ஐயாரப்பர் கோவில், திருவையாறு
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றின் மையப்பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து 10 கி.மி. தொலைவில் திருவையாறு இருக்கிறது. தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
சுவாமி : ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்
அம்பாள் : தர்மசம்வர்த்தினி, திரிபுரசுந்தரி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : சூரிய புஷ்கரணி தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர்
சிறப்புக்கள் : தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 51வது சிவத்தலமாகும். திருவையாறு மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய தலமாகும். இறைவன் கருவறையை சுற்றி வர முடியாது என்பதும் இத்தலத்தின் முக்கிய அம்சம், இறைவனின் கருவறையில் விரிசடை படர்ந்திருப்பதால் அதை சென்று மிதிக்கக் கூடாது என்பதால் கருவறை சுற்றுப் பிராகாரத்தை வலம் வரக்கூடாது என்பது இத்தலத்தில் கடைபிடிக்கப்படுகிறது.மூன்றாம் பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நின்று வடக்கு நோக்கி ஐயாறா என்று அழைத்தால் ஏழு முறை அது எதிரொலிக்கும்.
இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் ஒரு பிருத்வி லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. ஆவுடையார் மேல் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும். லிங்கத் திருமேனிக்கு புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருக்கச்சி ஏகம்பம் ஆலய மூலவர் ஏகாம்பரநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் ஆதலால் அங்கும் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும். திருவாரூர் ஆலய மூலவர் வன்மீகநாதரும் ஒரு பிருத்வி லிங்கம் என்பது குறிப்பிடதக்கது. இறைவி தர்மசம்வர்த்தினி காஞ்சி காமாட்சியைப் போன்றே இறைவனிடம் இருநாழி நெல் பெற்று 32 அறங்களையும் செய்தமையால் அறம் வளர்த்த நாயகி என்றும் அறியப்படுகிறாள். இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும், மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்னு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள்.
கோவில் அமைப்பு : திருவையாறு சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய ராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவிலாகும். முதல் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தம் மிகச் சிறப்புடையது. இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவகிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. மேலும் இச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சோமச்கந்தர், தட்சினாமூர்த்தி, நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன. நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும், அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் அமைந்துள்ளன. இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக ராஜகோபுரங்கள் உள்ளன. இறைவன் சந்நிதி கருவறை விமானத்தின் பின்புறக் கோஷ்டத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் சற்று மாறுபட்டது. வழக்கமாக இந்த அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களில் சிவபெருமான் வலப்புறமும், உமையம்மை இடப்புறமும் தான் காணப்படுவர். ஆனால் இங்கு சிவன் இடப்புறமும் உமை வலப்புறமும் அமைந்திருப்பதைக் காணலாம்.
இத்தலத்திலுள்ள வடகயிலாயம், தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடபுறம் "ஓலோக மாதேவீச்சுரம்" என்ற கற்கோவில் உள்ளது. இது "வட கைலாயம்" எனப்படும். அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகயிலாயம் முதல் இராஜராஜசோழனின் பட்டத்தரசி உலகமகாதேவியால் எழுப்பப்பட்டது. மூன்றாம் பிரகாரத்தின் தென்புறம் "தென் கைலாயம்" எனப்படும் கற்கோவில் உள்ளது. இது முதலாம் இராஜேந்தர சோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவியால் பழுது பார்க்கப்பட்டு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. சந்நிதி முன்னுள்ள சொக்கட்டான் மண்டபம், கீழைக் கோபுரத்திற்கு அருகிலுள்ள நூற்றுக்கால் மண்டபம் ஆகியவை கட்டட, சிற்பக்கலைச் சிறப்பு மிக்கவை.
இத்தலத்தில் முருகப்பெருமான் வில், வேல், அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாக தனுசுசுப்ரமணியம் என்ற பெயருடன் விளங்குகிறார். இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர்.
இங்குள்ள தட்சிணாமூர்த்தி ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். வலது கரங்களில் கபாலம், அபய முத்திரையும், இடது கரங்களில் சூலம், வேதச்சுவடிகள் தாங்கியும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் திருக்கோயில். திருவீழிமிழலையில் கண்மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீதட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார். இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் பாதத்தின் கீழே கூர்மம் அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும். குரு ஸ்தலம் எனப் போற்றப்படுகிற இந்தக் கோயிலில், மாதந்தோறும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில், குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு, அபிஷேகம் செய்து ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் நிலைக்கும்.
ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதி மிகவும் முக்கியமானது. இச்சந்நிதியில் எப்போதும் குங்கிலியம் இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள். சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார். இவரை வணங்கி விட்டு கோவிலுக்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும்.
சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிகொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாட, இக்கரையில் இருந்த விநாயகர் "ஓலம் ஓலம்" என்று குரல் கொடுத்து காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓலமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவையாறு, தஞ்சாவூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை