தியாகராஜர் கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தியாகராஜர் கோயில், மாவட்டத் தலைநகரான திருவாரூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கோயில் நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான ஆழித்தேர் திருவாரூர் கோவில் தேராகும்.
மூலவர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர், வீதிவிடங்கர், தேவரகண்டப்பெருமான், தியாகப்பெருமான், ஆடரவக்கிண்கிணிக்காலழகர், செங்கழுநீரழகர், செவ்வந்தித்தோடழகர், கம்பிக்காதழகர், தியாகவிநோதர், கருணாகரத் தொண்டைமான், அசைந்தாடும் அப்பர், அடிக்காயிரம் பொன் வழங்கியவர், கமலேசர், செம்பொன் தியாகர், தேவசிந்தாமணி, தியாகசிந்தாமணி
தாயார் : அல்லியம்பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
தல விருட்சம் : பாதிரி
தீர்த்தம் : கமலாலயம், சங்கு தீர்த்தம், கயா தீர்த்தம், வாணி தீர்த்தம்
தேவாரம் பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர், சுந்தரர்
சப்தவிடங்கத்தலங்கள் என்பது தமிழ்நாட்டில் உள்ள நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுத் தலங்கள் ஆகும். இவற்றின் தலைமையிடம் திருவாரூர் ஆகும். பிற விடங்கத்தலங்கள் திருநள்ளாறு, நாகபட்டினம் எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில்,திருக்குவளை, திருவாய்மூர், வேதாரண்யம் ஆகியனவாகும். இந்த ஏழு ஊர்களிலுமுள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் சன்னதிக்கு அருகில் அமைந்துள்ள தியாகராஜர் சன்னதிகளில் "விடங்கர்" என அழைக்கப்படும் லிங்கங்கள் பூசிக்கப்படுகின்றன. விடங்கர் என்பது "உளியால் செதுக்கப்படாத மூர்த்தி" எனப் பொருள்படும். இந்திரனிடம் முசுகுந்த சக்கரவர்த்தி பெற்றுவந்த ஒரே உருவம் கொண்ட ஏழு சிலைகள் இந்த ஏழு ஊர்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனம்
தல வரலாறு : திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராசரைத் தமது மார்பில் வைத்துப் பூசித்தார். திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் இறைவர் நடமாடினார். பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூசித்தார். அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரனால் வழங்கப்பெற்றது. இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூசிப்பதாக ஐதீகம்.
சிறப்புக்கள் : திருவாரூர் கோவில் சிதம்பரம் கோவிலைவிட பழமையானது என்பதை குறிக்கும் வகையில் இங்கு பாடப்படும் தேவாரத்தில் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தை குறிப்பிடப்படுவது இல்லை. நவகிரகங்கள் அனைத்தும் ஒரே நேர்கோட்டில் நின்று தரிசனம் தரும் தலம். எமனே சண்டிகேஸ்வரரை ஆட்கொண்டு எமபயம் போக்கும் திருத்தலம். நால்வரில் ஒருவர் சுந்தரருக்காக சிவனே வீதியில் நடந்துசென்று பெண் கேட்ட திருத்தலம். கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தோன்றிய திருத்தலம். நமி நந்தி அடிகள் நீரினால் விளக்கு ஏற்றிய திருத்தலம், பசுவிற்கு நீதிவழங்க தன் மகனை தேரின் சக்கரத்தில் இட்டு கொன்ற நீதிவழுவா மனுநீதி சோழன் வாழ்ந்த திருத்தலம்.
திருவாரூர் கோவில் அளவும் , தெப்பக்குளமும் ஒரே அளவுகொண்டதாகும். இக்கோவில் 9 இராஜகோபுரம், 80 விமானம், 12 உயர மதில்கள் , 13 மண்டபங்கள், 15 தீர்த்த கிணறுகள், 3 தோட்டம், 3 பிரகாரம் என பிரமாண்டமான கட்டட அமைப்பாகும். 24 உட்கோவில்களையும், 365 சிவலிங்ககளையும், 86 விநாயக சிலைகளையும் கொண்ட திருத்தலம் ஆகும்.
இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியது. அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார். இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.
இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர். உமையோடும் முருகனோடும் இணைந்து காட்சி தரும் சிவனுக்கு சோமஸ்கந்தர் எனப் பெயர். அவரே இங்கு எழுந்தருளி இருக்கும் தியாகராசர் ஆவார். அவரோடு இணைந்து காட்சிதரும் உமைக்கு கொண்டி எனப் பெயர். தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். தியாகராஜர் பெருஞ்சிறப்புடன் அஜபா நடன மூர்த்தியாகத் திகழும் பெரும்பதி.
தல வரலாறு : இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும். சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள். திருவாரூர் தியாகராஜர் கோயில் அமைந்துள்ள அன்னை கமலாம்பாள் சந்நிதி மிகவும் பெயர்பெற்ற சக்தி தலம் ஆகும். சந்நிதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் அன்னை அமர்ந்திருக்கிறார். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளைத் துதித்து நவாவர்ணக் கீர்த்தனைகளைப் பாடி இருக்கிறார்.
வன்மீகநாதர் கிழக்கு நோக்கி காட்சி அளிக்கிறார். இவர் சந்நிதிக்குச் செல்லும் வழியில் உள்ள கோபுரம் அழகியான் கோபுரம் எனப்படும். சுதையாலான துவாரபாலகர்கள், கோபுர வாயிலின் நடுவில் வடபால் அதிகார நந்தி காட்சி. உள்ளே நுழைந்து வலமாக வரும்போது பிரதோஷநாயகர், சந்திரசேகரர், சோழமன்னன், மாணிக்கவாசகர், திரிபுரசம்ஹாரர், ஐங்கலக்காசு விநாயகர் முதலிய சந்நிதிகள் உள்ளன. இசந்நிதிக்கு வலதுபுறம் இத்தலத்தின் பிரதான மூர்த்தியான தியாகராஜர் சந்நிதி உள்ளது. தியாகராசாவின் பக்கத்திலுள்ள அம்மை "கொண்டி" எனப்படுபவள். தியாகேசர் சந்நிதியில் வலதுபுறம் ஒரு பீடத்தில் உள்ள பெட்டகத்தில் வீதிவிடங்கராகிய மரகத சிவலிங்கமூர்த்தி உள்ளார். இவருக்குத் தான் நாடொறும் காலை மாலை வேளைகளில் அபிஷேகம். தியாகராசாவின் முகம் மட்டுமே தெரியும். மார்கழி ஆதிரையில் தியாகராஜரின் இடப்பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலப்பாதத்தையும் கண்டு தரிசிக்க வேண்டும். மற்றைய அங்கங்கள் மூடி வைக்கப்பட்டிருக்கும். அவை மிகவும் ரகசியமானவையாக கருதப்படுகிறது.
கமலாம்பிகை திருக்கோயில் மூன்றாவது பிரகாரத்தில் வடமேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு எழுந்துள்ள அம்பிகை சிரசில் சர்வேஸ்வரனைப் போன்று கங்கையையும், பிறையையும் சூடிக்கொண்டு யோக வடிவில் அமர்ந்திருக்கின்றாள். பராசக்தி பீடங்களுள் ஒன்று. அம்பாள் கோயிலின் மேற்கு மூலையில் அக்ஷரபீடமுள்ளது. இதில் பீடமும் ஐம்பத்தோரு எழுத்துக்கள் எழுதப்பெற்ற திருவாசியுமே உள்ளன. நின்று தியானித்துச் செல்லவேண்டும். ஆடிப் பூரம், ஆடி வெள்ளி, தை வெள்ளி ஆகிய தினங்களில் இங்குள்ள அம்பாளை வழிபட்டால் அருள் பெறலாம்.
நிலோத்பலாம்பாள் இரண்டு கரத்துடன் ஆதி சக்தியாக காட்சி தருகிறார். அல்லியங்கோதை என்று தமிழிலும், வடமொழியில் நீலோத்பலாம்பாள் என்றும் பெயர். வேறு எங்கும் காண இயலாத தனிச்சிறப்புடன் அம்பாள் காணப்படுகிறார். அம்பாளுக்கு இடது புறமாக ஒரு பெண் நின்ற நிலையில் ஒரு சிறுவனை தன் தோளின் மீது உட்கார வைத்துக்கொண்டு காட்சி அளிக்கிறாள். அவன் தலை மீது அம்பாள் தன் இடது கையை படிமானமாக வைத்துக் கொண்டிருப்பது போல, ஒரே கல்லில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. வலது கையில் ஒரு குவளை மலரை வைத்துக் கொண்டிருக்கிறாள். இவ்வாறான திருவுருவம் வேறுஎங்கும் காண இயலாதது, கருவறையில் பள்ளியறையும் அமைந்து தனித்தன்மை பெற்று விளங்குகிறது.
ரௌத்திர துர்க்கை அம்பாள் திருமண வயதை எட்டிய குமரிப்பெண்களுக்கும், ஆண்களுக்கும் நெடுநாட்களாக திருமணத்தடையை நிவர்த்திசெய்யவே ராகு கால நேரத்தில் தன்னை அர்ச்சனை செய்வோருக்கு குறைதீர்த்து அருள்பாலிக்கின்றாள். ரௌத்திர துர்கை சன்னதியில் ராகு காலத்தில் அர்ச்சனை செய்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் முடித்து அம்பிகை அருள்பாலிக்கின்றாள். வெள்ளி, ஞாயிறுக்கிழமைகளில் ராகுகால நேரத்தில் அhச்சனை செய்து விஷேச பலனை அடையலாம்.
ரண விமோசனர் சந்நிதி : ரண் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு கடன் என்று பொருளும் ரண என்ற தமிழ் சொல்லுக்கு காயம் என்ற பொருளும் உண்டு. நெடுநாள் தீராத, வராத கடனையும், தீராத நோய்களையும் இவரை வழிபடும் பக்தர்களுக்கு தீர்த்து வைப்பதால் ரண விமோசனர் என அழைக்கப்படுகின்றனர். இவரை அமாவாசை தினத்தன்று அபிஷேகம், உப்பு மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுதல் மிகவும் பலனைக் கொடுக்கும். பக்தர்களின் உப்பு காணிக்கையினால் பிரகாரம் சற்று அரித்து இருந்தாலும் லிங்கம் எந்தவித பாதிப்பும் இன்றி ரண விமோசனர் விளங்குகின்றார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. “திருவாரூர் தேரழகு” என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவாரூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை