எழுத்தறிநாதேஸ்வரர் கோயில், இன்னம்பூர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலைக்குச் செல்லும் சாலை வழியில் திருப்புறம்பயம் போகும் வழியில் சுமார் 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்துகள் இத்தலம் வழியாக செல்கின்றன.
சுவாமி : எழுத்தறிநாதர், ஐராவதேஸ்வரர்
அம்பாள் : கொந்தார் பூங்குழலி, நித்தியகல்யாணி (தனித்தனியே இரு சந்நிதிகள்)
தல மரம் : பலா, சண்பகம்
தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள் : தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 45வது சிவத்தலமாகும். மூலவர் எழுத்தறிநாதர் உயரமான பாணத்துடன் மிகப்பெரிய வடிவத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இங்கு அம்பிகையின் திருநாமம் சுகந்த குந்தளாம்பிகை. மிகவும் அழகானத் தோற்றத்தில் காட்சியளிக்கின்றாள். சூரியன் வழிபட்டதால் இக்கோயிலில் உள்ள மூலவர் மீது ஆவணி மாதம் 31ம் தேதி, புரட்டாசி 1 மற்றும் 2 தேதிகளிலும், பங்குனி மாதம் 13 முதல் 15ம் தேதி வரையிலும் காலை வேலையில் சூரியனின் கதிர்கள் விழுகின்றன.
தல வரலாறு : ஒருமுறை சோழ நாட்டு மன்னனிடம் கணக்கராக பணிபுரிந்து வந்த சுதன்மன் என்பவர் காட்டிய கணக்கில் மன்னனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. சரியான கணக்கைக் காட்டியும், மன்னன் ஐயம் கொண்டதை எண்ணி வருந்திய சுதன்மன் ஈசனை வணங்கி வேண்டினார். இறைவன் சுதன்மன் வடிவத்தில் மன்னனிடம் சென்று அவனது ஐயத்தைப் போக்கினார். சிறிது நேரம் கழித்து சுதன்மன் அரண்மனைக்குச் சென்று மன்னனிடம் மீண்டும் கணக்கைக் காண்பித்தார். இப்போதுதானே காட்டிவிட்டு சென்றீர்கள், மீண்டும் ஏன் காட்டுகிறீர் என்று வினவ, அப்போதுதான் இறைவனே தனக்காக வந்ததை அறிந்தார் சுதன்மன். நடந்ததை அறிந்த மன்னன், சுதன்மனிடம் மன்னிப்புக் கேட்டு, அவனது ஊரில் சிவபெருமானுக்கு ஒரு கோயிலும் எழுப்பினான். 'இந்த தலமே இன்னம்பூர்' என்று அழைக்கப்படும் தலமாகும். சுவாமிக்கும் எழுத்தறிநாதர் என்ற பெயர் ஏற்பட்டது. சூரியன் வழிபட்டதால் இன்னம்பர் என்ற பெயர் பெற்றது.
இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்கு இலக்கணம் உபதேசித்ததால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு இங்கு வந்து அர்ச்சனை செய்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு நெல்லில் எழுத பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் சுவாமிக்கு 'அட்சரபுரீஸ்வரர்' என்ற திருநாமமும் வழங்கப்படுகிறது. மேலும் திக்கு வாய் இருப்பவர்கள், பேச்சுத் திறமை இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அவர்கள் குரல்வளம் நன்றாக அமையும் என்றும் அவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டு அறிவுக் கூர்மை பெறுவார்கள்.
தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானை இங்குள்ள தடாகத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் சாபத்தைப் போக்கிக் கொண்டதால் இங்குள்ள தீர்த்தம் ஐராவத தீர்த்தம் என்றும் இறைவன் ஐராவதேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை சூரியன், சந்திரன், ஐராவதம் என்ற யானை, அகஸ்திய முனிவர் ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
கோவில் அமைப்பு : ஆலயம் கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரத்தைக் காணலாம். கொடி மரம், பலிபீடம், நந்தியைக் கடந்து சென்றால் உள்ளே மூலவர் சன்னதிக்கு இடப்புறமாக பூங்கொம்பு நாயகி, நித்தியகல்யாணி என்ற இரு அம்மன் சன்னதிகள் உள்ளன. முன் மண்டபத்தில் நர்த்தன விநாயகர், சூரியன், பைரவர், கால பைரவர், சந்திரன் ஆகியோர் உள்ளனர். மூலவர் கருவறைக்கு முன்பாக இரு புறங்களிலும் டிண்டியும், முண்டியும் உள்ளனர். அருகில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றில் நால்வர், கன்னிமூல கணபதி, பாலசுப்பிரமணியர் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. சிவலிங்கம், கைலாயலிங்கம், காசி விசுவநாதர், விசாலாட்சி, மகாலிங்கம், மகாலட்சுமி, விஷ்ணுதுர்க்கை, நடராஜர் ஆகியோர் திருச்சுற்றில் உள்ளனர். நந்தி மண்டபத்திற்கு பின்னாலுள்ள இரண்டாவது நுழைவாயிலைக் கடந்து உள்ளே எழுத்தறிநாதர் அருட்காட்சி தருகிறார். மூலவர் பெரிய நீண்டுயர்ந்த பாணத்துடன் கம்பீரமாகக் காட்சி தருகின்றார். இறைவன் சந்நிதி விமானம் கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, காட்சிகொடுத்த நாதர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். பாலசுப்பிரமணியருக்கு தனி சந்நிதி உள்ளது. கல்லில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலையும் கோஷ்டத்தில் உள்ளது. அழகான பைரவர் மூர்த்தமும் காண வேண்டிய ஒன்றாகும்.
தினந்தோறும் காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை