கன்னிவாடி, சோமலிங்க சுவாமி
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திண்டுக்கல் மாவட்டத்தின் சோமலிங்கபுரம் என்ற கிராமத்தில் திண்டுக்கல் நகரத்திலிருந்து 22 கி.மீ தொலைவில், திண்டுகல்லில் - ஓட்டன்சத்திரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 30 கி.மீ தெலைவில் அமைந்துள்ளது.
இறைவன் : சோமலிங்க சுவாமி
தல தீர்த்தம் : வேதி தீர்த்தம்
தல சிறப்புகள் : இந்த திருத்தலம் ஹரிகேச பர்வதம் என்ற மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையின் அமைப்பே சிவலிங்கம் போன்றும் ஆதி சேஷன் விஷ்ணுவிற்கு குடைபிடித்து நிற்பது போன்றும் காட்சி தருவது சிறப்பு. மெய்கண்ட சித்தர், வாழையானந்த சித்தர், குண்டலினி சித்தர், முந்தானந்த சித்தர் ஆகிய நான்கு சித்தர்களும் இந்த மலை அடிவாரத்தில் தங்களது தவ வலிமை அதிகரிக்க சிவபெருமானை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தனர். இவர்கள் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி பிரதிஷ்டை செய்து தவம் செய்ய சிவபெருமான் தோன்றி அவர்களின் வேண்டுகோளை ஏற்று அருள்பாலித்து இங்கேயே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருக்கு சோமலிங்க சுவாமி என்று அழைக்கலாயினர். இந்த நிகழ்வுகள் கோரக்கர் எழுதிய மலைவாகடம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பின்னர் பழனி மலை முருகனுக்கு நவபாஷாண சிலை செய்த போகர் இந்த மலைக்கு வந்து தவம் செய்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
தல வரலாறு : போகர் தனது சீடர்களான கரூவூரார், கொங்கனர் ஆகிய இருவரிடமும் கௌரி பூஜை செய்ய,பெண் வேண்டும் என்றும் அந்த பெண் பத்மினி என்று குணவகை கொண்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். சீடர்கள் இருவரும் அலைந்து தேடிய பின்னர் போகர் கூறியது போன்ற பெண் கிடைக்காததால் அந்த ரக கல் சிலை ஒன்றை கொண்டு வந்து உயிர்ப்பித்து பெண்ணாக போகர் முன்பு நிறுத்தினர். அதை உணர்ந்த போகர் “கல் நீ வாடி” என்று அழைத்து கௌரி பூஜையை நிறைவேற்றினார். “கல் நீ வாடி” என்பதே கன்னிவாடியாக மாறியது என்கின்றனர். எனவே தான் இந்த இடத்திற்கு கன்னிவாடி என்ற பெயர் வந்தது.
கேரளா, மூணாரைச் சேர்ந்த மாதவன் சுவாமிகள் என்பவர் சுமார் 3 வருட காலம் இங்கு தங்கி இந்த திருத்தலத்தின் மகிமைகளையும் அற்புதங்களையும் இந்து அறநிலையத்துறையிடம் ஒப்படைத்தார். இங்கு அகத்தியர் வந்து சென்று உள்ளார். மேலும் அவர் போகருக்கு பழனி மலை முருக பெருமானுக்கு நவபாஷண சிலை வடிப்பதற்கு சில உபாயங்களையும் கூறி சிலை வடிப்பதற்கு உதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.
பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்கிய போகர் தன் சீடர்களான கோரக்கர், கரூவூரார், கொங்கணர் போன்ற சித்தர்களுடன் கன்னிவாடி மலை வந்து கன்னிபூசை செய்துள்ளார். அப்பொழுது, தன் தவ சக்தியால், ஒரு கல்லின் மீது கமண்டல நீரைத் தெளித்து, கல்லுக்கு உயிர் கொடுத்து, கன்னிவாடி.. என எழுப்பி அந்த கன்னிப்பெண்ணை பூசை செய்யத் துவங்கியுள்ளார். பூசையை நிறைவு செய்வதற்கு முன்பு பூமி மாதாவாகிய புவனேசுவரியம்மன் கடும் கோபத்தில் இங்கு தோன்றி, போகருக்கு சாபத்தினை அளித்ததுடன், பூஜையில் இருந்த கன்னிபெண்ணை மீண்டும் கல்லாக மாற்றினாள். சாபம் பெற்ற போகர், தன் சகல சக்தியையும் இழந்து பழுத்த வயோதிக தன்மை அடைந்த நிலையில் தன் சீடர்களுடன் கன்னிவாடி மலை அடிவாரப்பகுதியில் உள்ள தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் இருக்கும் இடத்தில் தவம் செய்துள்ளார். அவர் செய்த தவப்பயனால், அம்மன் தோன்றி சாப நிவர்த்தி கொடுத்தாள். பின்பு போகர் சக்திகிரி (பழநிமலை) சென்று முருகப் பெருமானை வழிபட்டுள்ளார். முருகன் தோன்றி போகரின் சாபத்தை முழுதாக நிவர்த்தி செய்தார். அதன் பிறகு, போகர் மற்ற சித்தர்களுடன் நவபாசாணத்தால் ஆகிய முருகன் சிலையை வடித்துள்ளார்.
கோவில் அமைப்பு : கோவில் உள்ளே வேம்பு, வில்வ மரத்தடியில் விநாயகர் மட்டுமே உள்ளார். இவருக்கு எதிரில் சிவபெருமானின் வாகனமாகிய நந்தி வலது புறம் ஒருகாலும் இடது புறம் 3 கால்களுடன் அருள் தருவது இந்த தலத்தில் மட்டுமே காணக்கூடிய சிறப்பு. அதே போன்று கருவறையில் சிவபெருமானுக்கு எதிரிலும் நந்தி அதே போன்று வலது புறம் ஒரு காலும், இடது புறம் மூன்று கால்களுமாக காட்சி தருகின்றார். இந்த தலத்தின் சிறப்புகளை கன்னி வாடியில் பிரசித்தி பெற்ற டாக்டர்.கிருஷ்ணசாமி இந்த திருத்தலத்தின் சிறப்புகளைப் பற்றி 1985–ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழர் மகாநாட்டில் இது போகர் நவபாஷாணச்சிலை செய்த இடம் தான் என்பதை உறுதிப்படுத்தினார்.
அரிகேசவ பர்வதம், வராககிரி என்று பழைய மலைவாகட நூலில் கூறப்பட்டுள்ள மலைகள் தான் தற்போது கன்னிவாடி மலை, பன்றிமலை என பெயர் பெற்றுள்ளன. இம்மலையின் அற்புத திருக்காட்சியை கண்ட கோரக்க சித்தர் திருவாய் மலர்ந்து அரிகேசபர்வதம் என்று அழைக்க அதுவே இம்மலைக்கு பெயரானது. மலைக்கோவில் , குகைக்கோவில் , தரைக்கோவில் எனும் மூன்று சிறப்பினையும் ஒருங்கே பெற்ற புண்ணிய பூமிதான் சோமலிங்கபுரம்.
பாறையை ஒட்டிய சன்னதியில் இறைவன் காட்சி தருகிறார். இக்கோவிலில் அம்பாள் மற்றும் பிற பரிவார மூர்த்திகள் கிடையாது. கோயில் வளாகத்தில் வேம்பு, வில்வ மரத்தடியில் விநாயகர் மட்டும் இருக்கிறார். விநாயகருக்கு எதிரே தந்தைக்குரிய நந்தி வாகனம் இருப்பது விசேஷமான அமைப்பு. பதினெண் சித்தர்களில் ஒருவராக விளங்கிய போகர் நவபாசனத்தில் பழனி முருகன் சிலையை உருவாக்கிய இடம் இது தான் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும். போகர் நவபாசானத்தை அரைத்த உரல் இங்கு இன்றும் உள்ளது. கோயிலுக்கு அருகில் அகத்தியர் உருவாக்கியதாகக் கருதப்படும் வேதி தீர்த்தம் உள்ளது.
பல மூலிகைகள் கலந்த அற்புத தீர்த்தம் இது. வயிற்று வலி, தீராத நோயால் அவதிப்படுவோர் நிவர்த்திக்காக இந்த தீர்த்தத்தை சிறிது குடித்துவிட்டுச் செல்கின்றனர். சோமலிங்கசுவாமி சன்னதிக்குப் பின்புறம், மெய்கண்டார் தவம் செய்த தீப வடிவ குகை உள்ளது. பாறையில் இயற்கையாக அமைந்த இக்குகை, பார்ப்பதற்கு தீபத்தின் ஒளி சுடர்விட்டு பிரகாசிப்பதைப் போல அமைந்துள்ளது. இங்குதான் மெய்கண்ட சித்தரின் ஜீவ சமாதி உள்ளது என்றும் இவர் பரஞ்சோதி முனிவரின் சீடராக இருந்தவர் என்றும், கன்னிவாடி கிரமத்தில் வாழ்ந்து பல ஆன்மீக பணிகள், சித்த மருத்துவ சேவைகள் செய்து இதே பகுதியில் ஜீவ சமாதியானதாகவும் கூறப்படுகிறது. பக்தர்கள் தங்கள் மனம் ஒரு நிலைப்படவும், சிவன், சித்தர்களின் அருள் கிடைக்கவும் இதற்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்து செல்கின்றனர். மற்ற மூன்று சித்தர்கள் தவம் புரிந்த குகைகள், இந்த மலையின் உச்சிப்பகுதியில் வேறுவேறு இடங்களில் உள்ளது என்று இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
பழமை வாய்ந்த இக்கோவிலில் 1971 ஆம் ஆண்டு இராஜகாளி போகர் பீடம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு அத்தி மரத்தில் ஆன இராஜகாளியம்மன் மூலவர் சிலை நிறுவப்பட்டது. இறுதியாக 1984 ஆம் ஆண்டு கருவறையில் கல்லில் வடிக்கப்பட்ட இராஜகாளியம்மன் சிலை செங்கோலுடன் நிறுவப்பட்டது. இராஜகாளியம்மன் பற்றி போகரின் ஓலைச்சுவடிக் குறிப்பு. போகர் ஓலைச்சுவடிக் குறிப்புகளின் படி மதுராபதி தெய்வம் என்று அறியப்படும் மதுரை காளி, கோவலன் கொலையுண்டது கண்டு பாண்டியன் அரண்மனை நோக்கிச் சென்று அங்கே செங்கோல் ஏந்திய பாண்டியனைக் கண்டாள். மதுராபதியாகிய இராஜகாளியம்மன் பாண்டியன் செங்கோலைத் தொட்டு நீதி கேட்ட போது, பாண்டிய மன்னன் மீனாட்சி சொக்கநாதர் ஆகிய தெய்வங்களின் பெயரை உச்சரித்து அபயம் கேட்டு கூக்குரலிட்டது கேட்டு மீனாட்சியும் சொக்கநாதரும் பாண்டியன் முன் தோன்றினர். இத்தெய்வங்கள் மதுரை காளியுடன் வாதிடத் தொடங்கினர். மதுரை காளி தன கடமையிலிருந்து எவ்வாறு தவறினாள் என்பது வாதம். மதுரை நகரின் காவல் தெய்வம், பாண்டிய வம்சத்தின் குல தெய்வம் ஆகிய இரண்டு பொறுப்புகளை ஏற்றுள்ள மதுரை காளி மதுரை நகரை தீயினின்று காக்கத் தவறியது தான் பிழை என்பது மீனாட்சி சொக்கநாதர் வைத்த வாதம். பாண்டியன் அரண்மனை உள்ளே நுழையும் வரை கண்ணகி மானிடப்பெண். பாண்டிய மன்னன் ஊழ்வினைப் பயனாலும், கண்ணகியின் கற்பின் சக்தியாலும் அவள் காளியாகவே மாறிவிட்டதால் மதுரையை தீயினின்று காக்க இயலவில்லை' என்பது இதற்கு மதுர காளி வைத்தபதில் வாதம். சொக்கனாதனாகிய சிவன் இறுதியாக தொகுத்து சொன்ன தீர்ப்பு என்னவெனில், பாண்டிய மன்னன் தன கடமை தவறி கண்ணகி என்ற கற்புகரசியின் வாழ்வை அழித்தது மட்டுமல்ல தன்னையும் அழித்துக் கொண்டுள்ளான். எனவே அவனுக்கு மறுபிறவி உண்டு. மன்னன் தன கடைசி பிறவியில் காளி கோவில் கட்டி சாப நிவர்த்தி அடைவான். இது காலம் வரை மதுராபதி தெய்வமாகிய நீ குடியிருக்க கோவிலின்றி மதுரை மீனாட்சி கோவில் மேற்கு கோபுரத்தில் துயில் கொள்ள கட்டளையிடுகிறேன், என தீர்ப்பு கூறினார். கடவுளின் தீர்ப்பின்படி துயில் கொண்டிருந்த மதுராபதி அம்மன் சாபநிவர்த்தியாக மகா போகர் தவம் செய்த இடத்தில் அரூப சக்தியாக உள்ளாள்.
இங்கு வந்து வழிபட முன் ஜென்ம பாவங்கள் தீரும் என்பதும் திருமணத் தடை நீங்கும் என்பதும் கணவன்மார்களுக்கு நலமான வாழ்வு கிடைத்து மாங்கல்ய பலன் கிடைக்கும் என்பதும் ஐதீகம். பிரதோஷம், சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், ஆடி அமாவாசை, திருக்கார்த்திகை மற்றும் தமிழ், ஆங்கில வருடப் பிறப்பு, பொங்கல், தீபாவளி, ஆகிய நாட்களிலும் விஷேச பூஜைகள் நடைபெறுகின்றன. இங்குள்ள அகத்தியர் உருவாக்கிய தீர்த்தக் குளமான வேதி ஊற்று, பல மூலிகைகள் சேர்ந்து உள்ளதால் அதைப் பருக சகலநோய்களும் தீரும் என்பது ஐதீகம். பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை, சிவராத்திரி நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கின்றது. திருமணத்தடை, மாங்கல்ய தோஷம், பூர்வஜென்ம தோஷம் நீங்க இங்கு வேண்டிச் செல்கிறார்கள்.
காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திண்டுக்கல், ஓட்டன்சத்திரம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை