அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடையூர்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் பாதையில் உள்ள இத்தலம் திருக்கடையூர் என வழங்கப்படுகிறது. திருக்கடவூர் ரயில் நிலையம் அருகில் உள்ளது.
சுவாமி : அமிர்தகடேசுவரர், அமிர்தலிங்கேசுவரர்
அம்பிகை : அபிராமி அம்மை
தலமரம் : வில்வம், பிஞ்சிலம் (சாதி முல்லை)
தீர்த்தம் : அமிர்த புஷ்கரிணி, மார்க்கண்டேய தீர்த்தம், கால தீர்த்தம்
பதிகம் : திருநாவுக்கரசர் - 3, திருஞானசம்பந்தர் - 1, சுந்தரர் - 1
பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எட்டுத் தலங்களும் அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அட்ட வீரட்டத் தலங்கள் ஒவ்வொன்றுக்கும் விசேஷமான மகிமைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கடையூர் : காலனை சம்கரித்த இடம். இந்தத் தலத்தில் நீண்ட ஆயுளும் நோயற்ற வாழ்க்கையும் பெற ஆயுஷ் ஹோமம் செய்துகொள்வது சிறப்பு. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வைபவங்கள் தினமும் நடைபெறும் தலம். மார்க்கண்டேயனைக் காத்துக் கூற்றுவனை உதைத்த தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும். ஒன்றாகும். இத்தலமே கடவூர் மயானம் எனப்படுகிறது. சிவனின் ஐந்து மயானத் தலங்களில் ஒன்றாகும். ஆதி திருக்கடையூர் என்பதும் இத்தலமேயாகும்
பெயர் காரணம் : புராணகாலத்தில் பாற்கடலையே தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடைந்து அமுதம் எடுத்தனர். அமுதம் எடுக்கும் முன்பு விநாயகரை வழிபடாத காரணத்தால் அவரால் திருடி இத்தலத்தில் மறைத்து வைத்த அந்த அமிர்தகுடமே சிவலிங்கமான காரணத்தால் மூலவருக்கு அமிர்த-கடம் அமிர்தகடேசுவரர் என திருநாமம். அமிர்தகடத்தை மறைத்த அந்த விநாயகர் கள்ள வாரணம் என்று அழைக்கப்படுகிறார்.
திருத்தலச் சிறப்புகள்: மிருகண்டு முனிவரின் அவதாரத்தலம். பாற்கடலை கடைந்து எடுக்கப்பெற்ற அமுதம் இங்கு லிங்கமாக இருப்பதால் திருக்கடவூர் எனப்பட்டது. கடபுரி, வில்வாரண்யம், பிரமாந்திரத்தலம் முதலியன இத்தலத்தின் வேறு பெயர்கள். குங்குலியக் கலய நாயனார், காரிநாயனார் வாழ்ந்து தொண்டாற்றிய பதி. அபிராமி பட்டர் அந்தாதி பாடி அற்புதம் விளைத்த தலம். மூவர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
விஷ்ணுவின் தியானத்தில் உண்டான சக்தியே அபிராமி அம்மையாக திகழ்கிறது. சிவபக்திக்காக தனது பக்தன் மார்கண்டேயனுக்கு என்றும் 16 வயது சிரஞ்சீவி அளித்து உலகிற்கு எடுத்துக்காட்டாக தனது இடது பாதத்தினால் எமனையே உதைத்து சம்ஹாரம் செய்தும் பூமாதேவிக்காக எமனுக்கு அனுக்ரஹம் செய்த சிறப்புத்தலம்.
தனது பக்தன் ஒருவருக்காக தை அமாவாசை அன்று முழு பெளர்ணமியாக்கி அபிராமி அந்தாதி அருளச் செய்த சிறப்புடையது. 63 நாயன்மார்களில் குங்குலிய நாயனார் காரிநாயனார் சிவத்தொண்டு ஆற்றி அருள் பெற்ற தலம்.
கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தில் 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெறுவது மிகச் சிறப்புடையது. சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹாரப் பெருவிழாவும் சித்ராபெளர்ணமியில் தீர்த்த வைபவமும் இத்தலத்தில் நடைபெறும்.
இத்தலம் எட்டு வீரட்டத்தலங்களுள் சிவபெருமான் எமனை உதைத்து மார்க்கண்டேயருக்கு அருள் புரிந்த வீரட்டத்தலம். மார்க்கண்டேயர் வழிபட்ட தலங்களுள் இது 108-வது தலம். அருகில் உள்ள திருக்கடவூர் மயானம் 107-வது தலம். பூமிதேவி பூசித்த பதி.
மணிவிழா என்கிற 60-ம் கல்யாணம் (சஷ்டியப்தபூர்த்தி 60-வயது பூர்த்தி) பீமரதசாந்தி (70-வயது பூர்த்தி) பவளவிழா (75-வயது பூர்த்தி) சதாபிஷேகம் (80-வயது பூர்த்தி) முதலியனவும் சாந்தி வேள்வி முதலியனவும் இத்தலத்தில் செய்வதற்கு பல மாதங்களுக்கு முன்னே கோயினுள் இடத்தை பதிவு செய்து விழாவினை சிறப்பாக நடத்துகின்றனர்.
சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். இத்தலத்தில் விநாயகர், முருகர், மார்க்கண்டேசுவரர், நாகநாதேசுவரர், கஜலட்சுமி, நடராஜர், பஞ்சலிங்கங்கள், சந்தான ஆசாரியர்கள், குங்கிலியக் கலய நாயனார், வீரபத்திரர், அபிராமி, அசுவினி தேவர், அனுமன், கால சம்ஹார மூர்த்தி முதலிய சந்நிதி உள்ளன. இங்கு நவக்கிரக சந்நிதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏழு கன்னியர், துர்க்கை முதலானோர் இத்தலத்தில் வழிபட்டுள்ளார்கள். தன் மனைவியின் தாலியை விற்று இறைத்தொண்டிற்குக் குங்கிலியப் பொதி வாங்கி அரும்பெரும் திருப்பணியாற்றிய குங்கிலியக் கலய நாயனார் வாழ்ந்த தலமிது. மேலும் திருப்பனந்தாளில் அரசனது சேனையாலும் நிமிர்த்த முடியாத லிங்கத்திருவுரு இவரது அளப்பற்ற அன்பால் நிமிர்ந்தது. தமிழகத்து அரசர்களிடம் அவர் மகிழும்படி உரைத்துப் பெரும் பொருள் பெற்று அதைக்கொண்டு சிவாலயங்கள் கட்டுவித்தும், பல்வேறு திருப்பணிகள் செய்து தொண்டாற்றிய காரியநாயனார் வாழ்ந்த தலம் இத்தலமாகும்.
கார்த்திகை மாதம் சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். அச்சமயத்தில் மட்டுமே இறைவன் திருமேனியை வஸ்திரம் ஏதுமின்றி தரிசிக்க முடியும். காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் செப்புச் சிலையில் ஏற்பட்ட பிளவும் நன்றாக தெரியும். அதே போல் முன்மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை அமைந்துள்ளது இந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு 11 முறை மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. அவ்வாறு செய்யப்படும்போது இறைவனின் திருமேனி அழகினை கண்டு களிக்க முடியும்.
புராண வரலாறு : பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு ஈசனை வழிபட்டார். சிவபெருமான் வில்வ விதை ஒன்றை கொடுத்து அவ்விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவிக்கிறார். பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப்பார்த்து திருக்கடவூரில் முளை விடக்கண்டார். இதனால் இத்தலம் 'வில்வவனம்' என்று பெயர் பெற்றது.
தலவரலாறு : மிருகண்டு முனிவர் அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி நீண்ட ஆயுளும், துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா? அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் நற்குணங்கள் நிறைந்த தலைசிறந்த மகன் வேண்டுமா? என்று கேட்க மிருகண்டு தம்பதியர் நற்குணங்கள் நிறைந்த மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் மிகுந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் நாள் நெருங்கியது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக்கொண்டார். எமனும் பாசக்கயிற்றை லிங்கத்தோடு சேர்த்து வீசினான். இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனைக் சூலாயுதத்தால் கொன்று காலனுக்குக் காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்ணு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்பித்து அருள் புரிந்தார் என்று தலபுராணம் கூறுகிறது.
கோயில் அமைப்பு : மூன்று திருச்சுற்றுகள் கொண்ட ஆலயம் நகரின் நடுவே மேற்கு நோக்கி உள்ளது. அளப்பரிய சிறப்புகளுடன் அழகுடன் திகழும் இக்கோயில் ஏழுநிலை இராஜகோபுரத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. ராஜகோபுரத்தில் பாற்கடலைக் கடைந்த காட்சி ஆனை உரி போர்த்த தேவர் சம்பந்தரின் சிவிகையை அப்பர் தாங்குவது, சிவபாத இருதயரின் தோளில் சம்பந்தர் முதலிய சிற்பங்கள் காணவேண்டியவை.
அபிராமி அன்னையை துதித்து அன்னையின் பெயரையே தன் பெயராக்கி கொண்ட அபிராமி பட்டருக்கு அருள் செய்து அதன் வழி உலகுக்கு 'அபிராமி அந்தாதி' கிடைக்கச் செய்த பெருமாட்டி அன்னை அபிராமி ஆகும்.
முதல் திருச்சுற்றில் இடப்புறம் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது அதன் கீழ்பால் நந்தவனம் உள்ளது. கிழக்கு கோபுரத்தின் அருகில் திருக்குளம் உள்ளது. இத்திருச்சுற்றிலேயே தென்மேற்கு மூலையில் இரண்டு நிலை கோபுரமும், ஒரு திருச்சுற்றும் கொண்ட அன்னை அபிராமியின் திருமுன் உள்ளது. அம்மன் கருவறைக்கு வடபுறத்தில் சண்டிகேசுவரர் திருமுன் உள்ளது.
ஐந்து நிலை கோபுரம் அணி செய்யும் இரண்டாம் திருச்சுற்றின் இடதுபுறம் அலங்கார மண்டபமும், ஈசான திசையில் யாகசாலையும் அமைந்துள்ளது. மூன்றாம் திருச்சுற்றை ஒருநிலை கோபுரம் அணி செய்கிறது. வாயிலுக்குத் தென்புறம் சிவனுமைமுருகு, போகேசுவரி, முருகன் ஆகிய திருவடிவங்களும் வடபுறம் மார்க்கண்டேசுவரர் லிங்கத்திருவுருவம் உள்ளது. திருச்சுற்றின் வடபுறத்தில் ஆடல் வல்லான் திருமுன்னும், பைரவர் திருவுருவும், தென்புறத்தில் குங்கிலியக் கலய நாயனார், குங்கிலியம் விற்ற வணிகர், ஏழு கன்னியர், வீரபத்திரர், பிள்ளையார், எமன், அறுபத்துமூன்று நாயன்மார்கள் ஆகியோரின் திருமேனிகளும் உள்ளன. கருவறையில் அமர்தகடேசுவரரின் லிங்கத் திருவுருவம் உள்ளது. மரகதலிங்கம் ஒன்று தனியாக பாதுகாப்பாக பெட்டியில் உள்ளது. கருவறை விமானம் எட்டுப்பட்டை கொண்டது. கருவறையை ஒட்டியுள்ள மகா மண்டபத்தில் காலகாலன் அன்னையோடு செப்பு வடிவில் உள்ளான். காலனைக் காலால் காய்ந்த பெம்மான் தெற்கு முகமாக எழுந்தருளியுள்ளார். இவருக்கு எதிரே இறைவன் அருள்பெற்ற கூற்றுவனின் திருவுரு உள்ளது. இக்கோவிலில் நவகோள்கள் இல்லை. எமதேவனையே தீர்க்கும் இறைவன் இங்கிருப்பதால் ஏனைய துன்பங்கள் தீர வழிபடப்பெறும் நவகிரகங்கள் தேவையில்லை என்பதுதான் இதற்கு காரணம்.
தினந்தோறும் காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருக்கடவூர்
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு