விஜயநாதர் கோவில், திருவிசயமங்கை
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து திருப்பறம்பியம் சென்று அங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் கொள்ளிட ஆற்றின் கரையில் உள்ளது.
சுவாமி : விஜயநாதர், விஜயநாதேஸ்வரர்
அம்பாள் : மங்கைநாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : அர்ஜுன தீர்த்தம், மண்ணியாறு, கொள்ளிடம்
பதிகம் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள் : தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 47வது தலமாகும். அருச்சுனன் அம்பு பட்ட தழும்பு கோடு சிவலிங்கத் திருமேனியில் கீற்று போல் உள்ளது.
தல வரலாறு : பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் வழிபட்ட தலம். இதனால் ஈசனுக்கு விஜயநாதர் எனபெயர் வந்தது. சிவலிங்கத் திருமேனியின்மீது பசு தானே பாலை சுரந்து வழிபட்ட தலம். குருஷேத்திரப் போரின் போது அர்ஜூனன் பாசுபதாஸ்திரம் ஈசனிடம் பெற வேண்டி இவ்வாலயத்தில் கடும் தவம் செய்தார். பாசுபதாஸ்திரத்தை அர்ஜூனன் பெற்றால் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த துரியோதனன் முகாசுரன் என்பவனை அனுப்பி தவத்தைக் கலைக்கச் சொன்னான். முகாசுரன் பன்றியின் உருவெடுத்து அர்ஜூனனைத் தாக்க பாய்ந்த போது பக்தனை காப்பாற்ற நினைத்த ஈசன் வேடன் உருகொண்டு பன்றியைக் கொன்றார். பன்றியை கொன்றது குறித்து சொற்போரும் விற்போரும் நடந்தது. அர்சுனன் வில் முறிந்தது. முறிந்த வில் கொண்டு வேடன்முடி நோக்கி அம்பு எய்தார் முடியில் பட்ட அம்பு, உலக உயிர்கள் அனைத்தின் மீதும் பட்டது. அர்ஜுனன் முன் இறைவன் தோன்றினார். அர்ஜுனன் தன் செயலுக்கு மன்னிப்பு கேட்டு பணிந்தார். ஈசன் விஜயனான அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்திரத்தை அருளினார். இன்றும் இவ்வாலய லிங்கத் திருமேனியில் அம்பு பட்ட தழும்பு கோடு போல் காணப்படுகிறது. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தொழ வரும்பொழுது கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. எனவே தென்கரையில் இருந்தபடியே பதிகம் பாடினர். அப்போது இவர்களுக்கு காட்சி தரும் பொருட்டு விநாயகரும் முருகபெருமானும் தெற்கு நோக்கி திரும்பினர். இன்றும் இவ்வாலய விநாயகரும் முருகரும் தென்திசை நோக்கி இருப்பதைக் காணலாம்.
கோவில் அமைப்பு : ஆலயத்திற்கு கோபுரமில்லை. மதிற்சுவருடன் கூடிய ஓர் நுழைவு வாயில் உள்ளது. நுழைவு வாயிலின் மேல் ரிஷபத்தின் மீது சிவனும், பார்வதியும் அமர்ந்தபடி காட்சி அளிககும் சுதைச் சிற்பத்தைக் காணலாம். வாயில் வழியாக உற்றே நுழைந்தவுடன் நேரே ஒரு சிறிய சந்நிதியில் விநாயகர் காட்சி தருகிறார். அவருக்குப் பின்னால் பலிபீடமும் அடுத்து நந்தி மண்டபமும் உள்ளன. மூலவர் விஜயநாதேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் மங்கைநாயகி தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக சதுர ஆவுடையார் மீது அருள்பாலிக்கிறார். அம்மன் மங்கள நாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும், பின் இரண்டு கைகளில் ஒரு கையில் அட்சரமாலையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். கோயிலின் சுற்றுப்பகுதியில் நர்த்தன விநாயகர், அனுக்கிரக தெட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியோர் உள்ளனர். நால்வருக்கும் தனி சந்நிதி உள்ளது.நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. அடுத்து விநாயகர் உள்ளார். தொடர்ந்து உள்ளே செல்லும்போது மண்டபத்தில் வலப்புறம் நால்வர் சன்னதியும், இடப்புறம் நவக்கிரக சன்னதியும் உள்ளன. அடுத்து மங்கைநாயகி சன்னதி உள்ளது. மூலவர் கருவறைக்கு முன்பாக விநாயகர், முருகன் இரு புறங்களிலும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
தினந்தோறும் காலை 8.00 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : கும்பகோணம்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை