திருப்புடைமருதூர்





	


	



























	




 




	








 




12:32:17 AM         Thursday, April 16, 2026

திருப்புடைமருதூர்

திருப்புடைமருதூர்
திருப்புடைமருதூர் திருப்புடைமருதூர் திருப்புடைமருதூர்
Product Code: திருப்புடைமருதூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                  திருப்புடைமருதூர், நாறும்பூநாதர் 

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின்  திருநெல்வேலி மாவட்டத்தில்  திருநெல்வேலி மாநகரிலிருந்து மேற்கே சுமார் 28 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பாபநாசம் செல்லும் பேருந்தில் ஏறி, வீரவநல்லூரில் இறங்கி, அங்கிருந்து சிற்றூந்துகள், நகரப்பேருந்துகள் மற்றும் தனியார் கட்டண வாகனங்களில் இத்தலத்தை சென்றடையலாம்.

இறைவன் : நாறும்பூநாதர் , புடார்ஜீனேஸ்வரர்
இறைவி  :கோமதி அம்மை
தல தீர்த்தம் : முனி தீர்த்தம், சுரேந்திர மோட்ச தீர்த்தம், தாமிரபரணி
தல விருட்சம் : மருத மரம்

தல சிறப்புகள் :   இங்குள்ள இறைவன் நாறும்பூநாதர் சுயம்பு மூர்த்தி ஆவார். இவர் கருவறையில் கருவூர் சித்தரின் குரலுக்கு செவி சாய்த்த கோலத்தில் இடப்புறம் சாய்ந்த திருமேனியராய் காட்சித் தருகிறார். இவரின் மேனியில் மானின் காலடி பட்ட தழும்பும், வீரர்கள் கோடரியால் வெட்டிய தழும்பும் உள்ளது. இங்குள்ள அம்மை கோமதி, கைலாய மலையின் ஒரு பகுதியாக விளங்கும் நீலக்கல்லால் ஆன சுயம்பு திருமேனி என இத்தல புராணம் கூறுகிறது.  இங்கு யோக நிலையில் உள்ள தட்சிணாமூர்த்தி தனியாக காட்சி தருகிறார்.  காசிக்கு ஒப்பாக மூன்று தலங்கள் உள்ளன. ஒன்று உத்தர காசியாகிய மல்லிகார்ச்சுனம். இது ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம். மற்றொன்று மத்திய காசியாகிய மத்தியார்ச்சுனம். இது தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர். மூன்றாவது தட்சிண காசியாகிய புடார்ச்சுனம் எனப்படும் திருப்புடைமருதூர் கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமி திருக்கோவில். இந்த மூன்று ஆலயங்களுக்கு மேலும் ஒரு சிறப்பு இருக்கிறது. அது என்னவெனில், மூன்று ஆலயங்களிலும் தல விருட்சம், மருத மரம் ஆகும்.

கோவில் அமைப்பு : நாறும்பூநாதர் கோவில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ஊருக்கு மேற்கில் ஆற்றின் கிழக்கு கரையோரமாக அமைந்து உள்ள ஆலயத்தின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளையும், பதினோரு கலசங்களையும் கொண்டுள்ளது. பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட கருவறை, விஜயநகர பேரரசர்கள் மற்றும் நாயக்கர்களால் செய்யப்பட்ட திருப்பணி களால் கோவில் சிறப்புற்று விளங்குகிறது. நாறும்பூநாதர் என்பது இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் திருநாமம் ஆகும். இத்தலத்திற்கு திருப்புடைமருதூர் என்ற பெயரோடு மருதபுரம், சுந்தரவனம், புடார்ச்சுனம், தட்சிணகாசி, சுரேந்திரபுரி என்ற பெயர்களும் உள்ளன. தற்போது திருப்புடைமருதூர் என்ற பெயர் மட்டுமே நிலைத்து விட்டது. 

கருவறையில் அம்மை அழகே உருவாக புன்முறுவல் பூத்த முகம் கொண்டு, ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மறுகரத்தை தொங்க விட்டபடியும் சற்றே இடை நெளித்து நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். முற்காலத்தில் பிரம்மனால் கங்கையில் விடப்பட்ட அவரது தண்டம் இத்தலத்தில் ஏறி நின்றதாக கண்டோமல்லவா, அந்த பிரம்ம தண்டமே இங்கு அம்மை சன்னதி நுழைவாயில் அருகில் மேற்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இந்த திருக்கோவிலுக்கு பின்புறம் ஓடும் தாமிரபரணி ஆற்றின் கரையில் தனி சன்னதியில் ஆதியில் மான் ஒளிந்து லிங்கம் வெளிப்பட்ட மருத மரத்தின் அடிப்பகுதி உள்ளது. அதில் இந்திரன் வணங்கிய கோலத்தில் காட்சித்தருகிறார்.

தாமிரபரணி ஆறு உத்திரவாகினியாக வடக்கு நோக்கி பாயும் இடத்தில் ஆற்றின் கிழக்கு கரையில் கிழக்கு திசை நோக்கி அமையப் பெற்றுள்ளது. ஐந்து நிலைகளும், பதினொரு கலசங்களும் கொண்ட ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் முன் மண்டபத்தில், பலிபீடம், நந்தி மற்றும் கொடிமரம் ஆகியவை அமையப் பெற்றுள்ளது. அதனை தாண்டி நடந்தால் இரண்டாம் வாயிலுக்கு தென்புறம் விநாயகர் சன்னதியும், வடபுறம் சுப்பிரமணியர் சன்னதியும் இருக்கிறது. இவர்களை வணங்கி உள்ளே நுழைந்தால் இரண்டாம் வாயிலின் குடவறைக்குள் உள்ள மண்டபத்திற்குள் வடதிசை நோக்கியபடி அதிகார நந்தி காட்சி தருகிறார். அவரை வணங்கி உள்ளே சென்றால் சுவாமி சன்னதியை அடையலாம். சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் தெற்கு நோக்கிய நடராஜர் சன்னதியும், கிழக்கு நோக்கிய உற்சவர் சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. முன் மண்டபத்திற்கு அடுத்து அர்த்தமண்டபம் அதை தாண்டி கருவறை. கருவறையில் சாய்ந்த திருமேனியராக நாறும்பூநாதர் காட்சியளிக்கிறார். சுவாமி சன்னதிக்கு தென்புறம் அம்மை சன்னதி அமையப்பெற்றுள்ளது. அங்கே அர்த்த மணுடபம் தாண்டி கருவறையில் கோமதி அம்மை காட்சியளிக்க அவளுக்கு எதிரே சிறிய நந்தியும் அமையப்பெற்றுள்ளது. உள் திருச்சுற்றில் பரிவார மூர்த்திகளாக சூரியன், பிரம்ம தண்டம், சூரதேவர், நால்வர், சப்தகன்னியர், கன்னி மூல விநாயகர், சுவாமி கோஷ்டத்தின் தென் பக்கம் தட்சிணாமூர்த்தி, மேற்கு பக்கம் மகாலட்சுமியுடன் கூடிய மகாவிஷ்ணு, வடக்கு பக்கம் பிரம்மன், உற்சவர் மண்டபம், மகாலட்சுமி, சரசுவதி, சுப்பிரமணியர், சண்டிகேசுவரர், சகஸ்ர லிங்கம், சனீஸ்வரர், புனுகு சபாபதி, பைரவர், சந்திரன் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் காட்சித்தருகிறார்கள். வெளித் திருச்சுற்றில் கன்னி மூல விநாயகர் மற்றும் சுப்பிரமணியர் சன்னதியோடு முன் பக்கம் நவக்கிரக சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. முன் பக்கம் இக்கோவிலை கட்டிய பாண்டிய மன்னனின் ஆளுயர சிற்பமும் உள்ளது. திருக்கோவிலுக்கு வெளியே பின்புறத்தில் தாமிரபரணி ஆற்றின்கரையில் தீர்த்தவாரி படித்துறையும் அமையப்பெற்றுள்ளது.

இந்த கோவிலின் ஐந்து நிலை ராஜகோபுரத்துக்குள் ஏறிச் செல்ல படிகள் உள்ளன. அதன் வழியே ஏறிச் சென்றால் ஒவ்வொரு தளங்களின் சுவர்களிலும் வண்ணமயமான மூலிகை ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் விஜயநகரப் பேரரசின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த சித்திரகூடத்தில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைகளும், சிவபுராணம், விஷ்ணு புராணம், திருவிளையாடல் புராணம், கந்த புராணம், பெரிய புராணம் ஆகியவற்றோடு தலபுராண கதைகளும் ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன. 

தல வரலாறு : ஆதி பிரம்மாவின் மகனாகிய மனு பல சுயம்பு லிங்கங்கள் உள்ள தலங்களுக்கெல்லாம் சென்று வணங்கி வந்த நிலையில் அகத்திய முனிவரின் அருளாணைப்படி இத்தலத்திற்கும் வந்தான். மருத மரத்தின் அடியில் லிங்கமாய் நின்ற சிவபெருமானை கலைமகள், மலைமகள், அலைமகள் ஆகியோர் வழிபடும் காட்சியை தூரத்தில் இருந்து பார்த்த ஆதிமனு தானும் வழிபடுவதற்காக விரைந்து வந்தார். அருகில் வந்ததும் அந்த காட்சி மறைந்ததை கண்டு வருந்திய ஆதிமனு தனது வாளினை மரத்தில் குத்தி தனது தலையை துண்டிக்க முயன்றான். அப்போது மரத்தில் இருந்து ரத்தம் பொங்கியதால் அதிர்ந்து நின்றான்.

அப்போது ‘நிறுத்துக’ என்று அசரீரி ஒலித்தது. உடனே மருத மரத்தின் பொந்தில் இருந்து இறைவன் ஆதிமனுவுக்கு காட்சி கொடுத்தார். சிவபெருமானை வழிபட்ட ஆதிமனு அவ்விடத்தில் இறைவனுக்கு ஆலயம் கட்டுவதற்கு அருள்செய்ய வேண்டும் என்று கேட்டான். இறைவனும் ‘மரத்தின் கீழ்திசையில் சிறிது தொலைவில் அமைந்துள்ள சுயம்பு லிங்கம் இருக்கும் இடத்தில் ஆலயம் எழுப்பி வழிபடுக’ என்று அருள ஆதி மனு அங்கு கோவிலை எழுப்பினான். ஆதிமனு கட்டிய கோவில் காலப்போக்கில் மறைந்து விட்டது. அப்போது களக்காடு பகுதியை ஆட்சி செய்த வீரமார்த்தாண்ட மன்னன் இப்பகுதிக்கு வேட்டைக்கு வந்தான். ஒரு மானை கண்டு தனது அம்பை எய்தான். அப்போது மான் மறைந்து விட்டது. ஆனால் மன்னன் எய்த அம்பு மருத மரத்தின் பொந்தில் குத்தி நிற்க, அங்கே சிவலிங்கத்தை மன்னன் கண்டான். உடனே அந்த இடத்தில் மிகப்பெரிய ஆலயத்தை எழுப்பினான்.

கருவூர் சித்தர் பல்வேறு கோவில்களுக்கு சென்று வணங்கி வருகையில் தாமிரபரணியின் வடக்கரை வழியாக வரும்போது மறுக்கரையில் இக்கோவிலை கண்டார். கோவிலுக்கு செல்ல முடியாதபடி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அங்கு உறையும் இறைவன் பெயர் அறியாத கருவூரார் அங்கிருந்து வரும் மலர்களின் மணத்தை அறிந்து இறைவனை ‘நாறும்பூநாதா’ என சத்தம் போட்டு அழைத்தார். “நாறும்பூநாதா, உன்னை காண முடியாமல் ஆற்றிலே வெள்ளம் போகிறதே, நான் சொல்வது உனக்கு கேட்கிறதா., என்று கேட்க இறைவன் தனது திருமேனியை இடப்பக்கம் சரித்து செவிமடுத்து கேட்க சித்தர், வெள்ளத்தை நிற்கும்படி இறைவனிடம் வேண்ட சித்தருக்கு இறங்கி வெள்ளம் வழிவிட்டு நிற்க இறைவனை வணங்கி கருவூர் சித்தர் அருள் பெற்றதாக வரலாறு தெரிவிக்கிறது.

திருமால், பிரம்மன், இந்திரன் முதலான தேவர்கள், அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டபோது சிலகாலம் மறைந்து இருக்க எண்ணினர். எனவே அதற்காக காசிக்கு ஒப்பான திருத்தலம் ஒன்றை காண்பிக்குமாறு சிவபெருமானை வேண்டினர். இறைவன் பிரம்மனிடம், அவரது தண்டத்தை கங்கையில் இட்டு அது எங்கு சென்று நிற்கின்றதோ, அந்த இடமே சிறந்த இடம் என்று அருளினார். அதன்படி பிரம்மதண்டம் கங்கையில் விடப்பட்டது. திருமால் தனது கருட வாகனத்திலும், பிரம்மன் அன்னப்பறவை மீதும் தொடர்ந்துவர அந்த தண்டம் கடலினை அடைந்து பின்னர் தாமிரபரணி ஆறு கடலில் சங்கமமாகும் இடத்திற்கு வந்து நதியில் புகுந்து எதிர் திசையில் சென்று திருப்புடைமருதூர் கோவிலின் மேற்புறம் வந்து குத்தி நின்றது. பின்னர் தேவர்கள் அனைவரும் கூடி இவ்விடத்தில் பிரம்ம தண்டத்தை பிரதிஷ்டை செய்து இறைவனை வணங்கி வழிபட்டு நின்றனர். இந்த இடமே தற்போது கோவில் உள்ள இடமாகும். மும்மூர்த்திகளும் இத்தலத்திற்கு வந்ததால் இத்தலம் பேறு பெற்ற தலமாக திகழ்கிறது.

இந்த அம்பாள் பெண்களின் நோய்களை தீர்ப்பதில் சிறப்பானவள். பேய் மற்றும் கெட்ட ஆவி பிடித்த பெண்கள், மனநலம் சரியில்லாதவர்கள் அம்பாள் சன்னிதியில் இருந்து தினமும் வழிபட்டால் 21 நாட்களில் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பெண்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்கள் நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும் பாயாசம் வைத்து ஆற்றங்கரையில் நீராடி படித்துறையை கழுவி அதில் வைத்து சாப்பிடுவார்கள். இதை படி பாயாசம் என்பர்.  தைப்பூச திருவிழா இங்கு வெகு சிறப்பாக நடைபெறும். தைப்பூச தீர்த்தவாரியில் கலந்து கொண்டு இத்தலத்து இறைவனை வழிபடுவது மிக சிறப்பாகும். இவ்வாறு வழிபட்டால் ஆண்டு முழுவதும் உடல் நலத்துடன், செல்வ செழிப்பும் கிடைக்கும் என்பது பக்தர் களின் நம்பிக்கையாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் இவைகளில் மேம்பட்ட தட்சிண காசி என்ற திருப்புடைமருதூரில் அமைந்து உள்ள இக்கோவிலுக்கு பக்தர்கள் வந்து தைப்பூச தீர்த்தவாரியில் நீராடி கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் சுவாமியை வழிபடுவோருக்கு இறைவனின் திருவருள் நிச்சயம் கிடைக்கும். இது தவிர மாசி மாத சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை சொக்கப்பனை, மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்களும் வெகு விமரிசையாய் நடைபெறும்.

காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில்  திறந்திருக்கும். 

அருகிலுள்ள விமானதளம் : மதுரை, திருவனந்தபுரம்

அருகிலுள்ள  ரயில் நிலையம்   :  தென்காசி, திருநெல்வேலி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×