தீர்த்தமலை , தீர்த்தகிரீசுவரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் வட்டத்திலுள்ள இவ்வூர் கிருஷ்ணகிரி மற்றும் தா்மபுரி மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ளது. தர்மபுரி நகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில், அரூரில் இருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ளது. தீர்த்தமலை திருவண்ணாமலை மற்றும் தர்மபுரிக்கு இடையே அமைந்துள்ளது.
இறைவன் : தீர்த்தகிரீசுவரர்
இறைவி : வடிவாம்பிகை
தல விருட்சம் : பவளமல்லி மரம்.
தல சிறப்புகள் : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இத்தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். மலைக்கு மேற்கே வாயு தீர்த்தம், வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கில் இந்திர தீர்த்தம் இருக்கிறது. வடக்கே அனுமந்த தீர்த்தமும், தெற்கே எம தீர்த்தமும் உள்ளது. மலையின் உச்சியில் வசிஷ்டர் தீர்த்தம் காணப்படுகிறது. இப்படி தீர்த்தங்களால் சூழப்பட்ட அற்புதமான மலையாக தீர்த்தமலை நோய் தீர்க்கும் தலமாக விளங்குகிறது. இந்த மலை மீது ஏறி வந்து வழிபடும் பக்தர்கள், மூலிகை காற்றை சுவாசிப்பதால் பக்தர்கள், நோய் நொடிகள் நீங்குவதாக சொல்கிறார்கள். தீர்த்தமலையின் உச்சியில் அமைந்துள்ளது இந்த தீர்த்தகிரீஸ்வரர் கோயில். இது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாகவும், தெற்கில் சிவபெருமான் வாழும் இடமாகவும் நம்பப்படுகிறது.
கோவில் அமைப்பு : 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தமலையில் தீர்த்தகிரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கோயில் வளாகத்தில் உள்ள குன்றில் இருந்து 50 அடி உயரத்தில் கால் அங்குள அளவிற்கு ஒரு குழாயின் வழியாக நீர் ஊற்றிக் கொண்டு இருக்கிறது. கோடைக் காலத்திலும் மழைக் காலங்களிலும் ஆண்டு முழுவதும் குழாயின் வழியாக ஊற்றும் நீரின் அளவு மாறுவதில்லை. இப்புனித நீரை மக்கள் தீர்த்தமாக தெளித்துக் கொள்கின்றனர். இம்மலையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் சிறு வண்டுகள் போன்ற உயிரினங்கள் வடிவில் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனர். இம்மலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு 100 சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று இடங்களில் மலைப்பகுதியில் மண் புரட்டி போட்டது போல் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்தது. தீர்த்தமலை யாத்திரையில் அடிவாரக்கோயிலில் இருந்து வனத்துறை தாண்டிய பகுதியில் இடப்புறமாக இந்த ஜடை சாமியார் அருள்பாலிக்கின்றார். கோயில் உள்ள முருகன் மீது அருணகிரிநாதர் நான்கு பாடல்கள் பாடியுள்ளார்.
இக்கோயிலில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன என்றாலும் இவற்றில் பழமையான கல்வெட்டு மேலைக் கங்க மன்னனான மல்லிதேவ மகாராசர் என்ற மன்னன் இந்த இறைவனுக்கு ஆலம்பாடி என்ற சிற்றூரை தானமாக அளித்த கி.பி ஆறாம் நூற்றாண்டு கல்வெட்டே பழமையானதாக உள்ளதால் இக்கோயில் ஆறாம் நூற்றாண்டுக்கு முற்பட்டக் கோயிலாகும். இதுவே தரும்புரி மாவட்டத்தில் தற்போது உள்ள கோயில்களில் பழமையானது ஆகும். தீர்த்தகிரிப் புராணம் கி.பி 16 ஆம் நூற்றாண்டில் சைவ எல்லப்ப நாவலர் என்பவரால் எழுதப்பட்டது. இராம தீர்த்தம் ஒரு பாறையின் உச்சியில் இருந்து எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் கோடைக் காலத்திலும் இந்த தீர்த்தம் கொட்டுவது நின்றதில்லை என்பது இதன் சிறப்பு. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, கம்பீரமாக காட்சியளிக்கும் தீர்த்தமலை கோயில், சோழர் மற்றும் பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதற்கான பல கல்வெட்டுக்கள் இங்கு காணப்படுகின்றன. ராஜேந்திரச் சோழன் இந்த கோயிலுக்கு அடிக்கடி வருவாராம். அவர் கையாலே சிவபூசை செய்வார் என்றும் கல்வெட்டுக்களிலிருந்து அறிய முடிகிறது. இவர் மட்டுமின்றி அந்த கால புலவர் அருனகிரிநாதர் உட்பட பல்வேறு புலவர்பெருமக்கள் வந்து பாடிய தலமாக இது அறியப்படுகிறது.
தல வரலாறு : வனவாசத்தின் போது ராமனோடு வனத்தில் இருந்த சீதையை, மாய வேலைகள் செய்து கடத்திச் சென்றான் ராவணன். சீதையை மீட்பதற்காக ராவணனுடன் யுத்தம் செய்தார் ராமபிரான். அந்த யுத்தத்தில் ராவணன் வதம் செய்யப்பட்டான். இதையடுத்து ராமர் அயோத்தி திரும்பினார். வழியில் இந்த தலத்திற்கு வந்தபோது, சிவபூஜை செய்ய விரும்பினார். பூஜைக்குத் தேவையான தீர்த்தத்தை காசியில் இருந்து கொண்டுவரும்படி அனுமனிடம் ராமபிரான் கூறினார். ஆனால் அனுமன் வந்து சேருவதற்கு கால தாமதம் ஆனது. எனவே ராமர், தனது பாணத்தை எடுத்து அங்கிருந்த மலை மீது விட்டார். ராமர் விட்ட பாணம், பாறையில் பட்ட இடத்தில் இருந்து தீர்த்தம் உண்டாகியது. அந்த தீர்த்தத்தைக் கொண்டு ராமர், சிவபூஜையை நடத்தி முடித்தார். ராமரின் பாணத்தால் உருவானது என்பதால் இதற்கு ‘ராம தீர்த்தம்’ என்று பெயர்.
இதற்கிடையில் காசியில் இருந்து அனுமனும் தீர்த்தம் கொண்டு வந்து சேர்ந்து விட்டார். தான் வருவதற்குள் ராமபிரான், தீர்த்தம் உண்டாக்கி பூஜையை நிறைவு செய்து விட்டதால், கோபம் கொண்ட அனுமன் தான் கொண்டு வந்த தீர்த்தத்தை வீசி எறிந்தார். அது இத்தலத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் கரையில் விழுந்தது. அது ‘அனுமந்த தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. அனுமந்த தீர்த்தத்தில் குளித்து விட்டு, இங்குள்ள ராம தீர்த்தத்தில் குளித்தால் பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ராமபிரான், இரண்டு இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்திருக்கிறார். ஒன்று பெரும் சிறப்புக்குரிய ராமேஸ்வரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்து காணப்படும் இந்த தீர்த்தமலை. ராம தீர்த்தத்தில் நீராடி தீர்த்தகிரீஸ்வரரை வழிபாடு செய்தால் மன நிம்மதி கிடைக்கும். மேலும் உடல்ரீதியான எந்த வித வியாதியாக இருப்பினும் அவை தீரும் என்கிறார்கள். இது தவிர குழந்தை வரம் மற்றும் குடும்ப ஒற்றுமை, சகல ஐஸ்வரியம் கிடைக்கவும், கடன் தொல்லை தீர்வதற்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பலரும் வந்து பிரார்த்தனை செய்து செல்கிறார்கள். மொத்தத்தில் இத்தல இறைவனை வழிபாடு செய்தால் எல்லா நலன்களும் கிடைக்கும்.
இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்பாளின் திரு நாமம் ‘வடிவாம்பிகை’ என்பதாகும். இத்தல விநாயகர் ‘சித்தி விநாயகர்’ என்ற பெயருடன் அருள்பாலித்து வருகிறார். இந்த தல விருட்சத்தில் திருமணம் நடைபெற வேண்டும் என்ற பிரார்த்தனையை முன் வைப்பவர்கள், மஞ்சள் கயிறு கட்டி வேண்டிக்கொள்கின்றனர். குழந்தை வரம் வேண்டுவோர், இங்குள்ள பெரிய புற்றை வழி படுவதோ, தொட்டில் கட்டி வேண்டுதல் வைக்கின்றனர். மேலும் நாகப்புற்றை வணங்கினால் நாகதோஷம் நீங்குவதாகவும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய் தீர்க்கும் அற்புதமான திருத்தலம் தான் தீர்த்தமலை. இங்குள்ள பற்பல தீர்த்தங்களில் நீராடுவதன் மூலம், மனிதர்களுக்கு ஏற்படும் பல வகையான நோய்கள் நீங்குகின்றன. அகத்தியருக்கு ஒரு முறை தீராத வயிற்றுவலி ஏற்பட்டது. அப்போது அகத்தியரின் வயிற்றுவலியைப் போக்கிய தலம் என்ற பெருமையையும் திருத்தலம் பெற்றுள்ளது. தங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் இத்தல ஆலயத்திற்கு வந்து, முடி எடுத்தல், காது குத்துதல் ஆகிய நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். தவிர சுவாமிக்கு தேன், நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீறு, அரிசி மாவு, பழ வகைகள் போன்றவற்றால் அபிஷேகமும் செய்கிறார்கள். ஒரு சிலர் தங்களின் வசதிக்கேற்ப சொர்ணாபிஷேகம் செய்வதும் உண்டு. இறைவனுக்கு வஸ்திரமும், அம்பாளுக்கு புடவையும் சாத்தி வழிபடும் பக்தர்களும் இருக்கிறார்கள். ஒரு சில பக்தர்கள், தங்களது நேர்த்திக்கடனை அன்னதானமாக வழங்குகிறார்கள்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : பெங்களூர், சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : சேலம், ஜோலார்பேட்டை, குப்பம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை