பிராண நாதேஸ்வரர் கோவில், திருமங்கலக்குடி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மயிலாடுதுறை சாலை வழியிலுள்ள ஆடுதுறை அடைந்து அங்கிருந்து திருப்பனந்தாள் செல்லும் சாலையில் சுமார் 2 கி.மீ. தொலைவில் திருமங்கலக்குடி சிவஸ்தலம் இருக்கிறது.
சுவாமி : பிராண நாதேஸ்வரர்
அம்பாள் : மங்களநாயகி, மங்களாம்பிகை
தல மரம் : கோங்கு, இலவு
தீர்த்தம் : மங்களதீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள் : தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 38வது தலம். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் சிவலிங்கத்தில், ஆவுடையாரை விட சற்று உயரம் குறைந்ததாகத்தான் பாணம் இருக்கும். ஆனால் இக்கோயிலில் பாணம், ஆவுடையாரைவிட உயர்ந்ததாக இருக்கிறது. அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். நவகிரக தலங்களில் சூரிய தலமான சூரியனார் கோயிலுக்கு செல்லும் முன்பு இத்தலத்துக்கு வந்து வழிபட வேண்டும் என்பது முக்கியமாதலால் நவகிரக தோஷமுள்ள பக்தர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்ட பின்னரே சூரியனார் கோயில் செல்கின்றனர். தவிர நவகிரக தோஷம், பெண்கள் திருமண பாக்கியம்,குழந்தை பாக்கியம், சுமங்கலி பாக்கியம், சத்ருபயம், நீக்கம்பெறல், திருட்டுபயம் விடுபடுதல் ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் இத்தலத்தில் வழிபாடு செய்கிறார்கள்.
தல வரலாறு : பதினோறாம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரியாக இருந்த அலைவாணர் என்ற மந்திரி மன்னனிடம் அனுமதி பெறாமல் வரிப்பணத்தில் இக்கோயிலை கட்டினார். இதை அறிந்த மன்னன் கோபம் கொண்டு மந்திரியை சிரச் சேதம் செய்ய உத்தரவிட்டார். கொலையுண்ட மந்திரி தன்னை திருமங்கலக்குடியில் தகனம் செய்யுமாறு ஏற்கனவே கூறியிருந்ததால் அவரது உடல் திருமங்கலக்குடிக்கு எடுத்து வரப்பட்டது. ஊரின் எல்லைக்கு வரும்போது மந்திரியின் மனைவி மங்களாம்பிகை கோயிலில் சென்று தனது கணவரின் உயிரை திரும்பத்தருமாறு வேண்டினார். அவளது பிரார்த்தனை பலிக்கும் என்று அசரீரி கேட்டது. அதுபடி மந்திரி உயிர் திரும்பபெற்றார். மகிழ்ச்சியில் கோயிலுக்குள் சென்று பிராணநாதேசுவரரை கட்டிப்பிடித்து ஜீவதாயகன் என்று கூறி பூஜித்தார். அன்று முதல் இங்குள்ள பிம்பமானது பிராணநாதேசுவரன் என்ற பெயரால் அழைக்கப்பெற்றார். கணவர் உயிரை தந்த அம்பாள் மங்களாம்பிகை என்றழைக்கப்பட்டாள். இங்கு வந்து வழிபடும் பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் உண்டாக வேண்டும் என்று மந்திரியும் மனைவியும் வேண்டிக்கொள்ள அதுபடியே சுவாமியும் அம்பாளும் அருளியதாக வரலாறு கூறுகிறது.
காலவ முனிவர் எனபவர் தன் ஜாதகத்தை ஆராய்ந்து பார்த்த போது தனக்கு தொழுநோய் வர இருப்பதை உணர்ந்தார். நவக்கிரகங்களை வழிபட்டால் அந்த நோயிலிருந்து விடுபடலாம் என்றுணர்ந்து நவகிரகங்களை நோக்கி கடும் தவம் மேற்கொண்டார். முனிவரின் தவத்திற்கு இறங்கி நவகிரகங்கள் அவருக்கு காட்சி தந்து முனிவரை தொழுநோய் தாக்காதிருக்க வரமும் அளித்தனர். நவகிரங்களின் இந்த செயலை அறிந்த பிரம்மா கோபம் கொண்டார். நவகிரகங்களுக்கு வரம் கொடுக்கும் உரிமை கிடையாது என்றும், முற்பிறவியில் அனைத்து உயிர்களும் செய்த பாவ புண்ணியத்தின் பலனை மட்டுமே அவர்கள் தர வேண்டும் என பணித்திருந்தும் காலவ முனிவருக்கு தொழுநோய் தாக்காத வரம் அளித்ததால் நவகிரங்களுக்கு தொழுநோய் எற்பட்டு வருந்தும்படி பிரம்மா சாபமிட்டார். பின்பு நவகிரகங்கள் பிரம்மா கூறியபடி திருமங்கலக்குடி அருகே உள்ள வெள்ளெருக்கு காட்டில் கார்த்திகை மாத முதல் ஞாயிறு முதல் 12 ஞாயிற்றுக்கிழமைகள் அங்குள்ள ஒனபது தீர்த்தத்தில் நீராடி, பின் திங்களன்று காவிரியில் நீராடி பிராணநாதேஸ்வரரையும், மங்களநாயகியையும் வழிபட்டு, பிறகு வெள்ளெருக்கு இலையில் தயிர் சாதம் புசித்து தங்களின் சாபம் நீங்கி விமோசனம் பெற்றனர்.
தலம் பஞ்ச மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. 1. இந்த ஊரின் பெயர் மங்கலக்குடி, 2. அம்பாள் பெயர் மங்களாம்பிகை, 3. இக்கோயில் விமானம் மங்கள விமானம் 4. இத்தலத்தின் தீர்த்தத்தின் பெயர் மங்கள தீர்த்தம், 5. இத்தலத்து விநாயகர் பெயர் மங்கள விநாயகர் என்பதால் இத்தலம் மங்களமே உருவாக இருப்பதால் மங்கள ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. நவக்கிரகங்கள் இங்கு சிவனுக்கு எருக்க இலையில் தயிர் சாத நைவேத்யம் படைத்து வழிபட்டதாக ஐதீகம். எனவே, இக்கோயிலில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உச்சிகால பூஜையின்போது, உப்பில்லாத தயிர் சாதத்தை சுவாமிக்கு நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.
நடராஜர் சன்னதியில் மரகதலிங்கம் ஒன்று இருக்கிறது. தினமும் உச்சிக்காலத்தில் மட்டும் இதற்கு பூஜைகள் செய்கின்றனர். அப்போது வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு நைவேத்யம் படைத்து, வலம்புரி சங்கில் பால், பன்னீர், தேன், சந்தனம் ஆகிய நான்கு திரவிய அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேக தீர்த்தத்தை பருகினால் நோய் நீங்கும்.
அம்பிகை மங்களாம்பிகை தனிச்சன்னதியில் தெற்கு நோக்கி அருளுகிறாள். இவளே இங்கு வரப்பிரசாதியாவாள். இவளது பெயரிலேயே கோயிலும் அழைக்கப்படுகிறது. அம்பிகையின் வலது கையில் எப்போதும் தாலிக்கயிறு அணிவிக்கப்பட்டிருக்கிறது. அம்பிகையை வழிபடும் பெண்களுக்கு, இதையே பிரசாதமாக கொடுக்கின்றனர். இதனால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல வரன் அமையும்.
நவராத்திரியின்போது கோயில்களில் அம்பாள் உற்சவர் சிலைக்கு ஒவ்வொருநாளும் ஒவ்வொரு அலங்காரங்கள் செய்வர். ஆனால், இங்கு மூலஸ்தானத்தில் இருக்கும் அம்பிகைக்கே அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது இவளது சிலைக்கு வஸ்திரம், ஆபரணங்கள் என எதுவும் சாத்தப்படாமல் சந்தனக்காப்பு மட்டும் செய்யப்படுகிறது. அந்த சந்தனத்திலேயே பட்டுத் துணிகளுக்கு பயன்படுத்தப்படும் வண்ண சாயங்களை சேர்த்து வஸ்திரம் மற்றும் ஆபரணங்கள் அணிந்ததைப்போல அலங்கரிக்கின்றனர். சந்தனத்திலேயே, இவ்வாறு அம்பிகை சர்வ அலங்காரத்துடன் காட்சி தருவதை காண கண் கோடி வேண்டும். ஒவ்வொரு வருடமும் தை மாதம் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமையன்று முழுதும் அம்பிகையை சந்தனக்காப்பு அலங்காரத்தில் தரிசிக்கலாம். விசேஷ நாட்கள் தவிர மற்ற நாட்களில் பக்தர்கள் இந்த அலங்காரம் செய்யலாம்.
கோவில் அமைப்பு : கிழக்கு திசை நோக்கியுள்ள ஐந்து நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடனும், இரண்டு பிரகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தின் தல விருட்சம் வடமொழியில் கோங்கிலவம் எனப்படும் வெள்ளெருக்கு மரம். முன்மண்டபத்தில் அம்பாள் மங்களநாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் கோவில் கொண்டிருக்கும் சிவபெருமான் நீண்டுயர்ந்த பாண வடிவில் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சந்திரசேகரர், மயில் வாகனர், நால்வர், பிரதோஷ நாயகர் உற்சவ மூர்த்திகள் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூடர், பிரம்மா, துர்க்கைக்கு சந்நிதிகள் உள்ளன. உள் சுற்றில் விநாயகர், ஆறுமுகர், கஜலட்சுமி, பைரவர் சந்நிதிகளும், நடராஜ சபையும் உள்ளன. சிவன் சன்னதிக்குச் செல்லும்போது முன் மண்டபத்தில் மகாலட்சுமி, சரஸ்வதி இருவரும் துவாரபாலகிகள் போல இருபுறமும் காட்சி தருகின்றனர். இவ்விருவரும் இரு கால்களையும் மடக்கி பத்மாசனத்தில் அமர்ந்திருப்பது விசேஷமான தரிசனம். இதில் சரஸ்வதி வீணையில்லாமல் காட்சி தருகிறார். பிரகாரத்திலுள்ள நடராஜர் சன்னதியில் அடுத்தடுத்து இரண்டு நடராஜர்கள், சிவகாமி அம்பிகையுடன் இருக்கின்றனர். இதில் பிரதான நடராஜருக்கு அருகில் இருக்கும் மற்றொரு நடராஜரின் பாதத்திற்கு கீழே, பூதகணம் ஒன்று சுவாமியின் நடனத்திற்கேற்ப இசைக்கருவி வாசித்தபடி இருக்கிறது.
பிராணநாதர் கோயில் பிரகாரத்தில் சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் என இரு தீர்த்தங்களும் அருகருகில் இருக்கிறது. சிவனது இரண்டு கண்களாக இருக்கும் சூரிய, சந்திரர்களே இங்கு சிவனை குளிர்விப்பதற்காக தீர்த்தமாக இருப்பதாக சொல்வதுண்டு. சுவாமிக்கு இந்த இரு தீர்த்தத்தையும் சேர்த்தே அபிஷேகம் செய்கின்றனர். சிவன் சன்னதி கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கை இருக்கிறாள்.
இதுதவிர, சிவதுர்க்கை சோமாஸ்கந்தர் சன்னதியின் பின்புறத்தில் காட்சி தருகிறாள். இவ்விருவரின் பாதங்களுக்கு கீழேயும் மகிஷாசுரன் கிடையாது. காவேரி, சிவன் கோஷ்டத்தில் துர்க்கைக்கு அடுத்து சிலை வடிவில் இருக்கிறாள். ஆடி பதினெட்டாம் பெருக்கின்போது இவளுக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. காளி, பிரம்மா, விஷ்ணு, அகத்தியர். சூரியன், அம்பாள் ஆகாசவாணி , பூமாதேவி ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம். இங்கு முருகன் சண்முகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.
தினந்தோறும் காலை 6.30 மணி முதல் 12.30 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம், மயிலாடுதுறை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை