலம்புரி விநாயகரும், வலதுபுறம் அமிர்தகரவல்லி அம்பாள் சந்நிதியும் உள்ளன. இடதுபுறம் சுப்பிரமணியரும், மகாலட்சுமி சந்நிதிகளும், அடுத்துச் சகாதேவன் லிங்கமும் உள்ளது. வலம் முடித்துப் படிகளேறி மேலே சென்றால் நேரே சுவாமி நீலகண்டேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வடக்குப் பிரகாரத்தில் முருகர் சந்நிதி உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். உற்சவர் வில்லேந்திய வடிவில் எழுந்தருளியுள்ளார்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை, சீர்காழி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை