செம்மேனிநாதர் கோவில், திருக்கானூர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவின் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஆட்டோ, கார் மூலம் இத்தலத்திற்கு செல்வது சிறந்தது. மண் சாலையில் பேருந்து செல்ல வசதியில்லை. கொள்ளிடக் கரையில் கோயில் மட்டும் தனியே உள்ளது.
சுவாமி : செம்மேனிநாதர், கரும்பேஸ்வரர்
அம்பாள் : சிவலோக நாயகி, சௌந்தரநாயகி
தல விருட்சம் : பனை
தீர்த்தம் : கொள்ளிடம், வேததீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்
சிறப்புக்கள் : தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 56வது தலம் ஆகும். அக்கினி வழிபட்ட தலம். மூலவர் செம்மேனிநாதர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இறைவனுக்கு கரும்பேஸ்வரர் என்ற பெயரும் உண்டு. மூலவர் விமானம் ஏகதளத்துடன் உருண்டை வடிவில் உள்ளது. பங்குனி மாதத்தில் ஏப்ரல் 2,3,4 ஆகிய தேதிகளில் இத்தல இறைவன் மீது சூரிய ஒளி விழுகிறது. இத்தலத்திலுள்ள அம்மனின் விக்ரகம் சாளக்கிராமத்தால் ஆனது.
தல வரலாறு : ஒரு முறை அம்பிகை சிவனை நோக்கித் தவமிருக்க பூமிக்கு வந்தார். தியானத்திற்கு ஏற்ற இடமாக இத்தலத்தை தேர்ந்தெடுத்து, சிவனை நோக்கி கடுமையாகத் தவமிருந்தார். தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அக்னிபிழம்பாகக் காட்சி தந்தார். இதனால் இத்தல இறைவன் “செம்மேனிநாதர்” ஆனார். அம்மன் “சிவயோகநாயகி” ஆனார். கணவனும் மனைவியும் சேர்ந்து இத்தலம் வந்து வழிபட்டால், கருத்துவேறுபாடு இல்லாமல், ஒற்றுமையாக இருக்கலாம்.
சமதக்கினி முனிவருக்கும், ரேணுகா தேவிக்கும் மகனாக அவதரித்தவர் பரசுராமர். ஒரு முறை இவர் இல்லாதபோது கார்த்த வீர்யார்சுனன் என்ற அரசன் முனிவரின் ஆசிரமத்திற்கு வந்து, அவரது காமதேனு பசுவைப் பலவந்தமாகக் கவர்ந்து சென்றார். திரும்பி வந்த பரசுராமர் நடந்ததை கேட்டு கோபமடைந்து, கார்த்தவீர்யார்சுனனைக் கொன்று பசுவை மீட்டார். அத்துடன் 21 சத்திரியர்களையும் கொன்றார். இதனால் இவருக்கு “சத்திரிய தோஷம்” ஏற்பட்டது. இந்த தோஷம் போக்குவதற்காக பரசுராமர் இத்தலத்தில் நீராடி ஈசனை வழிபட்டார். சிவனின் அருளால் பரசுராமர் தோஷம் நீங்கப்பெற்றார்.
ஒரு முறை கரிகால் சோழனின் தாய் எதிரிகளுக்கு பயந்து தன் மகனுடன் இப்பகுதியில் மறைந்து வாழ்ந்து வந்தாள். சோழநாட்டிற்கு மன்னன் இல்லாத காரணத்தினால் பட்டத்துயானை அரசாட்சிக்குரியவரை தேடி வந்தது. அப்போது திருக்கானூரில் விளையாடிக்கொண்டிருந்த கரிகாலனுக்கு மாலையிட்டு, தன் பிடரியில் அவனை ஏற்றிக்கொண்டு உறையூர் சென்றது. சோழமன்னன் ஆனான் கரிகாலன்.
கோவில் அமைப்பு : கிழக்கு நோக்கிய சிறிய 3 நிலை ராஜகோபுரத்துடன் சுற்றிலும் மதிற்சுவருடன் இவ்வாலயம் விளங்குகிறது. ஆலயம் நல்ல நிலையிலுள்ளது. . பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, பிரம்மா, சண்டிகேஸ்வரர், நாகர், மகாவிஷ்ணு, ஐயனார், சூரியன், சந்திரன், நால்வர் ஆகியோர் உள்ளனர். உள் பிரகாரம் விசாலமாக உள்ளது.
திருமணத்தடை உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் மற்றும் கணவன் மனைவியருக்குள் கருத்துவேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருக்கவும் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். உடல் நலக்குறைவு ஏற்பட்டவர்கள் இத்தல வில்வ இலைகளால் செம்மேனிநாதருக்கு அர்ச்சனை செய்தால் நோய் விரைவில் குணமாகும். திருமணத்தில் தடை உள்ளவர்கள், சாளக்கிராமத்தினால் ஆன அம்மனுக்கு செவ்வரளி மாலை சாற்றி, நெய் தீபமிட்டால் விரைவில் திருமணம் உண்டாகும். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து எருக்கமாலை சாற்றி வழிபட்டால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும் என்பது நம்பிக்கை. இத்துடன் இனிப்பு பொருட்கள் நைவேத்யம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
ஆலயத்தின் குருக்கள் திருக்காட்டுபள்ளியில் வசிக்கிறார். அங்கிருந்து அவருக்கு வசதிப்பட்ட நேரத்தில் திருக்கானூர் வந்து தினசரி ஒரு வேளை பூஜை மட்டும் செய்துவிட்டுச் செல்கிறார். எனவே திருக்கானூர் செம்மேனிநாதரை தரிசிக்க செல்பவர்கள் திருக்காட்டுப்பளியில் குருக்களை சந்தித்து அவரை கூட்டிக் கொண்டு ஆலயம் செல்வது தான் சிறந்தது.
தினந்தோறும் காலை 10.00 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை, திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : தஞ்சாவூர்
பஸ் வசதி : இல்லை
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை