திருவிற்குடி, வீரட்டானேஸ்வரர் கோவில்
திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலத்திலிருந்து தென்கிழக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை - பேரளம் ரயில் பாதையில் விற்குடி ரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் உள்ளது. திருவாரூரிலிருந்து வடக்கே 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
சுவாமி : வீரட்டானேசுவரர்
அம்பிகை : ஏலவார்குழலம்மை, பரிமள நாயகி
தலமரம் : துளசி
தீர்த்தம் : சக்கர தீர்த்தம், சங்கு தீர்த்தம்
பதிகம் : திருஞானசம்பந்தர் - 1
பிரம்மா, அந்தகாசுரன், திரிபுர அசுரர்கள், தட்சன், ஜலந்தரன், மன்மதன், காலன், கஜமுகாசுரன் ஆகியோரின் ஆணவத்தை அடக்கி, சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்ட எட்டுத் தலங்களும் அட்ட வீரட்டான தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அட்ட வீரட்டத் தலங்கள் ஒவ்வொன்றுக்கும் விசேஷமான மகிமைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
திருவிற்குடி : ஜலந்தரனை வதம் செய்த இடம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள சிவத்தலமாகும். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார். முன்னோர் வழிபாட்டில் ஏற்பட்ட தோஷங்களை நீக்கும் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது திருவிற்குடி. வீடு கட்டுவதில் பிரச்னை உள்ளவர்கள் இங்கிருந்து கல் எடுத்துச்சென்று, கட்டுமானத்தில் பயன்படுத்தினால் தடைகள் அகலும்.
திருத்தலச் சிறப்புகள்: சிவபெருமான் புரிந்த எட்டு வீரட்டத் தலங்களுள் சலந்தராசுரனை அழித்த தலமாக இத்திருத்தலம் விளங்குகிறது. ஜலந்திரன் சம்ஹாரம் நடந்த இடமும் இதுவே. திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலம்.
சுவாமி மேற்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள் பாலிக்கின்றனர். சலந்தாசுரன் மனைவி விருந்தையைத் துளசியாக ஏற்ற தலம். இங்கு ஜலந்தரவத மூர்த்தி சிறப்பு மூர்த்தியாவார். இங்கு விநாயகர், முருகர், பைரவர், சனிபகவான், நவக்கிரகங்கள், சூரியன், சந்திரன், பிடாரி, நடராஜர்சபை, பிரமன், திருமால், தட்சிணாமூர்த்தி, சண்டேசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.
தலவரலாறு : உமையோடு சிவபெருமான் கயிலை மலையில் வீற்றிருந்தார். இந்திரன் தானே பெரியவன் என்ற ஆணவத்தோடு சிவபெருமானைக் காணச் சென்றான். இந்திரனின் ஆணவத்தை அடக்க பரம்பொருள் ஒரு வாயிற்காப்போனாக உருமாறி இந்திரன் வரும் வழியில் நின்று கொண்டிருந்தார். இந்திரன் கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் மௌனமாக இருந்தார். கோபம் கொண்ட இந்திரன் அவரைத் தன் வச்சிராயுதத்தால் தாக்க வச்சிராயுதம் பொடிப்பொடியானது. தன் உண்மை உருக்கொண்டு சிவபெருமான் கோபத்துடன் தோன்ற இந்திரன் அஞ்சி தன் பிழையை பொறுத்தருள வேண்டினான். கருணைக் கடலான பரம்பொருள் இந்திரனை மன்னித்துத் தனது கோபக் கணலைக் கடலில் எறிந்துவிட்டு கைலாயம் சென்றார்.
கடலில் விழுந்த கோபக்கனல் ஒரு குழந்தையாக உருக்கொண்டது. நீரால் வளர்க்கப்பட்டமையால் பிரம்மன் அவனுக்குச் சலந்தரன் எனப் பெயரிட்டான். வாலிபப் பருவம் அடைந்தபின் அசுரத் தச்சன் மயனால் சாலந்தரம் என்ற நகரை உண்டாக்கி காலநேமி என்ற அவுணன் மகள் விருந்தையை மணந்துகொண்டு சலந்தரன் இன்பமாக வாழ்ந்து வந்தான். பிரம்மனிடம் பல வரங்கள் பெற்ற சலந்தாசுரன் தந்து வரத்தின் பலத்தாலும், உடல் வலிமையாலும், செருக்குற்று தேவர்களுக்கு தொல்லைகள் பல கொடுத்தான். தேவர்கள் கயிலை மலையை அடைந்து சிவபெருமானிடம் சரண் அடைந்தனர். சலந்தாசுரன் போர்க்கோலம் பூண்டு கயிலை மலையை அடைந்தான். சிவபெருமான் ஒரு கிழ அந்தணர் வேடத்தில் சலந்தாசுரன் முன்பு தோன்றினார். சலந்தாசுரனிடம் தான் ஒரு சிறிய செயலை அவனால் செய்ய முடியுமா என்று கேட்டார். தன்னால் எதையும் சாதிக்கமுடியும் என்ற செருக்குடன் சலந்தாசுரன் கூறினான். சிவபெருமான் தனது காற் பெருவிரலால் மண்ணில் ஒரு வட்டமிட்டு அந்த வட்டத்தைப் பெயர்த்து உன் தலைமேல் தாங்கி நில் என்று சலந்தாசுரனிடம் கூறினார். அவனும் பெரு முயற்சிக்குப் பின் அந்த வட்டத்தை பெயர்த்தெடுத்து தன் தலைமேல் தாங்கினான். அந்த வட்டச் சக்கரம் சலந்தாசுரன் உடலை இருக்கூறாகப் பிளந்துவிட்டு இறைவனின் கரத்தில் அமர்ந்தது. கயிலையை நோக்கிச் சென்ற தன் கணவன் திரும்பி வராமையால் கவலையோடு விருந்தை காத்திருந்தாள். இறந்த சலந்தரனின் மனைவியான விருந்தையைத் திருமால் இச்சித்து சலந்தரனின் உடலில் தான் புகுந்து அவளுடன் இன்புற்று இருந்தார். இவ்வஞ்சகத்தைப் பின்னால் உணர்ந்த விருந்தை மனம் வருந்தி தீப்புகுந்து உயிர் நீத்தாள். விருந்தையின் பிரிவால் வருந்திய திருமால் அவள் வெந்து தீய்ந்த இடத்திலேயே வீழந்து புரள்வதை உணர்ந்த பார்வதி தேவி தனது இடக்கைச் சிறுவிரலிலிருந்து ஒரு விதையை உண்டாக்கி சிவபெருமானிடம் கொடுத்தார். அவர் அதனை பிரம்மாவிடம் கொடுக்க, விருந்தை இறந்த இடத்தில் அவ்விதையை வைத்து நீர் வார்க்க, அங்கு துளசிச் செடி உண்டாயிற்று. அத்துளசியை தன்மேல் அணிந்து மையல் தீர்த்த பெருமாள் மீண்டும் தன் பழைய நிலையை அடைந்தார் எனக் கூறப்படுகிறது. சலந்தாசுரன் என்பவனை சக்கரத்தால் சிவபெருமான் அழித்த இத்தலம் அஷ்ட வீரட்டத்தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.
கோயில் அமைப்பு : இத்தலத்தின் ராஜகோபுரம் 5 நிலைகளை கொண்டு மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயில் எதிரில் சங்கு தீர்த்தம் அமைந்துள்ளது. சக்கரதீர்த்தம் கோயில் பின்புறமாக அமைந்துள்ளது. சங்கு தீர்த்தத்தின் கீழ்க்கரையில் தென்புறமாக கோயிலை நோக்கி தனி விநாயகர் ஆலயம் உள்ளது. கோபுர வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் எதிரில் வலப்புறம் உள்ள முதல் தூணில் அழகான நாகலிங்கச் சிற்பம் உள்ளது. வெளிப் பிரகாரத்தில் விருந்தையைத் திருமாலுக்காக இறைவன் துளசியாக எழுப்பிய இடமும் திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. உள் திருச்சுற்றில் திருமகள் துணைவியருடன் சுப்பிரமணியர், பைரவர், சனி பகவான், ஒன்பான் கோள்கள் மற்றும் சூரியன் திருமுன்களும், பள்ளியறையும், ஞானத்தீர்த்தம் என்னும் கிணறும் உள்ளன. கருவறையில் லிங்கத்திருவுருவில் வீரட்டநாதர் எழுந்தருளியுள்ளார். கோட்ட தெய்வங்களாக துர்க்கை, பிரம்மன், திருமால், ஆலமர்செல்வன், பிள்ளையார் ஆகியோரின் திருவுருவங்கள் உள்ளன. அன்னையின் திருமுன் தெற்கு நோக்கி உள்ளது. அம்பிகையின் திருப்பெயர் ஏலவார்குழலி என்பதாகும். அன்னையின் திருமுன்னிற்கு எதிரில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரு இராசிகளும் உரிய கட்டமைப்பில் அமைக்கப்பட்டுள்ளன.
திருமுழுக்கு நீர் வெளிவரும் கோமுகம், ஒரு பெண் தாங்குவது போன்ற அமைப்பில் உள்ளது மண்டபத்தின் இடப்பால் ஆடல்வல்லானின் அரங்கம் உள்ளது. எதிரில் வாயிலும், சாளரமும் உள்ளன. பக்கத்தில் திருவுலாத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. கருவறையின் முன் உளள முகமண்டபத்தில் தெற்கு நோக்கி சலந்தரனைத் கடிந்த பெம்மானின் அழகான ஐம்பொன் திருமேனி உள்ளது. சிக்கலுக்கு சிங்காரவேலர் ஏற்றமளிப்பது போலவும், வைத்தீசுவரன் கோயிலுக்கு முத்துக்குமாரர் உயர்வு அளிப்பது போலவும் இத்தலத்தில் திருவுலாத் திருமேனியாகச் சலந்தரனைத் கடிந்த பெம்மான் விளங்குகிறார்.
சலந்திரனைத் கடிந்த பெம்மானின் வடிவம் பன்னிரு கைகளில் மானும், மழுவும் கொண்டு முன் வலக்கையில் சக்கரம் ஏந்தி, முன் இடக்கை மேல் நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இந்த வடிவைச் சுற்றி திருவாசி அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலுக்குப் பின்புறம் கிழக்கு நோக்கி மற்றொரு கோயில் உள்ளது. இது 'திருமயானேசுவரர் கோயில்' ஆகும். சலந்தரனின் மனைவி விருந்தை உயிர் நீத்த இடமாக இது கருதப்படுவதால் இங்குள்ள இறைவன் திருமயானேசுவரர் என்று அழைக்கப்படுகிறார். இது விருந்தை மயானம் என்றும் அழைக்கப்படுகிறது. விருந்தையின் சாம்பலில் துளசி முளைத்ததாகக் கூறப்படும் புராண வரலாற்றிற்கேற்ப இங்கு துளிசி மாடம் உள்ளது. இத்தலத்தில் உள்ள முருகன் ஒரு முகமும், நான்கு கரங்களும் கொண்டு, மயில் மீது அமர்ந்து, தன்னுடைய இரு தேவியருடன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார்.
தினந்தோறும் காலை 6.30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருவிற்குடி
பஸ் வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை