பதஞ்சலி நாதர் கோவில், திருக்கானாட்டுமுள்ளூர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டத்தில் ஓமாம்புலியூர் தலத்துக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் கொள்ளிட நதியின் வடகரையில் இத்தலம் இருக்கிறது. காட்டுமன்னார்குடியில் இருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள இத்தலத்துக்கு கமலம் என்ற மினி பேருந்து கானாட்டம்புலியூர் வழியாக முட்டம் செல்கிறது. கானாட்டம்புலியூர் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மீ. நடந்துசென்று இக்கோவிலை அடையலாம்.
சுவாமி : பதஞ்சலி ஈஸ்வரர்
அம்பாள் : கானார்குழலி அம்மை, அம்புஜாட்சி, கோல்வளைக்கையாள்
தல மரம் : வெள்ளெருக்கு (தற்போதில்லை)
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
பதிகம் : சுந்தரர்
சிறப்புகள் : காவிரி வடகரைத் தலங்கள் வரிசையில் 32-வது தலமாக இருப்பது திருக்கானாட்டுமுள்ளூர். இத்தலம் தற்போது கானாட்டம்புலியூர் என்று வழங்கப்படுகிறது. சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் தங்கள் ஜாதகத்தில் பாதிப்பு ஏதேனும் இருப்பின், இத்தலம் வந்து இறைவனையும் இறைவியையும் வழிபட்டு பலன் பெறலாம். ராகு தோஷ பரிகாரத் தலமாகவும், கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்க வேண்டிய சிறப்புமிக்க திருத்தலமாகவும் இது விளங்குகிறது.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுரத்துக்கு வெளியே எதிரில் சூரிய தீர்த்தம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து முன்னுள்ள மண்டபத்தில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. வலதுபுறம் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாளுக்கு அம்புஜாட்சி என்ற பெயரும் உண்டு. அம்பாள் சந்நிதிக்கு வலதுபுறம் சனீஸ்வரர் தனி சன்னதியில் இருக்கிறார். சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு பிரார்த்தனைகள் செய்துகொள்கின்றனர். முன்மண்டபத்தில் இரண்டு நாகங்களுக்கு நடுவே கிருஷ்ணனும், அருகே நாகங்களுக்கு நடுவே லிங்கமும் இருக்கிறது.
முன்மண்டபம் தாண்டி நேரே உள்ளே சென்றால் மூலவர் பதஞ்சலி ஈஸ்வரர் சந்நிதியை அடையலாம். சந்நிதி நுழைவாயில் இருபுறமும் விநாயகரும், பாலதண்டாயுதபாணியும் காட்சி அளிக்கின்றனர். மூலவர் சிறிய லிங்க உருவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தமிழ் வருடப் பிறப்பான சித்திரை மாதத்தில் 3 நாட்கள் சூரியன் தன் ஒளியை மூலவர் மீது பரப்பி பூஜிக்கிறார். கருவறை கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைச் சுற்றில் மகாவிஷ்ணுவுக்கு நேர் எதிரே வள்ளி தெய்வானை சமேத முருகர் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். அருகில் கஜலட்சுமிக்கும் தனி சந்நிதி உள்ளது.
கருவறைச் சுற்றில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி, நிருதிவிநாயகர் ஆகியோரும் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்திக்கு மேல் கல்லால மரம் இல்லை. நடராஜர் சந்நிதிக்கு எதிரே நால்வருடன் விநாயகரும், பதஞ்சலி முனிவரும் காணப்படுகின்றனர். நாக தோஷம், ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு சுவாமி மற்றும் பதஞ்சலியிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
தல வரலாறு : பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சிவபெருமானின் நடனத்தை தரிசனம் செய்யும் விருப்பத்தை வெளியிட்டார் ஆதிசேஷன். மகாவிஷ்ணுவின் ஆணைப்படி, பதஞ்சலி முனிவராக அவதாரம் எடுத்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக்காட்சியைக் காட்டி அருளினார். பதஞ்சலி முனிவர் ஒருமுறை இத்தலத்துக்கு வந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காண வேண்டும் என்று விரும்பினார். அவருக்கு சிவன் இத்தலத்திலும் தன் நடனத்தைக் காட்டி அருள் செய்தார். பதஞ்சலி ஈஸ்வரர் என்ற பெயரையும் இத்தல இறைவன் பெற்றார்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரையும், மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : புதுச்சேரி, சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : காட்டுமன்னார்குடி, சிதம்பரம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை