விராட் - அம்பிகா தேவி
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் தலைநகரான ஜெய்ப்பூரிலிருந்து ஜெய்ப்பூர்- ஷபுராஆல்வார் பாதையில் சுமார் 66 கி.மீ. தொலைவில் உள்ளது.
பீடம் : காளிபீடம். விராடா பீடம்
தேவியின் இடதுகால் கட்டைவிரல் விழுந்த இடம்.
தல சிறப்பு : சக்தி பீட வரிசையில் 41வது பீடமாக விளங்கும் இது, அம்பிகா எனும் திருநாமத்துடன் பீடேஸ்வரியும், அம்ருதாக்ஷர் எனும் திருநாமத்துடன் க்ஷத்ரபாலரும் இங்கு காட்சியளிக்கின்றனர். மகாசக்தி பீடத்தை அலங்கரிக்கும் அம்பிகா தேவிக்கு இங்கு ஒரு தனி ஆலயம் உள்ளது. இதை பவானிமந்திர் மற்றும் விந்தியவாஸினி மந்திர் என்பர். இங்கு அன்னை காலையில் குழந்தை அலங்காரத்திலும், மதியவேளையில் இளம் பெண்ணாகவும், மாலை பொழுதில் வயோதிக பெண்ணாகவும் அலங்கரிக்கப்படுவது சிறப்பு. இந்த சக்திபீடம் அம்பிகா மந்திர் என்றே அழைக்கப்படுகிறது.
அக்ஷரசக்தியின் நாமம் சரஸ்வதிதேவி எனும் ஸித்தக்ரியா தேவி. இளஞ்சிவப்பு நிறத்துடன், சிவப்பு நிற ஆடை உடுத்தி, வரத அபய முத்திரை தாங்கி மேலிரு திருக்கரங்களில் சின்முத்திரை, தாமரைமலர் தரித்தருள்பவள் இத்தேவி. வெண்தாமரையே இவளது ஆசனம். பீட சக்தியின் நாமம் அம்பிகா. இந்த சக்திபீடத்தை அம்ருதாக்ஷர் எனும் பைரவர் காவல்புரிகிறார்.
கோவில் அமைப்பு : அம்ருதாக்ஷரின் நாயகியாய் பேரழகுப் பெட்டகமாய் விராட பீடத்தில் அம்பிகை அமர்ந்து அருட்பாலிக்கிறாள். தாமரை மலர்களை ஏந்திய திருமகளும் சரணம் என்று தேவர்களோடு இந்த அம்பிகையின் திருவடிகளைப் பணிய, மகிழ்வுடன் அருள்பவள். செஞ்சந்தனக் குழம்பு பூசிய அன்னையின் செந்தளிர்ப் பாதம் தேவர்களின் தலைபட்டு மென்மேலும் சிவக்கும். பெரும்புகழ் முருகனை ஈன்று இந்த உலகுக்கு அளித்த அன்னை. நீலகண்டரின் மனையாள். தன்னை நாடி வரும் அன்பர்களின் துயர்களை நீக்கி, அவர்கள் விரும்பும் பேரானந்தமாம் முக்தியையும் அளிப்பவள். வருந்திடும் அடியார்களுக்கு அருளமுதை ஊட்டி மனதை அடக்கி ஞானப் பேரொளியை தரிசிக்க வைப்பவள்.
தல பெருமை : ‘விராட்’ என்றழைக்கப்படும் இப்புனித பூமி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. பாண்டவர்கள் தங்கள் அஞ்ஞாத வாசத்தை கிருஷ்ணரின் ஆலோசனையின்படி இந்நகரில்தான் கழித்தனர். திரேதாயுகத்தில் பெரிய நகரமாகவும் மத்ஸ்ய நாட்டின் தலைநகராகவும் இந்த விராடம் விளங்கியது. அஞ்ஞாதவாசத்தின் இறுதியில் கெளரவர்கள் சேனையை முறியடித்து பாரதப்போரின் முதல் கட்டத்தில் வெற்றி கொண்டனர் பாண்டவர்கள். பதின்மூன்று வருடங்களாக ஓய்வு பெற்றிருந்த அர்ஜுனனின் காண்டீபம் தன் வலிமையைக் காட்டியது இப்போரில்தான். அன்னை துர்கா தேவியை பக்திப் பரவசத்துடன் யுதிஷ்டிரர் என்று அழைக்கப்படும் தர்ம தேவதையின் அம்சமான தர்மர் போற்றித் துதித்த இடம் இது.
விராட அரசனின் மகளான உத்தரையைக் கரம் பிடித்தான் அர்ஜுனன். விராட அரசனின் மகனான உத்தரன் மிகவும் கோழையாக இருந்தான். அவனுக்கு போர்ப்பயிற்சி அளித்து சிறந்த வீரனாக்கினான் அர்ஜுனன். அந்த மாவீரன் மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்காக தன்னுயிரை ஈந்தான். உத்தரையின் வயிற்றில் உதித்த அபிமன்யு தன் இளம் வயதில் சில ஆண்டுகள் இந்த நாட்டை ஆண்டு வந்திருக்கிறான். பீம்கிதுங்ரி என்றழைக்கப்படும் பாண்டுமலையையும், பாண்டவர்கள் வசித்த குகையை இங்குள்ள சிறிய குன்றிலும் காணலாம்.
நடை திறக்கும் நேரம் : காலை 5.30 முதல் இரவு 8.00 வரை திறந்து இருக்கும்.
தகுந்த காலம்: ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரை
அருகில் உள்ள விமான நிலையம்: ஜெய்ப்பூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : பராட்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு