கற்கடேஸ்வரர் கோவில், திருந்துதேவன்குடி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவியலூர் என்ற தலத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து திருவிசநல்லூர் செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. தற்போது நண்டாங் கோவில் என்று அறியப்படும் இத்தலம் தேவார காலத்தில் திருந்துதேவன்குடி என்று அழைக்கப்பட்டது.
சுவாமி : கற்கடேஸ்வரர், தேவதேவேசர்
உற்சவர் : சோமாஸ்கந்தர்
அம்பாள் : அருமருந்துநாயகி, அபூர்வநாயகி
தல விருட்சம் : நங்கை மரம்
தீர்த்தம் : நவபாஷாண தீர்த்தம், பங்கய தீர்த்தம், காவிரி
பதிகம் : திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள் : தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 42வது தலம் ஆகும்.கடக ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய கோவில் கற்கடேஸ்வரர் ஆலயம் ஆகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். பொதுவாக கோயில்களில் ஒரு அம்பாள் மட்டுமே இருப்பாள். ஆனால் இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகின்றனர். சுவாமியின் திருமேனியில் நண்டு ஐக்கியமான துளையும், இந்திரனால் வெட்டுப்பட்ட காயமும் இருக்கிறது.
தல வரலாறு : ஒரு சமயம் துர்வாச மகரிஷி, சிவபூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே சென்ற ஒரு கந்தர்வன் துர்வாசரின் முதிய தோற்றத்தைக் கண்டு பரிகாசம் செய்தான். அவரது பூஜை கலையும் விதமாக கை தட்டி அழைத்தான். ஆனாலும் துர்வாசர் திரும்பவில்லை. கந்தர்வனோ விடுவதாக இல்லை. நண்டு போல நடந்து காட்டி அவரை மேலும் கேலி செய்தான். கோபம் கொண்ட துர்வாசர், அவனை நண்டாக பிறக்கும்படி சபித்துவிட்டார். வருந்திய கந்தர்வன் மன்னிப்பு வேண்டினான். சிவலிங்க பூஜை செய்து வழிபட்டால், விமோசனம் கிடைக்கும் என்றார். அதன்படி நண்டு வடிவில் இத்தலம் வந்த கந்தர்வன், சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளியிருப்பதைக் கண்டான்.
தினமும் அருகிலுள்ள புஷ்கரிணியில் மலர் பறித்து, சுவாமிக்கு படைத்து வழிபட்டு வந்தான். இதனிடையே, அசுரர்களை அழிக்கும் சக்தி வேண்டி இந்திரன், தன் குருவின் ஆலோசனைப்படி இங்கு சிவபூஜை செய்ய வந்தான். இங்கிருந்த புஷ்கரிணியில் தினமும் 1008 மலர் பறித்து சிவலிங்கத்திற்கு படைத்து பூஜித்து வந்தான். நண்டு வடிவில் வந்த கந்தர்வன் சிவனுக்கு மலர் படைக்கவே, தினமும் இந்திரனின் பூஜையில் ஒரு மலர் குறைந்தது. இந்திரனுக்கு காரணம் புரியவில்லை. ஒருசமயம் நண்டு பூஜை செய்வதை பார்த்துவிட்டான். தான் பூஜை செய்யும் லிங்கத்தை பூஜிக்கும் தகுதி பிறருக்கு கிடையாது என ஆணவம் கொண்ட அவன், நண்டை கொல்ல முயன்றான். நண்டு, சிவபூஜைக்காக லிங்கத்தின் பாணம் மீது ஏறியபோது, வாளால் வெட்ட முயன்றான். அப்போது சிவன், லிங்கத்திற்குள் துளை ஏற்படுத்திக் கொடுக்கவே, கந்தர்வன் அதற்குள் புகுந்து விமோசனம் பெற்றான். அப்போது இந்திரனின் வாள், லிங்கத்தின் மீது பட்டு காயம் உண்டானது. தவறை உணர்ந்த இந்திரன் மன்னிப்பு வேண்டினான். சிவன் அவனை மன்னித்ததோடு, ஆணவத்துடன் இருப்பவர்களால் ஒரு செயலிலும் வெற்றி பெற முடியாது. பணிவு குணமே நன்மை தரும்,என்று அறிவுறுத்தி காட்சி தந்தார். கற்கடகத்திற்கு விமோசனம் தந்தவர் என்பதால் இவர், கற்கடேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.
சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரம் உள்ளது. ஆடி அமாவாசையும் பூர நட்சத்திரமும் கூடிய நேரத்தில் 21 குடம் காராம்பசு பாலைக் கொண்டு இரவில் சிவலங்கத்தை அபிஷேகித்தால் நண்டு வெளிப்பட்டு காட்சி கொடுக்கும் என்று வசிஷ்ட மகாத்மியம் கூறுகிறது.
காலவெள்ளத்தில் இவ்விடத்தில் சுயம்புலிங்கம் மண்ணிற்குள் மறைந்தது. ஒருசமயம் இப்பகுதியை சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். ஒருசமயம் அவனுக்கு வாதநோய் உண்டானது. பல வைத்தியங்கள் பார்த்தும் நோய் குணமாகவில்லை. சிவபக்தனான அம்மன்னன், நோய் தீர அருளும்படி சிவனிடம் வேண்டினான். ஒருசமயம் வயதான மருத்துவ தம்பதியர் அவனது அரசவைக்கு வந்தனர். மன்னனிடம் சென்ற அவர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த விபூதியை, தீர்த்தத்தில் கரைத்து கொடுத்தனர். அந்த மருந்தை சாப்பிட்ட உடனே மன்னன் நோய் நீங்கி எழுந்தான். மருத்துவ தம்பதியரை தனது அரசவையில் ராஜ வைத்தியராக தங்கும்படி வேண்டினான். அவர்கள் கேட்காமல் கிளம்புவதாக கூறினர். எனவே மன்னன் அவர்களுக்கு பொன்னும், பொருளும் பரிசாக கொடுக்க எடுத்து வந்தான். அதையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை. வியந்த மன்னன் அவர்களிடம், "தாங்கள் விரும்புவது எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேளுங்கள். அதை நிறைவேற்றி வைப்பது என் கடமை!' என்றான். பின்னர் அவர்கள் இவ்விடத்திற்கு அழைத்து வந்து சுவாமி இருந்த இடத்தில் கோயில் எழுப்பும்படி கூறினர். மன்னனும் ஒப்புக்கொண்டான். அப்போது லிங்கத்தின் அருகில் சென்ற இருவரும், அதனுள் ஐக்கியமாயினர். அதன்பின்பு வந்தது சிவ, பார்வதி என உணர்ந்த மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பினான். இவரிடம் வேண்டிக்கொள்ள பிணிகள் நீங்கும்.
இங்கு இரண்டு அம்பிகையர் அடுத்தடுத்த சன்னதிகளில் காட்சி தருகிறன்றனர். மன்னன் இவ்விடத்தில் கோயில் எழுப்பிய போது, ஏற்கனவே இங்கிருந்த அம்பிகையை காண வில்லை. எனவே புதிதாக ஒரு அம்பிகையை பிரதிஷ்டை செய்தான். மருத்துவர் வடிவில் வந்து அருளியவள் என்பதால், அருமருந்து நாயகி என்று பெயர் சூட்டினான். ஆனால் சிறிது நாட்களிலேயே தொலைந்த அம்பிகை சிலை கிடைத்தது. அதனையும் இங்கு பிரதிஷ்டை செய்தான் மன்னன். இவள் அபூர்வநாயகி என்று அழைக்கப்பட்டாள். இவளே இங்கு பிரதான அம்பிகையாக கருதப்படுகிறாள். இத்தல விநாயகர் கற்கடக விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சுப்பிரமணியர், சுதை வடிவில் நடராஜர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது.
கோவில் அமைப்பு : கோவில் நான்கு புறமும் நெல் வயல்கள் சூழ அமைந்துள்ளது. அருகில் ஊர் எதுவும் இல்லை. கோவில் மதிற்சுவரைச் சுற்றி கிழக்கு திசை தவிர மற்ற மூன்று புறமும் நீர் நிறைந்த அகழி உள்ளது. திருவிசநல்லூரில் இருந்து கற்கடேஸ்வரர் கோவில் வரை செல்ல நல்ல சாலை வசதி உள்ளது. முதலில் செங்கல்லால் கட்டபட்டு பிறகு கற்கோவிலாக திருப்பணி செய்யப்பட்ட இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முதல் கட்டமாக ஒரு நுழைவாயிலும், இரண்டாம் கட்டமாக ஒரு கோபுரமும் வாயிலும் கொண்டு இக்கோவில் விளங்குகிறது. முதல் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் வீநாயகர், பலிபீடம் மற்றும் நந்தி ஆகியவற்றைக் காணலாம். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் தெற்கு நோக்கி அமைந்துள்ளன. இரண்டாம் கட்ட கோபுர வாயில் வழியாக உள்ளே சென்றவுடன் கருவறையில் இறைவன் கற்கடேஸ்வரர் கிழக்கு நோக்கி காணப்படுகிறார். கருவறை மேற்கு உட் பிரகாரத்தில் கணபதி, முருகர் மற்றும் கஜலட்சுமிக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன. கருவறை கோஷ்டத்தில் தென்திசை நோக்கி தட்சினாமூர்த்தியும் வடதிசை நோக்கி துர்க்கையும் உள்ளனர். நால்வர் சந்நிதியும் உட் பிரகாரத்தில் உள்ளது. தன்வந்தரி, அகஸ்தியர் ஆகியோரும் சுற்றுப் பிரகாரத்தில் உள்ளனர்.
சந்திரனால் ஏற்படும் தோஷங்கள் நீங்க வழிபட வேண்டிய தலம் திருந்துதேவன்குடி தலமாகும். அநேகமாக எல்லா சிவாலயங்களிலும் சந்திரனுக்கு தனி சந்நிதி இருக்கும். சந்திரன் நின்ற நிலையில் காணப்படுவார். இத்தலத்தில் மட்டும் சந்திரன் அமர்ந்த நிலையில், யோக நிலயில் இருக்கிறார். முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய அருமருந்துநாயகி, அபூர்வநாயகி ஆகிய இரண்டு அம்பாள் சந்நிதிகள் தெற்கு நோக்கி அமைந்துள்ளன. அம்பாள் அருமருந்து நாயகிக்கு அபிஷேகம் செய்து தரப்படும் தீர்த்தத்தை உட்கொண்டால் வியாதிகள் தீர்கின்றன.
புனர்பூசம், பூசம், ஆயில்ய நட்சத்திரம் மற்றும் கடக ராசிக்காரர்களுக்கான பரிகார தலம் இது. கோயில் நுழைவுவாயில் சந்திரன் சன்னதி உள்ளது. இவர் யோக நிலையில், "யோக சந்திரனாக' காட்சி தருகிறார். ஜாதகத்தில் சந்திர தசை உள்ளவர்கள் இவருக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி வழிபட்டால், தோஷம் நீங்குவதாக நம்பிக்கை.
தினந்தோறும் காலை 9.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை