கடைமுடிநாதர் கோவில், திருக்கடைமுடி
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் மேலப்பாதியைக் கடந்து பூம்புகாருக்கு முன்னால் உள்ள கீழையூரில் இத்தலம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
சுவாமி : கடைமுடிநாதர், அந்தஸம்ரக்ஷணேஸ்வரர்
அம்பிகை : அபிராமி
தல விருட்சம் : கிளுவை
தீர்த்தம் : கருணாதீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர்
கீழையூர் கடைமுடிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும்.
சிறப்புக்கள் : பிரம்மா இத்தலத்தின் சிறப்பை உணர்ந்து இங்கு இறைவனுக்கு ஓர் ஆலயம் எழுப்பி இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். தன் பெயரில் ஒரு தீர்த்தம் உண்டாக்கி அதற்கு பிரம்ம தீர்த்தம் எனப் பெயரிட்டு அப்புனித நீரால் இறைவனை வழிபட்டுள்ளார். இந்த பிரம்ம தீர்த்தம் ஆலயத்தின் நேர் எதிரில் அழகுற விசாலமாக அமைந்துள்ளது. மகிழ்ந்த சிவன், அவருக்கு இங்கிருந்த கிளுவை மரத்தடியில் காட்சி தந்தார். பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். சகுந்தலையின் வளர்ப்புத்தந்தை கண்வ மகரிஷி இத்தல இறைவனை வழிபட்டு தன் புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொண்டார் என்பது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இவர் காவிரியில் நீராடி வழிபட்ட இடம் இன்று கண்வமஹான் துறை என்ற காரணப் பெயர் கொண்டு வளங்குகிறது. இத்தல இறைவன் கடைமுடிநாதர் என்றும், வடமொழியில் அந்தஸம்ரக்ஷணேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
அபிராமி அன்னையை அருகிலுள்ள கண்வமஹான் துறையில் நீராடி வெள்ளிக்ககிழமை தரிசனம் செய்து திரவியங்கள் சமர்ப்பித்து வழிபட்டால் விரைவில் திருமணம் கைகூடும். கன்னிப்பெண்கள் திருமணத்தடை நீங்க திருமாங்கல்ய வழிபாடு செய்கின்றனர். இத்தலத்தில் காவிரி வடக்கு முகமாக வந்து பின் மேற்காக ஓடுவதும் ஒரு சிறப்பம்சமாகும்.
கோவில் அமைப்பு : இவ்வாலயம் ஒரு முகப்பு வாயிலுடன் காட்சி தருகிறது. இராஜகோபுரமில்லை. இறைவனின் சந்நிதி மேற்கு நோக்கி உள்ளது. மேற்கு பார்த்த சிவத்தலங்கள் தமிழகத்தில் சில இடங்களிலேயே உள்ளன. அதில் இதுவும் ஒன்று. லிங்க மூர்த்தம் 16 பட்டைகளுடன் ஷோடச லிங்கமாக அமைந்துள்ளது இத்தலத்தின் மற்றொரு சிறப்பாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் உள்ள நவக்கிரக மண்டபம் எண்கோண வடிவ ஆவுடையார் மீது அமைக்கப்பட்டுள்ளது. சிவன் சன்னதி கோஷ்டத்திலுள்ள தெட்சிணாமூர்த்தியும், பைரவரும் இடதுகாதில் வளையம் அணிந்துள்ளனர். கடைமுடிவிநாயகர் மற்றும் சுப்பிரமணியருக்கும் சன்னதிகள் உள்ளன. அம்பாள் அபிராமி என்ற பெயருடன் தெற்கு நோக்கி அருள் காட்சி தருகிறாள்.
பிராகாரத்திலுள்ள நவகிரக சந்நிதியில், வலதுபுறம் திரும்பிய அறுங்கோண வடிவிலுள்ள ஆவுடையாரின்மீது நவகிரகங்கள் நேர்வரிசையில் இல்லாமல் ஒருவருக்கொருவர் முன்னும்பின்னுமாகப் பார்த்திருப்பது தனிச்சிறப்பு. மேற்கு நோக்கிய இத்தலத்திலுள்ள தட்சிணாமூர்த்தி இடது காதில் மட்டும் வளையம் அணிந்து வலது காதில் வளையமில்லாமல் இருக்கிறார். இதேபோல் மேற்கு நோக்கிய பைரவரின் இடது காதில் மட்டும் வளையம் அணிந்து வலது காதில் ஒன்றுமில்லாமல் அருள்புரிவது சிறப்பு.
தல வரலாறு : மூன்றாம் நந்திவர்ம பல்லவன், பராந்தக சோழன் காலத்திய கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. கோவிலின் அருகில் கண்டெடுக்கப்பட்ட அர்த்தநாரீஸ்வரரின் படம் ஆதித்யசோழர் காலக் கல்லமைப்புடன் காணப்படுகின்றன. எவரிடமும் சொல்ல முடியாத சங்கடமான சூழ்நிலையில் உள்ளவர்கள் சங்கடஹர சதுர்த்தியன்று கடைமுடி விநாயகரை தரிசித்து வழிபட்டால் வம்பு வழக்குகள் தீர்ந்து வளமுடன் வாழலாம். மாத சிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபி ஷேகம் மற்றும் சிவாலயத்திற்குரிய அனைத்து பூஜைகளும் சிறப்பாக நடக்கின்றன.
இவ்வாலயத்தில் மிருத்யுஞ்சய ஹோமம் நடக்கிறது. இந்த ஹோமம் செய்து வழிபட்டால் எமனையும் வெல்லலாம். மிருத்யுஞ்சயம் என்றால் எமனை வெல்வதென்று பொருள்படும். பொதுவாக, ஒருவரது ஜாதகத்தில் குரு, செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருந்தால், அவருக்கு எதிர்பாராத விபத்தின்மூலம் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. அதேபோல பெண் ஜாதகத்தில் சுக்கிரன், செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோணமாக இருந்தால் அவருக்கு எதிர்பாராத விபத்தின்மூலம் மரணம் ஏற்பட வாய்ப்புண்டு. இதுபோன்று பல கிரக காரணங்களால் ஒருவருக்கு மரணகண்டங்கள் வரும்போது, அதிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள செய்யப்படும் ருத்ர வழிபாடே இந்த மிருத்யுஞ்சய ஹோம வழிபாடாகும்.
திருமணத்தடையுள்ளவர்கள் இந்த அம்பாளுக்கு வித்தியாசமான பிரார்த்தனையாக திருமாங்கல்ய வழிபாடு செய்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இவளுக்குத் தாலிகட்டி வேண்டிக் கொள்கின்றனர். வரன் அமைந்தபிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியைத் தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு, மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பெண்கள் சுமங்கலியாகவே இருப்பர் என்பது இப்பகுதி மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : மயிலாடுதுறை
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை